news-details
ஆன்மிகம்
அழகைப் பற்றிக் கற்பிப்பது எதிர்நோக்கையே கற்பிப்பதாகும்! எதிர்நோக்கும் கலைஞர்களும் கலாச்சார உலகும்! (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 9)

ஓவியக் கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் கலாச்சார உலகில் பணிபுரிவோருக்கான யூபிலி உரோமை நகரில் 2025, பிப்ரவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் வழி திருத்தந்தை பிரான்சிஸ் புரிதலை, உறவை, மன்னிப்பை, ஒற்றுமையை விதைக்கும் உரையாடல், யாரையும் விலக்காமல் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றைப் பறைசாற்றும் உன்னதக் கருவிகளாகப் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர்களுக்கு நினைவூட்டினார்.

அழகையும் படைப்பாற்றலையும் கொண்டாடுவது சீரிய சிந்தனையைக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் மத்தியில் விதைப்பதற்கும் அவர்களது கலைத்திறமையால் மனுக்குல ஒற்றுமையை உலகிற்குத் தெளிவாகக் காட்டவும், நீதி நிறைச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் வழிகோலும்.

தமிழ்க் கலை உலகில், தமிழ்க் கத்தோலிக்கத் திரு அவையில் இன்று பணிபுரியும் கவிஞர்கள், இலக்கியப் புலமைமிக்கோர், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், சிற்பங்கள் மற்றும் சுரூபங்கள் செய்வோர், பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் இக்காலத் தமிழ் நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், குறும்பட மற்றும் திரைப்படக் கலைஞர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் அறநெறி, கத்தோலிக்கத் திரு அவையின் நற்செய்தி வாழ்வுநெறி இவற்றைத் தங்களின் பல்வேறு தனித்திறமைகள் மூலம் வெளிப்படுத்தும் யாவரும் இக்கொண்டாட்டத்தில் நினைவுகூரப்பட்டனர்.  “கலைஞர்களும் கவிஞர்களும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுமான நீங்கள், இவ்வுலகில் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் யார் என எடுத்தியம்பும் இயேசுவின் புரட்சிகரமான இறைக் கண்ணோட்டத்தை உலகிற்குப் பறைசாற்றும் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அழகை உருவாக்கி உலகிற்கு அளிப்பது மட்டும் உங்கள் பணி என்று இருந்துவிடாதீர்கள். உலகின் பல்வேறு மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பனவற்றின் வரலாற்று மடிப்புகளில் புதைந்திருக்கும் புதைக்கப்பட்டிருக்கும் உண்மையை, நன்மையை, அழகை வெளிப்படுத்துவதும்கூட மனித குலத்திற்கான உங்கள் சேவை என்பதை உணர்ந்திடுங்கள்.

மனித இனம் நேரிய பாதையிலிருந்து தடம் புரண்டுவிடாமல், எதிர்நோக்கு நிறைந்த பார்வையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவது பல்வேறு கலைஞர்களின் கடமையாகும். அதே சமயத்தில் எதிர்நோக்கு எளிதானதோ, மேலோட்டமானதோ, வெறும் கருத்தியல் கொள்கையோ அல்ல என்பதையும் உங்கள் கலைகளில் வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உண்மையான எதிர்நோக்கு மனித வாழ்வின் பல்வேறு நாடகங்களுக்குள்ளேயே பின்னிப் பிணைந்திருக்கிறது என்று அறிந்திடுங்கள்என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “எதிர்நோக்கு என்பது வெறும் புகலிடமன்று; அது பற்றியெரிந்து பட்டொளி வீசும் இறைவார்த்தையை ஒத்த நெருப்புப் போன்றதாகும்என்கிறார்.

எனவேதான் நம்மைவிட மேம்பட்ட அழகு, நமக்குச் சவாலான நம் வலிகள், நம்மை அழைக்கும் உண்மை இவற்றைத் தன்னகத்தே கொண்ட உண்மை கலை எதுவாயினும், அது புறக்கண்களுக்குப் புலப்படாத கடவுளுடன் நாம் ஓர் அக உறவை நாம் உணரும்படி செய்துவிடுகிறது.

எனவே, மறைந்திருக்கும் பிரமாண்டத்தைக் கண்டுபிடித்து, வெளிக்கொணர்ந்து அதை நம் புறக்கண்களும் அகக்கண்களும் காணும்படிச் செய்வதே கலைஞர்களின் பணியாகும். கலை உலகில் பணிபுரிவோர் உலகின் பிரமாண்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றுள் எவையெல்லாம் பயமூட்டி நம்மை மயக்கும் பிரமாண்டங்கள் எனவும், எவையெல்லாம் மனிதத்தை மலரத்தூண்டும் பிரமாண்டங்கள் எனவும் நமக்குக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். கலையுலகிலுள்ள பிரமாண்டங்களில் எவையெல்லாம்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போன்றவைஎனவும், எவையெல்லாம்ஆற்றங்கரையில் நடப்பட்டு மிகுந்த கனிதரும் பழமரங்கள் போன்றவை (திபா 1:3-4) எனவும் நாம் அடையாளம் கண்டுகொள்ளக் கலைத்துறையினர் நமக்கு உதவ வேண்டும்.”

உலகின் பிளவுகளுக்கு மருந்திட்டு ஆற்றும் ஏழைகள், துயருறுவோர், காயமடைந்தோர், சிறையிலிருப்போர், துன்புறுத்தப்படுவோர் மற்றும் அகதிகளின் குரலுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருக்கும் உங்களை, உலகின் மனிதகுலத்தின் அழகைப் பாதுகாக்கும் காவலர்கள் இந்தக் கலைஞர்கள்என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “நாம் வாழும் இவ்வுலகில் புதுப்புது தடுப்புச்சுவர்கள் கட்டப்படுகின்றன; மொழி, கலாச்சார, ஆன்மிக, இன வேறுபாடுகள் ஒன்றையொன்று மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாகக் கருதப்படாமல் பிளவுகளை உருவாக்கும் காரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கலையுலகின் அங்கத்தினர்கள் மனித மனங்களுக்கு ஒளியூட்டி இதமளிக்குமாறு இவ்வேறுபாடுகளுக்கிடையே பாலங்களைக் கட்ட வேண்டும்; இவ்வேறுபாடுகள் ஒன்றையொன்று சந்திக்கவும், உரையாடவும் கலைகள்வழி சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்என்றார்.

மேலும், “கலை ஒரு பகட்டோ அல்லது ஆடம்பரத்தின் வெளிப்பாடோ அல்ல; மாறாக, அது ஓர் ஆன்மிகத் தேவை. கலை நம் அன்றாட வாழ்வின் சூழலிலிருந்து நம்மைப் பிரித்துக் கனவு உலகிற்கு எடுத்துச்செல்வதல்ல; மாறாக, நம் அன்றாட வாழ்வின் சூழலை நாம் இன்னும் அதிக ஆர்வத்தோடு ஏற்று, அதிலுள்ள குறைகளைக் களைய நம்மைத் தூண்டுவது; நம்மை அழைப்பது. அழகைப் பற்றிக் கற்பிப்பது, எதிர்நோக்கையே கற்பிப்பதாகும். எதிர்நோக்கு என்பது ஒருபோதும் நம் வாழ்க்கையின் நாடகங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல; மாறாக, அது நம் அன்றாடப் போராட்டங்கள், வாழ்க்கைத் துன்பங்கள் மற்றும் இக்காலகட்டத்தின் சவால்கள் இவற்றினூடே பின்னிப் பிணைந்திருப்பதுஆகவே, இறைவாக்கினர்களான, திடம் நிறைந்த அறிவாளிகளான, கலாச்சாரத்தைப் படைப்பவர்களான கலைஞர்கள் இவ்வுலகத்திற்குத் தேவை.

புதிய உலகின் தூதர்களாகக் கலைகள் அமைய வேண்டும். தேடலையும், கேள்விகளையும், துணிந்து செயல்படுவதையும் கலைஞர்கள் ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. கலை ஒருபோதும் எளிதல்ல; கலை ஓய்வற்ற ஓர் அமைதியைத் தருகிறது. எதிர்நோக்கு ஒரு மாயையல்ல; அழகு ஒரு கற்பனை வாதமல்ல. கலைத்திறமை ஒருவகை இறையழைத்தல். அவ்வழைத்தலுக்குத் தாராளமாக, அன்புடன், முழுமூச்சுடன் நாமனைவரும் செவிமடுக்க வேண்டும்.

திருத்தந்தையின் இக்கருத்துகளைக் கீழ்க்காணும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்.

கலைத்துறையும் முக்கியமானதென உணர்ந்து, நம் குடும்பங்களிலும் பங்குத் தளங்களிலும் கலைத்துறையில் சாதிக்க விரும்பும் சிறுவர்- சிறுமியர், இளையோர்-இளம்பெண்களை உற்சாகப்படுத்துவோம்.

கிறித்தவப் பள்ளிகளில், பங்குகளில் மனித மாண்பை, ஒற்றுமையைப் படம் பிடித்துக்காட்டும் ஓவியம், நாடகம், நடனம், பாடல், கவிதை, கட்டுரை, சொற்பொழிவு மற்றும் பல கலைகள் வாயிலாக இளம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.

தமிழ் இலக்கியங்களில் புதைந்திருக்கும் மனித மாண்பை வெளிக்கொணர பல்வேறு வகையான போட்டிகளை நடத்துவோம்.

கலைத்துறையினரது படைப்புகளை அவர்களது அனுமதியோடு பயன்படுத்தி, அப்பயன்பாட்டுக்கு ஏற்ற தொகையைப் படைப்பாளிகளுக்குச் சென்றடையச் செய்வோம்.

திரு அவையில் பயன்படுத்தப்படும் பாடல்களில் இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர்களைப் பாடல் புத்தகங்களிலும், தட்டச்சு செய்த தாள்களிலும் குறிப்பிட்டு அவர்களது படைப்பாற்றலை அங்கீகரிப்போம்.