news-details
கவிதை
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கற்பா!

கத்தோலிக்கத்

திரு அவையின்

உரோமை ஆயனே!

 

உலகத் திரு அவையின்

நல் தகப்பனே!

அன்பால் வென்ற

அருள்திருவே!

அகிலத்தை அன்பால்

அணைத்தாயே!

 

கல்வியில் சிறந்திட

வேதியியல் பயின்றவரே !

இறைவன் நிகழ்த்திய

வேதியியல் மாற்றத்தால்

இறையியல்

கற்றுத் தெளிந்தீரே !

வேதியியலும்

இறையியலும் கலந்த

ஒரு படித்தான கலவையாய்

மாற்றம் மண்ணில்

விதைத்தீரே !

 

மரபுகளை உடைத்து

மனிதத்தை வென்றாயே!

மனிதர் வாழ

வழி பல சொன்னாயே!

எளிமையின் வடிவாய்

எளியோரின் தோழனாய்

ஏழ்மை நீக்கச்

சொன்னாயே!

 

புலம்பெயர்வோர்

இடர் நீக்க

போர்கள் இல்லா

பூமி காண

மண்டியிட்டுச் செபித்து

நாடாளுவோரின்

இதயம் திறக்கச் செய்தாயே!

 

வத்திக்கான் தலைவரே

விந்தைகள் நிகழ்த்திய

வித்தகக் குருவே!

உலகாளும் மாந்தரெல்லாம்

உம்முன் பணிந்து நின்றாரே!

ஆசிர் வேண்டி பணிந்தாரே!

 

வெள்ளை ஆடை வேந்தனே!

வேற்றுமை பாரா புனிதனே!

திரு அவையின் தவறுக்கு

தந்தை நிலையில்

பொறுப்பேற்று

ஒப்புரவு பெற்றீரே!

உண்மையை

உரக்கச் சொல்லி

உத்தம குருவாய்

வாழ்ந்தீரே!

 

அன்னை மரியின் அன்பனே

அருள்பணியின் காவலனே

அர்ப்பண வாழ்வை வாழ்ந்தவரே

இளைப்பாறட்டும்

உம் ஆன்மா

இறைவனின் இல்லத்தில்

புனித நிலை காத்த

புண்ணியனே

புனிதராய் உயர்ந்திட

இறையருள்

வேண்டுகிறோம்!