“கடவுளின் இரக்கமே நம் விடுதலையும் மகிழ்ச்சியும் ஆகும். இரக்கத்திற்காகவே நாம் வாழ்கிறோம். இரக்கம் இல்லாத வாழ்க்கையை நாம் நினைத்துப் பார்க்க இயலாது. இரக்கமே நாம் சுவாசிக்கும் காற்று. இரக்கத்திற்கு நாம் வேலியிட முடியாது. நாம் மன்னிக்க வேண்டும், ஏனெனில், நமக்கு மன்னிப்பு தேவை.”
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடைய வாழ்க்கையையும் பணியையும் வரையறுக்கிற ஒற்றைச் சொல் ‘இரக்கம்’ எனலாம். அவருடைய சொற்கள், செயல்கள், பயணங்கள் அனைத்தின் வழியாகத் திரு அவை காயம்பட்டவர்களோடு உடனிருத்தல், மனம் வருந்துவோரை மன்னித்தல், துன்புறுவோருக்காகக் குரல் கொடுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என விரும்பினார். இரக்கம்
என்பது வெறும் உணர்வு அல்ல; மாறாக, பரிவுள்ளம் கொண்ட கிறிஸ்துவை உடைந்துபோன உலகிற்குத் தருகிற செயல் என்பது திருத்தந்தையின் புரிதல்.
இரக்கம் நிறைந்து
தேர்ந்துகொள்ளுதல்
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் ஆயர் பணி விருதுவாக்கு ‘இரக்கம் நிறைந்து வரவேற்று தேர்ந்துகொண்டு’ (இலத்தீன்
மொழியில், ‘மிஸெ ரெந்தோ ஆத்குவே எலிஜெந்தோ’)
என்பதாகும். திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் அழைப்பை மையப்படுத்திய பீட் அவர்களுடைய சிந்தனை வரிகளிலிருந்து இந்த விருதுவாக்கை எடுத்துள்ளார் திருத்தந்தை. ஆண்டவருடைய இரக்கத்தைப் பெற்ற ஒருவர், அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இந்த விருதுவாக்கின் அழைப்பாக இருக்கிறது. “ஆண்டவர் நம்மேல் இரக்கம் காட்டுவதில் சோர்ந்துபோவதில்லை. நாம்தான் அவருடைய இரக்கத்தைத் தேடுவதில் சோர்ந்து போகிறோம்”
என்கிறார் திருத்தந்தை (‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
2013, 3).
இரக்கத்தின் சிறப்பு
யூபிலி
ஆண்டும்
இரக்கத்தின்
தூதர்களும்
இரக்கத்துக்கான
சிறப்பு யூபிலி ஆண்டை (2015-2016) அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், அதற்கான அறிவிப்பு ஆணையில் - ‘இரக்கத்தின் முகம்’
(‘மிஸரிகோர்தியே வுல்துஸ்,’ 2015), “இயேசு கிறிஸ்துவைத் தந்தையுடைய இரக்கத்தின் வாழ்கிற முகம்” என்று மொழிந்தார். உலகில் உள்ள அனைத்து மறைமாவட்ட முதன்மை ஆலயங்களிலும் யூபிலி கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்த திருத்தந்தை, அனைவரும் கடவுளின் இரக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும்,
கடவுளுடைய இரக்கத்தின் அடையாளங்களாகத் திகழுமாறு ஏறக்குறைய 800 இரக்கத்தின் தூதர்களை நியமித்து, உலகமெங்கும் அவர்களை அனுப்பினார். திருத்தூதுப் பீடம் மட்டுமே மன்னிக்கக்கூடிய பாவங்கள் சிலவற்றை மன்னிப்பதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்கியதோடு, இரக்கம் பற்றிய சிறப்பான மறையுரைகளை ஆற்றவும், ஒப்புரவு அருளடையாளம் வழியாக அனைவரும் இறை இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கற்பிக்கவும்
வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எழுத்துகளிலும்
பணியிலும்
‘இரக்கம்’
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுடைய எழுத்துகளிலும் உரைகளிலும் இரக்கம் மையமாக இருந்ததோடு, இரக்கமே அவற்றின் வடிவமாகவும் இருந்தது. ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(2013) என்னும் திருத்தூது ஊக்கவுரை வழியாக, “திரு அவை காயம்பட்டவர்களோடும் அழுக்கானவர்களோடும் உடன் நிற்க வேண்டும்”
(எண் 49) என்று அழைத்தார். நல்ல சமாரியன் (லூக் 10) உவமையின் பின்புலத்தில் வரையப்பட்ட ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (‘ஃப்ரதெல்லி
தூத்தி,’ 2020) என்னும் சுற்றுமடல் அனைவரோடும் பாராட்டப்பட வேண்டிய சகோதரத்துவத்தை எடுத்துரைப்பதுடன், இரக்கம் ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும் என்ற செய்தியையும் தருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பொருத்தமட்டில் இரக்கம் என்பதே நற்செய்தியின் அடிப்படையும் சாரமும் ஆகும். “அவர்
நம்மேல் அன்புகூர்ந்தார்” (‘திலெக்ஷட்
நோஸ்’, 2024) என்னும்
சுற்றுமடல், இயேசுவின் திரு இதயத்தில் பொங்கி வழியும் இரக்கத்தை நோக்கி நம் கண்களைத் திருப்புகிறது.
நீதியில் கனியும்
இரக்கம்:
வலுவற்றோர்
பாதுகாப்பு
இரக்கமும்
நீதியும் இணைந்தே செல்கின்றன என்பது திருத்தந்தையின் புரிதல். ‘ஒடுக்கப்படுவோர்மேல் இரக்கம்’ என்று திருத்தந்தை போதிக்கும் போது, ஒடுக்குபவர்கள் நீதியுடன் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் துணிவுடன் எடுத்துரைத்தார். புலம்பெயர்ந்தோர், வறியோர், போர் மற்றும் ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், வலுவற்ற பெரியவர்கள் ஆகியோருடைய மாண்புக்கும் தன்மதிப்புக்கும் எதிராக இழைக்கப்படும் அனைத்துக் குற்றங்களும் நீதியோடு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திருத்தந்தை உறுதியாக இருந்தார். சிறார் பாதுகாப்புக்கான ஆணைக்குழு அமைத்தார். ‘நீங்கள் உலகுக்கு ஒளியாக இருக்கிறீர்கள்’ (‘வோஸ்
எஸ்திஸ் லுக்ஸ் முன்ந்தி’)
என்னும் ஆணை வழியாக (2019, 2023) சிறாருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனையை உறுதி செய்யுமாறு திரு அவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இரக்கம் என்பது அனைவருக்கும் உரியது என்றாலும், இரக்கத்தின் வழியாகக் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதிலும் திருத்தந்தை உறுதியாக இருந்தார்.
வறியோர்களுக்கான
உலக
நாள்
ஆண்டின்
பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை ‘வறியோர்க்கான உலக நாள்’ என்று கொண்டாட அழைப்பு விடுத்த திருத்தந்தை (2017), ‘இரக்கத்தின் வழியாகவே நீதியான சமூகம் மலரும்’ என்று அறிவித்தார். மேலும், புலம்பெயர்ந்தோர் மேலும் வறியோர் மேலும் காட்டுகிற இரக்கம் நாம் அவர்களுக்குச் செய்யும் பிறரன்புப் பணி அல்ல; மாறாக, அவர்களுக்கு நாம் வழங்கும் நீதி என்றும் எடுத்துரைத்தார். லாம்பேதுஸா கடற்கரையில் புலம்பெயர்ந்தோருக்காக அவர் செலுத்திய அஞ்சலி (2013), வங்கதேச நாட்டில் ரோகிங்கியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்கள் சந்திப்பு ஆகியவற்றின் வழியாக (2017), ‘வறியவர்களின் கண்ணீர் நம் அனைவருடைய கண்ணீராக மாற வேண்டும்’
என்றார்.
காயம்பட்ட உலகிற்குக்
கட்டுப்போடும்
கனிவிரக்கம்
மூன்றாம்
உலகப் போர் சிறிய அளவில் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது
என்று அடிக்கடி மொழிந்த திருத்தந்தை உக்ரைன், காசா, சிரியா, சூடான் ஆகிய இடங்களில் நடைபெறுகிற போர்களுக்கு எதிரான சமயத் தலைவரின் குரலாக அல்லாமல், ஒருவர் மற்றவரை அழிக்கத் துடிக்கும் மானுடத்தின் மனச்சான்றாக நின்றார். போர்கள் ஏற்படுத்தும் துன்பம், கண்ணீர், இழப்பு, இறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஆயுத வியாபாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார். போர்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடித்தார். திருத்தந்தை காட்டுகிற கனிவிரக்கம் அவருடைய இயலாமையில் எழுந்த உணர்வு அல்ல; மாறாக, அது ஓர் இறைவாக்கினருக்குரிய செயல்.
இரக்கம் நம்
வாழ்வாக!
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, அவர் விடுத்த இரக்கத்தின் அழைப்புக்குச் செவிகொடுத்து அதற்கு வாழ்வு தருவதே. நம் குடும்பங்களிலும் பணித்தளங்களிலும் சமூக உறவுகளிலும் கொஞ்சம் அதிகமாக இரக்கம் காட்டுவதே திருத்தந்தை நமக்கு விடுக்கிற அழைப்பு. நாம் கட்டுகிற பெரிய ஆலயங்களும், நாம் நடத்துகிற பெருநிறுவனங்களும் அல்ல; மாறாக, நாம் எளியோருக்குக் காட்டுகிற சின்னஞ்சிறு இரக்கச் செயல்களே நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம், அறிவிக்கிறோம் என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன. இரக்கத்தின் தூதராக நம் நடுவில் வலம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவரையும் இரக்கத்தின் தூதர்களாக அனுப்புகிறார்!