2025, ஏப்ரல் 30-ஆம் நாள் இந்திய அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு நாள். ‘நடைபெறவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்’ என்ற முக்கிய அறிவிப்பை ஒன்றிய பா.ச.க. அரசு வெளியிட்டிருக்கிறது.
காங்கிரஸ்,
தி.மு.க. உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வேளையில், இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றமும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்து
ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த இந்திய மரபு,
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் நின்றுபோனது. 2021-ஆம் ஆண்டுக்கான இப்பணிகள், 2020 ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இந்தப் பணி தள்ளி வைக்கப்பட்டு, இன்றுவரை அது தொடங்கப்படாமலே கடந்து வருகிறது.
இந்திய
நாட்டின் சாபக்கேடு சாதிய அமைப்பு. ஒரே இயல்புள்ள தனித்த ஒரு கூட்டத்தின் உருவாக்கமே இந்தச் சாதி என்னும் ‘சதி.’ சமூகத்தைச்
சீரழிக்க வந்த இந்தச் சாதிய அழுக்கு, சனாதனத் தர்மத்தின் சாதுரியமான நகர்வுகளால் சாபமாகவே இந்திய மண்ணில் தொடர்கிறது.
இங்கு
‘சாதிக்குச் சாவில்லையோ?’ என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் எண்ணத்திலும் தொக்கி நிற்கிறது; இங்கே வர்க்க வேற்றுமையில் சாதிச் சாக்கடை சமூகமெங்கும் நாற்றமடிக்கிறது. சாதிய ஒழிப்பு முன்னெடுப்புகள் நிகழ்ந்தாலும், முற்றிலும் அதை ஒழிப்பது இங்குச் சாத்தியமானதாகத் தென்படவில்லை!
சாதிய
வேற்றுமையால் மனித மாண்பு அடியோடு சூறையாடப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனையளிக்கிறது. துடைத்து எறியப்பட வேண்டிய இந்த வர்க்கக் கட்டமைப்பு, தூக்கி நிறுத்தப்படுவதை என்னவென்று சொல்வது?
ஆயினும்,
இந்த மண்ணில் தந்திரக் கூட்டத்தின் சந்ததியினர் ஒருபுறம் எல்லாம் பெற்று இன்புற்று இருப்பதையும், மறுபுறம் ஏதுமின்றி ஒரு கூட்டம் ஏமாந்து நிற்பதையும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வது?
அடிமை
இந்தியாவில் விடியல் விரவி வரும் வேளையில், சாமானிய மக்கள் கண் விழிக்கும் கணப்பொழுதில், ஒரு சாரார் மட்டும் விழிகளை விசாலமாக்கிக் கொண்டார்கள். பதவிகளை அவர்கள் பறித்துக் கொண்டதால், ஒடுக்கப்பட்டவரில் ஒருவர் கூட அரியணையை அலங்கரிக்க இயலவில்லை. அத்தகைய சூழலில் எழுந்ததுதான் சாதிய அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்த சிந்தனைகள்.
எந்த
நாட்டிலும் கல்வித் துறையிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஆனால், இங்கு மட்டும் அது நிகழ்கிறது; காரணம், இங்குதானே வர்ணாசிரமம் வடிவெடுத்து நிற்கிறது; சனாதனம் சந்தி
வரை வீறு கொண்டு விளைகிறது! மதம், அமைப்பு, தத்துவம், சட்டம், சமூகம் எனப் பல நிலைகளில் இங்குதானே
சமூகம் ‘மாற்றம்’ காண முடியாத வகையில் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது!
இந்திய
அரசியல், சமூகச் சூழலில் ஒன்றை மட்டும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்னும் இலக்கை அடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இங்கு இருந்ததில்லை. பலர் எளிதாக உரிமைகளைப் பெற்று மகிழும்போது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய குழுவாக ஒருசாரார் வஞ்சிக்கப்பட்டிருப்பது காலத்தின் கோலம்!
இந்தத்
தடைகள் நீக்க முடியாதவை அல்ல; ஆனால், இவை நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதையும், அவற்றை நியாயப்படுத்தப் பெரும்பான்மை கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன
என்பதையும் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த
முரண்களைத் தகர்க்க, அரசியல் தளங்களில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு சமூகக் குரல்களின் ஒட்டுமொத்த எதிரொலிப்பால் இன்று சாத்தியமானதுதான் இந்தச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு.
“இன்றைய சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கான, சமூக நீதிக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வர்க்க முரண்பாட்டின் அடித்தட்டில் இருக்கும் ஒரு சமூகம் மேன்மை அடைவதற்கும், சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அச்சமூகம் தன்னிறைவு அடைவதற்கும் இது காலத்தின் கட்டாயமாகிறது. காலத்திற்கேற்ற சமூக நீதிக்கான வரையறை இன்று மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டும். இது எப்போது நிகழும்? அது சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையுமா?” என்று (அக்டோபர் 20, 2024) ஆசிரியர் பக்கத்தில் யாம் முன்பு கேள்வி எழுப்பியிருந்ததை இங்கு நினைவுகூர்கின்றோம்.
சாதிவாரி
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் முன்வைத்தபோது “மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்” என்று
குற்றம் சாட்டிய ஒன்றிய முதன்மை அமைச்சர், இப்போது அதே கோரிக்கைக்குப் பணிந்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ “மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவு நலிவடைந்த அனைத்துப் பிரிவு மக்களின் நிலையை மேம்படுத்த உதவும்” என்ற பேருண்மையை இன்றுதான் கண்டுணர்ந்திருப்பார்போல!
“தரமான அறிவிப்பாக இது இருந்தபோதும் இதனை வரவேற்பதுடன், இதைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்த வேண்டும்”
என எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.
வழக்கம்போல
எதிர்க்கட்சிகளை வாயடைக்க இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கும் ஒன்றிய அரசு, இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? என்பதற்கான விளக்கம் எதையும் குறிப்பிடவில்லை. ஆயினும், இதன் பின்புலத்தை உணர்ந்த தமிழ்நாடு முதல்வர் “இது தற்செயலான அறிவிப்பு அல்ல; மாறாக, பீகார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகத் தற்போது இதை அறிவித்திருக்கிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட ஒன்றிய அரசு, அனைத்திலும் தோல்வி கண்ட பிறகு இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது” என்று
குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுவரை
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளின்
அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது.
மிகவும்
நலிவுற்றவரைத் தூக்கிவிடும்
வகையில் இன்று சில மாற்றங்களை மேற்கொண்டு, சாதிய அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் மலர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு, முறையான திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூக நீதியை அடைவதற்கும் இன்றியமையாததாக அமைகிறது. இத்தகைய புள்ளி விவரங்களால் மட்டுமே சரியான நீதியை நிலைநாட்ட முடியும். அநீதிக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டுமல்லவா! இப்பேருண்மையை உணர்ந்த ஐயன் வள்ளுவர்,
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்’
(குறள் 948)
என்கிறார்.
அதாவது, நோயைக் குறிகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிந்து, நோயைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
சமூகக்
கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியிருக்கும் சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 246-இன் கீழ் ஒன்றிய அரசே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரம் கொண்டிருப்பதால், ஒன்றிய அரசு இதனை ‘விரைவில்’
முன்னெடுக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்