news-details
ஆன்மிகம்
இறைவேண்டலில் திருப்பாடல்கள்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 47)

நமது இறைவேண்டல் வாழ்வில் தவறாது இடம்பெற வேண்டியவை திருப்பாடல்கள். திருப்பாடல்களைப் பயன்படுத்தாத கிறித்தவ இறைவேண்டல் முழுமையற்றது என்று துணிவுடன் கூறலாம். காரணம், அந்த அளவுக்குக் கிறித்தவ வழிபாட்டிலும் இறைவேண்டலிலும் திருப்பாடல்கள் முதன்மை பெற்றுள்ளன.

திருப்பாடல்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டால் நாம் நிச்சயம் வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். ‘திருவிவிலியத்தின் மன்றாட்டு நூல்என அழைக்கப்படுவது அதன் முதல் சிறப்பு. காரணம், திருவிவிலியத்திலுள்ள 73 நூல்களிலும் முற்றும் முழுவதுமான ஓர் இறைவேண்டல் நூல் அதுவே. மார்ட்டின் லூதர் திருப்பாடல்கள் நூலைபழைய ஏற்பாட்டின் சுருக்கம்என அழைத்தார். அந்த அளவுக்குப் பழைய ஏற்பாட்டின் முதன்மைக் கருத்துகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த நூல். குறிப்பாக, படைப்பு (தொடக்கநூல்), மீட்பு (விடுதலைப் பயணம்), பாலைநிலப் பயணம் (எண்ணிக்கை), இறைவாக்கினர்களின் முதன்மைக் கருத்துகள் மற்றும் அறிவுரைகள் அனைத்துமே திருப்பாடல்கள் நூலில் காணக்கிடைக்கின்றன. இதன் காரணமாகவே பழைய ஏற்பாட்டின் பிரதியாக இருக்கிறது திருப்பாடல்கள் நூல்.

எனவேதான், புதிய ஏற்பாடு நூல் தனியாக அச்சிடப்படும்போது, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரே பழைய ஏற்பாட்டு நூலாகத் திருப்பாடல்கள் நூல் அமைந்துள்ளது.

இரு சமயத்தவர் பயன்படுத்தும் பொது மன்றாட்டு நூல் என்னும் சிறப்பு, திருப்பாடல்கள் நூலன்றி வேறெதற்கும் கிடையாது. யூதர்கள், கிறித்தவர்கள் என்னும் இரு சமயத்தவரும் இன்றும் தங்கள் வழிபாட்டில் இந்நூலைப் பயன்படுத்துவது ஒரு வியப்பான உண்மை.

கிறித்தவரின் வழிபாட்டிலும் திருப்பாடல்கள் நூல் தனித்துவம் பெறுகிறது. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தவறாது இடம்பெறும் ஒரே திருவிவிலிய நூல் இதுதானே! முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரைப் பாடல் என்ற தலைப்பில் தவறாமல் ஒரு திருப்பாடல் பயன்படுத்தப்படுகிறதே!

ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? திருவிவிலியத்தின் இந்த ஒரு நூலை வாசிக்கும்போது மட்டும் நாம்இது ஆண்டவரின் அருள்வாக்குஎன்று கூறுவதில்லை. ஆண்டவரின் அருள்வாக்கிற்குத் திருப்பாடல் நமதுபதிலுரைஎன்பதுதான் காரணம். திருப்பாடல்களை வாசித்து முடித்ததும்ஆமென்என்று கூறுவது அல்லதுதந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சி உண்டாவதாகஎன்னும் திருத்துவப் புகழைச் சொல்வதே திரு அவையின் மரபு.

திரு அவையின் மன்றாட்டு நூலானதிருப்புகழ் மாலையில்தவறாது இடம்பெற்றுள்ளன திருப்பாடல்கள். காலை, நண்பகல், பிற்பகல், மாலை, இரவு என்னும் ஐவேளையும் திரு அவை திருப்பாடல்களைப் பயன்படுத்தி இறைவனை வழிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.

தொடக்கத் திரு அவையின் காலத்திலேயே திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. கொலோசியருக்கு எழுதிய திருமடலில்திருப்பாடல்களையும், புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள் (3:16) என்று புனித பவுலடியார் அறிவுரை கூறுகிறார். அவரே எபேசியருக்கு எழுதிய கடிதத்தில்உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் இடம்பெறட்டும்; உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள் (5:19) என்கிறார்.

இயல்பாக ஒருவருக்கொருவர் உரையாடும் போதுகூட திருப்பாடல்களைப் பயன்படுத்தச் சொல்வது நம் கவனத்தை ஈர்க்கிறது.  “உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும் (யாக் 5:13) என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. இக்குறிப்புகள் தொடக்கத் திரு அவை திருப்பாடல்களைத் தன் வழிபாட்டிலும் வாழ்விலும் பயன்படுத்தியது என்பதன் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

ஏன், இயேசுவே தமது வாழ்வில் திருப்பாடல்களை நன்கு அறிந்திருந்தார், அவற்றை இறைவேண்டலுக்கும் அறிவுரைகளுக்கும் மறைவிவாதங்களுக்கும் பயன்படுத்தினார் என்பது இன்னும் கூடுதலான மதிப்பைத் திருப்பாடல்களுக்கு வழங்குகின்றது.

எல்லா யூதக் குழந்தைகளைப்போல இயேசுவும் தமது சிறு வயதில் திருப்பாடல் 113-118 என்னும் ஆறு திருப்பாடல்களையும் மனப்பாடமாக அறிந்திருந்தார் என்று கொள்ளலாம். அது மட்டுமல்ல, தொழுகைக்கூடங்களுக்குச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்த இயேசு, அங்கே பிற யூதர்களோடு இணைந்து திருப்பாடல்களை மன்றாடினார் என்றும் புரிந்துகொள்ளலாம்.

சிலுவையில் இறக்கும் முன்னர் அவர் கூறியஎன் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத் 27:46) என்னும் வார்த்தைகள் திருப்பாடல் (22:1) வரிகள்தானே! பரிசேயர்களுடன் திருப்பாடல் 110 மேற்கோள்காட்டி, மெசியா (தாம்) தாவீதின் மகன் மட்டுமல்ல, தாவீதுக்கும் தலைவர் (மத் 22: 41-46) என எண்பித்து, அவர்களின் வாயை அடைத்த நிகழ்வும் இயேசு திருப்பாடல்களை நன்கு அறிந்திருந்தார் என உறுதிப்படுத்துகிறது. எனவேதான், புனித அகுஸ்தினார் இயேசுவைதிருப்பாடல்களின் இனிமைமிகு பாடகர்என்றார். அனைத்திற்கும் மேலாக, மானிட உணர்வுகளான மகிழ்ச்சி, துயரம், கவலை, அச்சம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, அவமானம் போன்ற அனைத்து உணர்வுகளையும் இறைவேண்டலாக வெளிப்படுத்தும் வாய்க்கால்களாக அமைந்துள்ளன திருப்பாடல்கள்.

இத்தனை சிறப்புகள் நிறைந்த திருப்பாடல்களை நாம் நமது தனிவேண்டலிலும் குடும்ப வேண்டலிலும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சில பரிந்துரைகள்:

திருப்பாடல் 23, 34, 91, 103, 121, 150 போன்றவற்றில் ஒன்றிரண்டை மனப்பாடம் செய்து, நாள்தோறும் மன்றாடலாம்.

குடும்ப, குழும இறைவேண்டல்களில் திருப்பாடல்களை இரு குழுக்களாகப் பிரித்து மன்றாடலாம்.

இசையமைக்கப்பட்டுள்ள திருப்பாடல்களைப் பாடுவது சிறப்பானது.

பயணம், தேர்வு, விழாக்கள், துயர, மகிழ்வின் வேளைகள் போன்ற நேரங்களில் சூழல், தேவைக்கேற்றவாறு திருப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து மன்றாடலாம்.

நமது தனி, குடும்ப இறைவேண்டல்களில் திருப்பாடல்களையும் இணைத்து நமது இறைவேண்டலுக்கு மெருகேற்றுவோம்.