“ஒத்துழைப்பான மற்றும் அமைதியான சிவில் சமூகங்களை உருவாக்குவது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். இதை முதலில் குடும்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் செய்யலாம். ஆணும்-பெண்ணும் இணைந்து உருவாக்கும் நிலையான ஒன்றிப்பே (stable union between a man and a woman) குடும்பம். சிறியதாயினும், இது உண்மையான சமூகம். எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது.”
இவ்வார்த்தைகளைக்
கடந்த மே 16 வெள்ளியன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் சர்ச்சைக்குரிய வார்த்தையாக ‘ஆணும்-பெண்ணும் இணைந்த நிலையான ஒன்றியம்’
என்ற சொற்றொடரில் கவனம் செலுத்தி டிரென்டிங் செய்தன உலக ஊடகங்கள். தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை-நம்பிகள் போன்றவர்களைக் காயப்படுத்திவிட்டார் என்றெல்லாம் பேசின. ஆனால் உண்மையென்ன?
மறைந்த
திருத்தந்தையர்களான 13-ஆம் லியோ (ரேரும் நோவாரும்), புனித இரண்டாம் யோவான் பவுல் (ஃபாமிலியாரிஸ் கான்சோர்டியோ) மற்றும் பிரான்சிஸ் (அமோரிஸ் லெட்டீஷியா) இவர்களைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ
அவர்களும் திரு அவையின் சமூகக் கோட்பாட்டில் குடும்பத்தை முக்கியமாகக் கருதுகிறார். “மனிதர் - ஆணும் பெண்ணும் - என்பதன் உண்மை ஒரு கலாச்சாரக் கட்டுமானம் அல்ல; மாறாக, இறைவனின் கொடையாகும். நம் குழந்தைகளைக் குழப்பும், இறைவனின் திட்டத்தைத் திரித்துவிடும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்கவேண்டும். குடும்பம் என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்ட வாழ்வு மற்றும் அன்பின் புனிதத் தலமாகும். இந்த அடித்தளத்தை மறுவரையறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்கிறார். இந்நிலைப்பாட்டினை
உறுதிப்படுத்த முன்னோடி திருத்தந்தையர்கள் மூவரின் சிந்தனைகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்.
தனது
‘ரேரும் நோவாரும்’
பகுதிகள்
9-11-இல், திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘குடும்பம்’
என்பதன் கத்தோலிக்கப் பார்வை சோசலிசப் பார்வையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். குடும்பம் ஒரு ‘புரோலெட்டேரியா நிறுவனம்’
மட்டுமே. இது முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடக்கப்படுகிறது. மதம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வமைப்பை அழித்து, அதற்குப் பதிலாகச் சமூகக் கட்டமைப்பான அரசுகள் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சோசலிசம் வாதிட்டது. இதற்கு மாற்றாய், குடும்பம் என்பது இயற்கையான, மனித இயல்புக்கு அடிப்படையான அமைப்பு. இது ‘இல்லத் திரு அவைச் சமூகம்.’ எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது. எனவே, இதற்குச் சொந்த உரிமைகள் உண்டு. அரசுகள், மாநிலங்கள் இந்த உரிமைகளை அளிப்பதில்லை. அங்கீகரிக்க மட்டுமே செய்கின்றன. குடும்பத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்து ‘ரொட்டித் தொழிற்சாலையாக’ சோசலிசம்
மாற்றப் போராடிய தருணத்தில் திரு அவை குடும்பத்தைச் சுதந்திரமான ஆனால், சமூகத்துடன் இணைந்து ‘உணவு தயாரிக்கும் வீடாக’ மாற்றப் போராடியது. ஆனால், 1968-க்குப் பிறகு, குடும்பத்தின் அர்த்தமே கேள்விக்குள்ளாகியது. உலகமயமாக்கலின் தாக்கம் குடும்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தத் தொடங்கியது. அதன் நீட்சியாக இன்று ‘எப்படியும் வாழலாம், யாரோடும் வாழலாம்’ என்கிற அணுகுமுறைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாபெரும்
சவால்களை உற்றுநோக்குகையில், நவீனகாலச் சவால்களின் இதயம் குடும்பம் எனலாம். இங்குதான் மிக முக்கியமான போர் நடக்கிறது என்பதைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஆழமாகப் புரிந்துகொண்டார். எனவே, குடும்பங்களுக்காக அதிகம் உழைத்தார்.
தனது
‘பாமிலியாரிஸ் கான்சோர்டியோ’வில்
குடும்பத்தை ‘சமூகத்தின் அடிப்படைச் செல்’ என்று ஒரு தீர்க்கதரிசன பார்வையை மொழிந்தார். இப்போதனையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிசும் தனது திருத்தூதுப் பணியில் குடும்பத்தை மையமாக வைத்தார். இரண்டு ஆயர் மாமன்றங்களைக் கூட்டினார். ‘அன்பின் மகிழ்ச்சி’
(Amoris Laetitia) என்ற
திருத்தூது ஊக்கவுரை வழியாகக் குடும்பங்களின் அனுபவங்களையும் சவால்களையும் கருத்தில் கொண்டு, தெளிந்து தேர்ந்து செயல்படுவது, உடன் பயணிப்பது போன்ற மறைபரப்புத் திட்டங்களை முன்மொழிந்தார்.
புதிய
திருத்தந்தையும் குடும்பத்தின் முன்னுரிமையை அரசுகள், அவற்றின் மாநில அமைப்பு முறைகள் மற்றும் உலகமய சந்தைப் பொருளாதாரத்திற்கு மேலானதாக மீண்டும் உயர்த்திப் பிடிக்கிறார். நேற்றும் இன்றும் என்றுமான சமூகப் பிரச்சினையின் வேர்கள் குடும்பத்திலிருந்துதான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இவ்விதம்
குடும்பத்தைத் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக விவாதத்தின் மையமாக மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் விவாதத்தின் இதயத்திலும் மீண்டும் வைக்கிறார்; குடும்பத்தை உள்ளார்ந்த மற்றும் தனிப்பட்டத் தேர்வுகளின் கோளத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான அவசரத்தேவையை முன்னெடுக்கிறார்.
இதன்
முத்தாய்ப்பாகக் கடந்த ஜூன் 1 அன்று நடந்த குடும்பங்களின் யூபிலி அமைந்திருந்தது.
“கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாகத் தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தின் ‘மீனவராக’நாம் மாறவேண்டும்” என்கிற
திருத்தந்தையின் அழைப்பை வாழ்வாக்குவோம்.