news-details
ஆன்மிகம்
பிறப்புநிலை பாவம் ஒரு மீள்பார்வை (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 16)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

கிறிஸ்டினா: “தந்தையே, சென்றமுறை நாம் உரையாடியபோது, புறம்நோக்கிய மனம் தன் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, சுற்றியுள்ளவற்றை அணுகி, அதன் அடிப்படையில் தரம் பிரிப்பதன் காரணமாக ஆணவம், கன்மம், மாயை ஆகிய தீமைகள் உருவாவதாகக் கூறினீர்கள். அது குறித்து இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கூற முடியுமா?”

அருள்பணி: “சுற்றியுள்ளவற்றைத் தனக்கேற்றார்போல மனம் தரம் பிரிப்பதை நாம் இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவதாக, வாழ்க்கை நிகழ்வுகளைத் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது.  இரண்டாவதாக, சுற்றியுள்ள மனிதர்களைத் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறது.”

மார்த்தா: “வாழ்க்கை நிகழ்வுகளை மனம் தரம் பிரித்து மதிப்பீடு செய்கிறதா? எப்படித் தந்தையே?”

அருள்பணி: “நம் வாழ்வில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விற்கு என்று தனித்தன்மையும் உண்டு, நோக்கமும் உண்டு. இந்த நிகழ்வுகள் அனைத்தின் வழியாகவும் கடவுள் நம் வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்தி, நம்மை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனினும், நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நாம் சமநிலை மனநிலையோடு அணுகி வாழ்வை முழுமையாக வாழ்வதில்லை என்பது உண்மை. நமக்குப் பிடித்த நிகழ்வுகளை ‘இன்பமானவை என்று முத்திரை குத்தி, அவை நிலையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நமக்குப் பிடிக்காதவற்றை ‘துன்பமானவை என்று முத்திரை குத்தி அவற்றைத் தவிர்க்க முனைகின்றோம். நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல அமைகின்ற நிகழ்வுகளை ‘நல்லவை என்றும், ‘உயர்ந்தவை என்றும் சொல்லி, அவற்றின் மீது பற்றுக்கொள்கிறோம். நம் எதிர்பார்ப்பிற்கு மா(ற்)றாக இருக்கின்ற நிகழ்வுகளை ‘கெட்டவை என்றும், ‘தாழ்ந்தவை என்றும் முத்திரை குத்தி, அவற்றின்மீது வெறுப்புகொள்கின்றோம்.”

அன்புச் செல்வன்: “ஆக, இன்பம்-துன்பம், பிடித்தவை-பிடிக்காதவை, உயர்ந்தவை-தாழ்ந்தவை போன்ற பிரிவினைகள் நிகழ்வுகளைச் சார்ந்தவை அல்ல; மாறாக, மனத்தைச் சார்ந்தவை என்று சொல்கிறீர்கள், அப்படித்தானே?”

அருள்பணி: “ஆம்! நம் மனம் இவ்வாறு பிரித்து, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற்றொன்றைத் தள்ளி வைக்க முயற்சி செய்வதன் காரணமாக, நம்மால் வாழ்வை அதன் முழுமைத்தன்மையோடு வாழ முடிவதில்லை. நமக்குப் பிடித்த காரியங்கள் நடைபெறுகின்றபோது உற்சாகமாக இருக்கும் நாம், நமக்குப் பிடிக்காத காரியங்கள் நடைபெறுகின்றபோது தோற்றுப்போனதாக நினைத்துச் சோர்ந்துபோய் விடுகின்றோம். அதாவது, வாழ்வை அரைகுறையாக வாழ ஆரம்பிக்கின்றோம். வாழ்க்கை நிகழ்வுகளில் பாதியைப் பற்றிக்கொண்டு, மீதியை நிராகரிக்கும்போது, வாழ்வே அரைகுறையானதாக மாறிவிடுகிறது. இயேசுவைப்போல ஒவ்வொரு வினாடியும் முழுமனிதர்களாக நம்மால் வாழ முடிவதில்லை.”

அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே, நமக்குப் பிடித்த காரியங்களை இன்னும் அதிகமாக்கிக்கொள்வதே மகிழ்ச்சி என்று எண்ணி, அவற்றின் பின்னால் நாம் இன்னும் அதிமாக ஓட ஆரம்பிக்கின்றோம். எனினும், நாம் விரும்பித் தேடி ஓடுபவை பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதில்லை என்பது உண்மை. அதேபோல நமக்குப் பிடிக்காத காரியங்களைத் தள்ளிவைத்தால்தான் நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி, அவற்றிற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ஆனால், அதில் நமக்குப் பெரும்பாலும் வெற்றி கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. எனவே, ஒட்டுமொத்த வாழ்வே மகிழ்ச்சியற்ற ஒன்றாகத் தென்படுகிறது.”

அகஸ்டின்: “அடேங்கப்பா! மனத்தின் தரம் பிரித்தல் ஒட்டுமொத்த வாழ்வையே எதிர்மறையாகப் பாதிக்கிறதா?நம் மனம் மனிதர்களையும் தரம் பிரிக்கிறது என்று சொன்னீர்களே! எப்படி?”

அருள்பணி: “நமது மனம் வாழ்க்கை நிகழ்வுகளையும் சுற்றியுள்ள மனிதர்களையும் அவர்கள் செய்யும் செயல்களையும் தனது விருப்பு, வெறுப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையிலேயே அணுகுகின்றது. மனம் தன் விருப்பு-வெறுப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் மனிதர்களை ஒரு குழுவாகவும், அவ்வாறு இல்லாதவர்களை மற்றொரு குழுவாகவும் பிரிக்கிறது. மனத்தின் தூண்டுதலாலேயே நாம் நமக்கேற்ப நடந்துகொள்பவர்களை ‘நல்லவர்கள் என்றும், ‘நண்பர்கள் என்றும் கருதுகிறோம். நமக்கேற்ப நடந்துகொள்ளாதவர்களை ‘கெட்டவர்கள் என்றும், ‘எதிரிகள் என்றும் கருதுகிறோம். நல்லவர்கள்-கெட்டவர்கள் என்ற நம் பிரிவினை அவர்களது செயல்பாடுகளை வைத்து வருகின்றது என்று எண்ணுகின்றோம். அது உண்மையல்ல! நம் விருப்பு-வெறுப்புகளிலிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவர் நல்ல காரியத்தைச் செய்தாலும், அது நமக்குப் பாதகமாக இருந்தால், அவரைக் கெட்டவர் என்று முத்திரை குத்தத் தயங்கமாட்டோம். அதேபோல, ஒருவர் எதிர்மறையான காரியம் செய்தாலும், அதனால் நமக்கு நன்மை விளையுமானால், அவரோடு உறவை ஏற்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறு சக மனிதர்களை நம் மனம் தரம் பிரிப்பதன் காரணமாக, அவர்களை அவர்களது நிலையில் வைத்து நம்மால் பார்க்க முடிவதில்லை. நம்மால் அவர்களை அன்பு செய்யவும் இயலவில்லை.” 

அன்புச் செல்வன்: “அது மட்டுமல்ல தந்தையே! நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்கின்றவர்கள் என்றுமே அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்றும் மனம் எதிர்பார்க்கிறது. ஆனால், அது பெரும்பாலும் நடப்பதில்லை. மேலும், நமக்குப் பிடிக்காதவர்களைத் தள்ளிவைத்தால்தான் மகிழ்ச்சி என்று நினைத்து, அவர்களைத் தள்ளிவைக்கப் போராடுகிறது. ஆனால், அதுவும் பெரும்பாலும் நடப்பதில்லை. எனவே, ஒட்டுமொத்த வாழ்வே போராட்டமான ஒன்றாகத் தெரிகிறது.”

அருள்பணி: “சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், மனம் உலகையே இரண்டாகப் பிரித்து, நம் வாழ்வையும் இரண்டாகப் பிரித்து விடுகிறது. நாம் அரை குறை மகிழ்ச்சியோடு வாழ சுற்றியுள்ள சூழல்தான் காரணம் என்று நம்மில் பலர் எண்ணுகின்றோம். ஆனால், உண்மையான காரணம் ‘நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய நம் மனம் என்பதை நாம் உணர்வதில்லை. எனவேதான் ஞானிகள் நம் மனத்தின் மட்டில் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். புத்தர் ‘நம் மோசமான எதிரியைவிட மோசமானது நம் மனம் என்கின்றார். பாரதியார் ‘பேயாய் உழலும் சிறுமனமே என்கின்றார். சித்தர்களில் ஒருவர் மனத்தை ‘அகப்பேய் என்று அழைத்தார்.”

கிறிஸ்டினா: “தந்தையே! இத்தகைய எதிர்மறைத்தன்மையைக் குறைக்க வழி என்ன?”

அருள்பணி: “வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் இறைச்செயல்பாடு இருப்பதை எண்ணி, அவற்றைச் சமநிலை மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நம்மில் உருவாக்கிக்கொள்ள முனைவதே அந்த வழி! அத்தகைய நிலையை அடைய மனத்தை அகம்நோக்கித் திருப்பக் கற்றுக்கொள்வது அவசியமானது. அகம் நோக்கிய மனம் மேற்கூறப்பட்ட எதிர்மறைத்தன்மைகளை வெற்றிகொள்வதோடு, மனிதர்கள் தளர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றது. இதுபோல மனத்தை அகம் நோக்கித் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகளையே ‘ஆன்மிகப் பயிற்சிகள் என்றும், ‘பக்தி முயற்சிகள் என்றும் கூறுகின்றோம்.”

மார்த்தா: “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் புறம்நோக்கி இயங்குகிற மனத்தின் ஒப்பிடுதலும் தரம்பிரித்தலும் ஆணவம், வெறுப்பு, குறை சொல்லுதல், தீர்ப்பிடுதல், தன்னிலிருந்து அந்நியப்படல் போன்ற எண்ணற்ற தீமைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. மனத்தின் இத்தகைய தன்மையை நாம் ‘பிறப்புநிலை பாவம் என்று சொல்ல முடியுமா?”

அருள்பணி: “இன்னும் சரியாகக் கூற வேண்டுமெனில், புறம் நோக்கி இயங்கும் மனம் தன் விருப்பத்திற்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல எல்லாம் நடந்துவிட்டது என்றால், மகிழ்வு தனதாகிவிடும் என்று நினைத்துச் செயல்படுகிறதல்லவா! அதுதான் பிறப்புநிலை பாவம் என்பது. மனிதர்களின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்றார்போல நிகழ்வுகள் எல்லா நேரமும் நிச்சயமாக நடைபெறப் போவதில்லை. அது நமக்குள் வெறுப்பையும் சஞ்சலத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவ்வப்போது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியானால்கூட, அவை நம்மில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைவிட, அதிகமாக ஆணவத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வாழ்க்கைப் பாடம். உண்மையான மகிழ்வு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடவுள் செயல்படுகிறார் என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கை நிகழ்வுகளை இறைத்திருவுளத்தின் பின்னணியில் (‘இறைவன் ஏன் இத்தகைய நிகழ்வுகளை நமக்குத் தருகிறார் என்பதன் பின்னணியில்) ஆராய்ந்து நம் வாழ்வை ஆழப்படுத்திக் கொள்வ தாகும். சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், பிறப்பு நிலை பாவம் என்பது வாழ்வின் மகிழ்வை இறைவனின் விருப்பத்தில் தேடாமல், மனித விருப்பத்தில் தேடுவதாகும்; கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் என்று எண்ணாமல், நம் விருப்பங்களுக்கு ஏற்ப கடவுள் உட்பட எல்லாரும் செயல்படவேண்டும் என்று எண்ணுவதாகும்; தன்னிலும், தனக்குள் இருக்கும் கடவுளிலும் மகிழ்வைத் தேடாமல், கடவுள் அல்லாதவற்றில் மகிழ்வைத் தேடுவதாகும்.”                (தொடரும்)