news-details
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

பேரொளியின் ஒளியாக நம்மில் வாழும் இறைவனாகிய பேரொளி! நம்பிக்கை ஒளியை ஏற்றி, விண்ணக ஒளியோடு நம்மை இணைக்கின்ற அனுபவம் நம்மை இவ்வாறு பாடச் செய்கின்றது ‘உமது முகத்தின் ஒளி  என்மீது வீசச் செய்யும் ஆண்டவரே!’ இந்த நம்பிக்கை ஒளி நம்மில் ஏற்றப்படும் பொழுது நம் பலவீனங்கள் மறைந்து வல்லவர்கள் ஆகின்றோம். குணமாக்கும் வல்லமை நம்மில் நிரப்பப்படுகின்றது. அதனால்தான் நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்த நோயாளிகள் குணம் பெற்றபோது இயேசு கூறினார்: “உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.”

நலமடைதலில் மட்டுமல்ல, நம்பிக்கை அனைத்தையும் பெறச் செய்யும். நாம் செய்ய வேண்டியதை இயேசு இவ்வாறு வலியுறுத்துகிறார்: “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது, இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33).

இயேசுவின் வார்த்தை ஒளிமயமானது என்பதை நாம் அறிவோம். அவ்வார்த்தை நம்பிக்கையை ஆழப்படுத்தி நங்கூரமாகச் செயல்படுகின்றது. புனித பவுல் கூறுவதுபோல, “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது” (உரோ10:8).

இயேசுவின் வார்த்தையை உள்வாங்கி, நமதாக்கி வாழ்வாக்கும் பொழுது அவர் கரத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். நிலைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொள்ளும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உருமாற்றும்.

கடந்த சில நாள்களுக்குமுன் நடந்த ஒரு நிகழ்வு என்னைப் பூரிப்படையச் செய்தது. மே மாதம் முதல் நாள் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இல்லத்திலோ, அருகில் உள்ள ஆலயங்களிலோ திருப்பலி இல்லை. எனவே, புனித மரியன்னைப் பேராலயத்தில் திருப்பலியில் பங்குபெற அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விரைந்தேன். சாலையில் 20 நிமிடங்களுக்குமேல் ஆட்டோ அல்லது பேருந்துக்காகக் காத்திருந்தேன். அண்மையில் ஏற்பட்ட விபத்தால் இடது காலில் மூன்று இடத்தில் எலும்புக் கீறல் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் நடப்பது கடினமாக இருந்தாலும், திருப்பலியில் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோ கிடைத்தது.

நான் ஆலயத்தில் நுழையும்போது வருகைப் பாடல் பாடினர். மகிழ்வோடு நன்றி கூறிக்கொண்டே திருப்பலியில் பங்கேற்றேன். திருப்பலி முடிந்ததும் சில ஆண்டுகளாகச் சந்திக்க இயலாமல் இருந்த அன்பான, நட்புடன் உறவாடும் ஆசிரியை ஒருவரைக் கண்டேன். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்கள் இல்லம் சென்றோம். காலை உணவிற்குப் பின் கார் ஏற்பாடு செய்து என்னை அனுப்பி வைத்தார்கள். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவிகளுக்குப் பலவகைகளில் உதவி செய்பவர்கள். ஜூலி என்ற இந்த ஆசிரியை மதுரை புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர்.

இத்தகையோர்தான் உலகிற்கு ஒளியாக இருக்கிறவர்கள். அவர்களது நற்செயல்களைக் கண்டு மக்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழும்படி வாழ்பவர்கள். இயேசு மீண்டும் மாட்சியுடன் வரும்பொழுது அவரது வலப்பக்கத்தில் நிற்கும் பேறுபெற்றவர்கள் (மத் 25:34,36). அத்தகைய பேறுபெற்றவர்களாக  வாழ்வோம். விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

அனைத்திற்கும் மேலாக ஆண்டவரை மட்டுமே தேடுவோம். அவரில் நம்பிக்கைகொள்வோம். அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையதையும் நாடுவோம்.

நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் கரங்களிலிருந்து பெற்று மகிழ்வோம். அவற்றைப் பிறரோடு பகிர்ந்து இறையாட்சி மலரச் செய்யும் மீட்பின் கருவிகளாவோம்.