“கடவுளின் இதயத்தில் ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் தனியோர் இடம் உண்டு. இதனால் அவர்கள் திரு அவையின் இதயத்திலும் இருக்கின்றனர். ஏழைகளாக்கப்பட்டோரிடம் இயேசுவின் முகத்தையும் ஊனுடலையும் இனம் கண்டுகொள்ள கிறித்தவக் குழுமம் முழுவதும் அழைக்கப்படுகிறது”(இஅ 19). மேலும், அவர் ஏழையாகவும் தாழ்ச்சி உடையவராகவும் இருந்தவர்; ஏழைகளிடம் நட்புறவு கொண்டிருந்தவர்; அவர்களுடன் சமபந்தி அமர்ந்தவர்; ஏழ்மைக்கான காரணிகளைக் கண்டித்தவர். அவருடைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டிய திரு அவையும், ஏழைகளுக்கும் விளிம்புநிலையினருக்கும் முதன்மை தருவது அவசியம். இது கிறித்தவ நம்பிக்கையின் இன்றியமையாத ஒரு கூறும், இறையியல் அடிப்படையிலான கடமையும் ஆகும்.
“பல வேளைகளில் ஏழைகளே
திரு அவையில் பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த ஏழைகளோடு ஏழையாக இருக்கவும், அவர்களது குரலைக் கேட்கவும், அவர்களுக்கு ஆவியார் தரும் அருங்கொடைகளை எவ்வாறு கண்டறிவது என அவர்களோடு இணைந்து
கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது” (இஅ
19).
ஏழைகள்
திரு அவையிடம் கேட்பது அன்பையே. அன்பு செய்தல் என்பது அவர்களுக்கு நமது ஏற்பையும் மதிப்பையும் புரிதலையும் தருவது. அவை இன்றி உணவு, பண உதவிகள் என்பனவற்றை
எவ்வளவுதான் தந்தாலும், அது அவர்களது மனித மாண்பை முழுமையாக மதிக்கத் தவறுவது ஆகும். அத்தகைய புரிதலும் மதிப்பும் தருவதுதான் பிறருடைய உதவிகளின் பயனாளர்களாகிய அவர்களைத் தங்களது வளர்ச்சியைத் தாங்களே முடிவு செய்ய ஆற்றல் படைத்தவர்கள் ஆக்குகிறது.
ஏழைகள் பல
வகையினர்!
மாண்புடன்
வாழ்வதற்கான பொருள் வளம் அற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியினர், வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டோர் சிறப்பாகப் பெண்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீண்டுவரப் போராடுவோர், அமைப்பு முறையாலேயே குரலற்றோர் ஆக்கப்பட்ட சிறுபான்மையினர், கைவிடப்பட்ட முதியோர், இனவெறி, சுரண்டல், ஆள்கடத்தல் என்பனவற்றிற்கு ஆளாக்கப்பட்டோர், அதிலும் குறிப்பாக இளையோர், சுரண்டப்படும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் பயன்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையினர் ஆகிய அனைவரும் ஏழைகளே. மிக அதிகமாகப் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் கருவிலிருக்கும் குழந்தைகளும், அவர்களின் அன்னையருமே. அவர்களுக்கான ஆதரவுக் குரலும் செயல்பாடுகளும் மிகவும் அவசியம். மேலும், பல நாடுகளில் நிகழும்
போர்களும் பயங்கரவாதமும் புதுவகை ஏழைகளை உருவாக்கியுள்ளன. அவர்களின் குரல் தங்களுக்குக் கேட்கிறது என அறிவிப்பதுடன், அவற்றிற்குக்
காரணிகளான ஊழல் அரசியல் மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளையும் மாமன்றம் கண்டிக்கிறது.
ஏழ்மையின்
மற்றொரு வகை அருள்வாழ்வைச் சார்ந்தது. வாழ்வில் அர்த்தம் இல்லாத நிலை, பிறரைத் தனக்குப் போட்டியாகவோ பகையாகவோ கருதும் மிகையான தன்னல நோக்கு என்பன அதன் சில வடிவங்கள். “இத்தகைய அருள்வாழ்வுசார் ஏழையரும் பொருளாதார ஏழையரும் சந்திக்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவரது தேவையை நிறைவு செய்யும் இணைந்த பயணத்தைத் தொடங்குகின்றனர்” (முஅ
5d). இவ்வாறுதான்
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்” (மத்
5:3) எனும் நற்செய்திப் பேற்றினை நிறைவாக அனுபவமாக்கும் வகையிலான இணைந்து பயணிக்கும் திரு அவை செயலாக்கம் பெறும்.
மேலும்,
ஏழைகள் சார்பாக நிலைப்பாடு எடுப்பது என்பது நமது பொதுவீட்டின் நலம் காக்க அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும். ஏனெனில், “நிலவுலகின் அழுகுரலும் ஏழ்மையில் வாடுவோரின் அழுகுரலும் ஒரே அழுகுரலே”
(முஅ 5e).
ஏழைகளுக்காகச்
செயல்படுவது
ஏழைகளின்
நலனுக்காகச் செயல்படுவது என்பது ஏழ்மை மற்றும் ஒதுக்கப்படுதல் என்பனவற்றிற்கான காரணிகளை அகற்றுவதும் ஆகும். அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் எழுப்புதல், அவர்களுக்கு எதிரான அநீதிகளைப் பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டித்தல் என்பனவையும் அதில் உள்ளடங்கும். அவை தனியார் மற்றும் தொழில்நிறுவனங்கள், அரசுகள் என்பன இழைக்கும் அநீதச் செயல்களாகவோ, அநீதச் சமூக அமைப்புகளாகவோ இருக்கலாம். அவற்றை இனங் கண்டு எதிர்ப்பதற்குத் திரு அவையின் சமூகப் படிப்பினை உதவ முடியும். அதனால் தூண்டுதல் பெற்று, பொதுநலம் பேணுவதிலும், மனித மாண்பைக் காப்பதிலும் ஈடுபடுவது கிறித்தவர்களது கடமை. இப்பணியில் அவர்கள் குடிமைச் சமூக அமைப்புகளுடனும் தொழில் சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் அடித்தட்டுக் குழுக்களுடனும் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியலிலும் இத்தகைய ஈடுபாடு அவசியம் ஆகலாம். இவ்வாறு ஈடுபடுவோருக்குக் கிறித்தவக் குழுமங்கள் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவது அவசியம். ஏனெனில், “அவர்களது செயல்பாடும் நற்செய்தி அறிவித்து இறையாட்சியைக் கொணரும் திரு அவையின் பணியைச் சார்ந்ததே”
(முஅ 4 g).
ஏழைகள்
மற்றும் துன்புறுவோரிடம் கிறித்தவச் சமூகம் “தாம் செல்வராக இருந்தும் தமது ஏழ்மையின் வழியாக நாம் செல்வராகும் பொருட்டு நமக்காக ஏழையான...” (2கொரி 8:9) கிறிஸ்துவைக் காண்கிறது. அவர்களிடம் நெருங்கி வரவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது. “இணைந்து பயணிப்பது என்பது ஒன்றிணைந்து நடப்பது. அதனால் ஏழ்மையை அனுபவிப்போரைக் கூட்டியக்கத் திரு அவை தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மையப்படுத்த வேண்டும். ஏனெனில், தங்கள் துன்பங்கள் வழியாக அவர்கள் துன்புறும் இயேசுவை நேரடியாக அறிந்தவர்கள். அவர்களது வாழ்வு இயேசுவின் வாழ்வோடு ஒத்திருப்பதால் ஏழைகள் கொடையாகப் பெற்றுக்கொள்ளப்படும் மீட்பின் அறிவிப்பாளர்களாகவும் நற்செய்தியின் மகிழ்ச்சிக்குச் சாட்சிகளாகவும் அவர்களை அது ஆக்குகின்றது” (முஅ
4h).
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. ஏழைகள்
வேறு, நாம் வேறு எனத் திரு அவையினர் எவரும் ஏழைகளை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியும், அவர்களை நம்மிடம் கையேந்தி நிற்பவர்களாகவும் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் (முஅ 4i).
2. திரு
அவைகளின் நிதி நிர்வாகம் நற்செய்தியின் கோரிக்கைகளைத் துணிந்து எடுத்துரைக்கத் தடையாகிவிடக்கூடாது. இறைவாக்குத்தன்மையுடன் அநீதச் சூழமைவுகளைக் கண்டிப்பதும், சட்டங்கள் இயற்றுவோரைப் பொதுநலனுக்காகச் செயல்படத் தூண்டுவதும் ஒன்றுக்கு ஒன்று தடையாகிவிடாதவாறு இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் (முஅ 4j).
3. தான்
நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் நீதி நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்படுகிறார்களா? என்பதைப் பற்றிய நேர்மையான சுய ஆய்வைத் திரு அவை மேற்கொள்ள வேண்டும் (முஅ 4l).
4. பல்வேறு
நிலப்பகுதிகளில் உள்ள தலத் திரு அவைகளிடையே தாங்கள் பெற்றுள்ள வளங்களையும் கொடைகளையும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு இடையே நிலவும் கூட்டுத்தோழமையின் அடையாளம் ஆகும். இது அத்திரு அவைகளுக்கு இடையே ஒன்றிப்பை வளர்க்கும் (முஅ 4m).
5. திரு
அவையின் சமூகப் படிப்பினை எனும் வளம் அதிகம் அறியவும் பயன்படுத்தவும் அதனை அதிகமாகப் பரவலாக்கம் செய்வதுடன் பிறரும் ஏற்றுச் செயல்படுத்தத் தூண்டுதல் தரும் வகையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் (முஅ 4n).
6. கிறித்தவக்
குழுமங்களில் தரப்படும் அனைத்து உருவாக்கப் பயிற்சிகளிலும் சிறப்பாக, அருள்பணியாளர் மற்றும் துறவியருக்குத் தரப்படுவனவற்றிலும் ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்ந்து அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன இன்றியமையாது இடம்பெறவேண்டும் (முஅ 4h).
7. திருத்தொண்டர்
பணி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் ஏழைகளுக்குப் பணி செய்யும் பரிமாணம் அதிக அழுத்தம் பெறவேண்டும் (முஅ 4p).
8.“திரு
அவையின் படிப்பினை, திருவழிபாடு, செயல்பாடுகள் என்பவற்றில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் சார்ந்த விவிலிய, இறையியல் அடித்தளங்கள் வெளிப்படையாகவும் கவனமாகவும் இணைக்கப்பட வேண்டும்”
(முஅ 4q).