news-details
ஞாயிறு தோழன்
கிறிஸ்துவின் தூய்மைமிகு திருவுடல், திருஇரத்தப் பெருவிழா (22-06-2025) தொநூ 14:18-20; 1கொரி 11:23-26; லூக் 9:11-17

திருப்பலி முன்னுரை

கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு மட்டுமே உரிய உன்னதக் கொடையான நற்கருணையை நினைவுகூர்ந்து தாயாம் திரு அவை பெருமகிழ்வோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவாகக் கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பேரன்பையும் தியாகத்தையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. நற்கருணை கத்தோலிக்கக் கிறித்தவ வாழ்வினுடைய மையமும் ஊற்றுமாகத் திகழ்கிறது. தெய்வீக நிலையை அடையும் உன்னதப் பாக்கியம் நற்கருணையில்தான் உள்ளது. நமது வாழ்க்கைக்குத் தேவையான வல்லமையை, ஆற்றலை, நம்பிக்கையை, சுகத்தை, மனவலிமையை நற்கருணையில்தான் பெறுகிறோம். அன்பின், பகிர்வின், ஒற்றுமையின், உறவின் அடையாளமான நற்கருணையை உட்கொள்ளும் நாம், நற்கருணையின் பிரசன்னத்தை வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும். நமது குடும்பங்களில் ஆசிர்வாதங்களும் அருள்நலன்களும் நிலைக்க வேண்டுமானால் நற்கருணையை நமது வாழ்வின் மையமாக்க வேண்டும். நற்கருணைப் பேழையில் ஆலயங்களில் தங்கியிருக்கும் ஆண்டவருக்குத் தக்க ஆராதனையும் புகழ்ச்சியும் செலுத்தப்படவேண்டும்எனவே, நமது வாழ்விற்கு அடித்தளமான நற்கருணையின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்து, தூய்மையான உள்ளத்தோடு தூயவரை உட்கொண்டு அவரது அன்பில் நிலைத்து வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவர் நல்லவர்; நாம் வாழும் இவ்வுலகில் அன்றாடம் பலவிதமான நன்மைகளைச் செய்து அற்புதமாக நம்மை வழிநடத்தி வருகின்றார். அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது எந்தக் குறையும் இராது. இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம்  ‘விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவரைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம்என்று சலேம் அரசர் மெல்கிசெதேக்கிடம் கூறுகின்றார். அழிந்துபோகும் செல்வத்தை நாடாமல், அழியாத செல்வமாகிய ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும்  முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இயேசு தம்மை உடைத்துப் பலியாகக் கொடுத்து நிலைவாழ்வைப் பெற்றுத்தந்தார்அன்றாடம் நம்முடன் இருக்கும்வண்ணம் அப்ப, இரச வடிவில்  நம் உள்ளத்தில் வாழ்கின்றார். நமது மீட்பின் அடையாளமான நற்கருணையை உட்கொள்ளும்முன் நமது உள்ளத்தைத் தூய்மையாக்கவேண்டும். நாம் வாழ்வுபெற விலையாகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் போற்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எமது திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். தங்களின் பணிவாழ்வால் உம்மைப் பறைசாற்றிடவும், நற்கருணை ஆண்டவரின் அன்பைச் சுவைத்து, ஆண்டவரில் நிலைத்துப் பலன் கொடுத்திடவும்  வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் இறைவா! ‘இது என் உடல், இது என் இரத்தம்என உம்மையே நற்கருணையின் வடிவில் எமக்கு வழங்கி வாழவைத்துக்கொண்டிருக்கும் உமது அன்பிற்காக நன்றி கூறுகின்றோம். நற்கருணையின் முக்கியத்துவத்தை அறிந்து மாண்போடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் ஆண்டவரே! திருவுடல், திரு இரத்தப் பெருவிழா திருப்பலியில் கலந்துகொண்டுள்ள நாங்கள் அனைவரும் அன்பு, தியாகம், கருணை, இரக்கம் போன்ற பண்புகளில் வளரவும், நற்கருணையை அடிக்கடிச் சந்தித்து ஆன்ம பலம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழும் கடவுளே! இளையோர் அனைவரும் உலகப்போக்கின்படி வாழாமல், அன்றாடம் திருப்பலியில் கலந்துகொண்டு, தகுந்த தயாரிப்போடு நற்கருணையை உட்கொண்டு, கடவுள்மீது ஆழமான நம்பிக்கையோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.