news-details
ஆன்மிகம்
தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 49)

நமது இறைவேண்டல் கடவுளின் கொடை! அதே வேளையில் நமது முயற்சியும்கூட என்னும் இறைவேண்டல் பற்றிய ஒரு முகாமையான செய்தியைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியில் (கதிம 2725) வாசிக்கிறோம். ஆம், கடவுளின் அருளின்றி நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, நாம் தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்யவேண்டும். திரு அவையின் நெடிய மரபின்படி, செபமாலை போன்ற பல மன்றாட்டுகளும், வழிபாட்டு நிகழ்வுகளும் தூய ஆவியாரின் அருள் வேண்டியே தொடங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த மரபு திருவிவிலியத்திலிருந்துதான் தோன்றியது என்பதை மறந்துவிடக்கூடாது. “எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள் (எபே 6:18) என்பது தொடக்கத் திரு அவையினருக்குப் புனித பவுலடியார் தந்த தெளிவான போதனை. அதனையே, “தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள் (யூதா 1:20) என்னும் யூதாவின் திரு மடல் அழைப்பும் உறுதி செய்கிறது.

ஏன் நாம் தூய ஆவியாரின் துணையுடன் இறைவேண்டல் செய்ய வேண்டும்? இதற்கான விடையை இயேசுவே தந்துள்ளார்: “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார் (யோவா 14:26) என்பது இயேசுவின் வாக்குறுதி. “இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார் (திப 1:1) என்றுதான் திருத்தூதர் பணிகள் நூலே தொடங்குகிறது.

எனவே, இயேசுவின் அறிவுறுத்தலின்படி திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவர்களும் தூய ஆவியாரின் துணையோடுதான் - இறைவேண்டல் உள்பட - அனைத்தையும் செய்தனர். குறிப்பாக, இறைவேண்டலுக்குத் தூய ஆவியாரின் துணை அவசியம் என்பதைப் பவுலடியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார் (உரோ 8:26).

கடவுளைஅப்பா, தந்தாய்என அழைக்கும் உரிமையை இயேசு வழியாகத் தூய ஆவியார்தாம் பெற்றுத்தருகிறார் என்னும் இறையியல் உண்மையைநீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவிஅப்பா, தந்தையேஎனக் கூப்பிடுகிறது (கலா 4:6) என்னும் புனித பவுலடியாரின் சொற்களிலிருந்து உணர்கிறோம். தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்வதாகப் பவுலே சான்று பகர்ந்துள்ளார்: “நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை (1கொரி 14:14) என்பது அவரது வாக்குமூலம்.

மேலும், இறைவேண்டல் என்பது கடவுளின் அருள்; அதேவேளையில் நமது முயற்சியும்கூட என்பதற்குப் பவுலடியாரின்தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன் (1கொரி 14:15) என்னும் சொற்கள் வலு சேர்க்கின்றன.

தாவீதின் புகழ்பெற்ற 51-ஆம் திருப்பாடலில்என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும் (திபா 51:15) என்னும் மன்றாட்டை வாசித்து நாம் வியப்படைகிறோம். இறைவனுக்குப் புகழ் சாற்ற வாயை நாமன்றோ திறக்க வேண்டும்? பின் ஏன் தாவீது கடவுளிடம் மன்றாடுகிறார்? ஆம், அவரது புகழைப் பறைசாற்றுவதற்கும் அவரது உதவி தேவை. கடவுளின் அருளின்றி நாம் வாய் திறந்து மன்றாட முடியாது என்னும் உண்மையைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான், அதே திருப்பாடலில்உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும் (திபா 51:11) என்று கெஞ்சுகிறார்.

எனவே, தூய ஆவியாரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அவரே நமக்கு இறைவேண்டல் ஆர்வத்தைத் தருகிறார். எப்படி இறைவேண்டல் செய்வது எனக் கற்றுத் தருகிறார். இறைவேண்டல் செய்ய மனமும் உடலும் தடையாக வரும்போது, தடைகளை உடைத்து நமக்கு இறைவேண்டலுக்கான ஆற்றலைத் தருகிறார். அவரே நமது இறைவேண்டலின் சொற்களையும், மனத்தின் நோக்கத்தையும் புனிதப்படுத்துகிறார். நமது வாழ்வும் இறைவேண்டலும் முரண்படாதபடி அவரே பாதுகாக்கின்றார். புதுமையாகவும் தேவைக்கேற்பவும் மன்றாட நமக்குப் படைப்பாற்றலையும் அவரே தருகின்றார்.

எனவேதான், திரு அவையின் மாபெரும் புனிதர்கள் அனைவரும் தூய ஆவியாரின் துணையை நாடினர். தூய ஆவியாருக்கென்றே சிறப்பு மன்றாட்டுகளையும் இயற்றினர். புனித அகுஸ்தினாரின்என்னுள் சுவாசியும் தூய ஆவியாரே, புனித ஜோஸ் மரிய எஸ்கிரிவா இயற்றியஎன் மனத்தை ஒளிரச் செய்யும் தூய ஆவியாரே, இரபானுஸ் மவுருஸ் இயற்றியவாரீர் படைத்திடும் தூய ஆவியாரே (Veni Creator Spiritus) போன்றவை புகழ்பெற்ற தூய ஆவியாருக்கான மன்றாட்டுகள்.

நாமும் நாள்தோறும் தூய ஆவியாரை நோக்கி மன்றாடுவோமாக. அவரது துணையோடு இறைவேண்டல் செய்வோமாக.