இந்த மன்றாட்டைக் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தாத நாளே இல்லை என்னும் சிறப்புக்குரிய மன்றாட்டு எது? ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...’ என்று தொடங்கும் வேண்டல்தான். இந்த மன்றாட்டின் சிறப்புகளைப் பட்டியலிட்டால், நமது வியப்புக்கு அளவிராது. இயேசுவே கற்றுத்தந்தது என்பதுதான் முதல் சிறப்பு. இது ஒரு திருவழிபாட்டு மன்றாட்டு, மரபு மன்றாட்டு, திருவிவிலிய மன்றாட்டு என்பது கூடுதல் சிறப்பு. நாம் சொந்தமாக இறைவேண்டல் செய்வதற்கான அளவீடு, மாதிரி என்பது மற்றொன்று. உலகெங்கும் உள்ள அனைத்துக் கிறித்தவர்களையும் இணைக்கும் மன்றாட்டு இது. ‘எங்கள் தந்தையே’ என்று கடவுளை அழைப்பதன் வழியாக மாந்தர் அனைவரையுமே கடவுளின் பிள்ளைகளாக்கும் வேண்டல் இது. இறைவேண்டல்கள் அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது என்பது இதன் தனித்துவச் சிறப்பு.
மத்தேயு
நற்செய்தியில் (மத் 6:9-13) மக்கள் அனைவருக்கும் கற்பித்ததாகவும், லூக்கா நற்செய்தியில் (11:2-4) சீடர்களுக்குக் கற்றுத்தந்ததாகவும் அமைந்துள்ள இந்த மன்றாட்டில், திருவழிபாட்டு மரபின்படி மத்தேயு நற்செய்தியின் வடிவத்தையே வழிபாட்டில் நாம் பயன்படுத்துகிறோம்.
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வி இந்த மன்றாட்டை ‘முழு நற்செய்தி நூலின் சுருக்கம்’
(‘The Summary of the Whole gospel’ (2761) என்று
கூறுகிறது. தொடக்கத் திரு அவையினர் ஒருநாளின் மூன்று வேளைகளில் இயேசு கற்பித்த மன்றாட்டை இறைவேண்டல் செய்தனர். எனவே, இது ‘திரு அவையின் மன்றாட்டு’
(கதிம 2770) எனப்படுகிறது. இறையாட்சியின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதால் ‘நிறைவுக்கால மன்றாட்டு’
(Eschatological prayer
- கதிம
2771) என்றும்
அழைக்கப்படுகிறது. தூய ஆவியாரின் தூண்டுதலால், இயேசு வழியாகத் தந்தையை நோக்கி எழுப்பப்படுவதால் இது ஒரு ‘திருத்துவ மன்றாட்டு’
என்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம
2766).
திருப்பாடல்கள்
பற்றி விரிவாக எழுதியுள்ள புனித அகுஸ்தினார், திருப்பாடல்களின் உணர்வுகள் இயேசு கற்பித்த இறைவேண்டல் முழுவதும் ஊடுருவியுள்ளன என்றும், திருவிவிலியத்தில்
உள்ள மதிப்பீடுகள் அனைத்தும் இந்த மன்றாட்டில் அடங்கியுள்ளன என்றும் எழுதியுள்ளார்.
யூபிலி
2025 தொடர்பாக
11.02.2022 அன்று எழுதிய மடலில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு கற்பித்த ‘விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே’ என்னும் மன்றாட்டை நமது வாழ்வியல் திட்டமாக (Life programme)
மாற்ற வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த
இறைவேண்டலில் ஏழு பகுதிகள் இருக்கின்றன. முதல் மூன்றும் (‘உமது’ மன்றாட்டுகள்) இறைத்தந்தையின் மாட்சி தொடர்பானதாகவும், இறுதி நான்கும் (‘எமது’ மன்றாட்டுகள்) நமது தேவைகள் தொடர்பானதாகவும் அமைந்துள்ளன. ‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே’ எனும் நிறைவுப் புகழ் திருப்பலியில் மட்டும் மன்றாடப்படுகிறது. இந்த ஏழு பகுதிகளுமே திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, கிறித்தவர்களின் வாழ்வியல் பாடமாக அமைகின்றன.
1. தந்தை இறைவனுக்கு இறைப்புகழ்ச்சி:
‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.’ ஓர் இறைவேண்டலின் தொடக்கமே இறைப்புகழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். நம் வேண்டலிலும் வாழ்விலும் கடவுள் நம் தந்தையாக இருக்கிறார் என்பதை இந்த முதல் பகுதி கூறுகிறது. “நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள்தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார். அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது” (கலா
4:6) என்னும் இறைமொழியை மெய்ப்படுத்துகிறது இம்மன்றாட்டு. இதனால் இதன் திருத்துவத்தன்மை வெளிப்படுகிறது. ‘என் தந்தையே’ என்று அழைக்காமல், ‘எங்கள் தந்தையே’ என்று அழைப்பதால், இது ஒரு சமூக இறைவேண்டலாகிறது. நம்மிடம் சகோதரத்துவம், சமத்துவம் மலர கோரிக்கை விடுக்கிறது இம்மன்றாட்டு.
இறைவனின்
திருப்பெயர் தன்னிலே தூயதாகத்தான் இருக்கிறது. இருப்பினும், “நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்” (எசே
36:23) என்னும் இறைவாக்கிற்கேற்ப, கடவுளின் வல்ல செயல்களால் அவரது பெயர் போற்றப்படட்டும் என்று நாம் மன்றாடுகிறோம்.
2. இறையாட்சிக்கு வரவேற்பு:
‘உமது ஆட்சி வருக.’ இதில் இரு வேண்டுகோள்கள் அடங்கியுள்ளன. நமது வாழ்வில் இறையாட்சி மலர வேண்டும் என்றும், அதேவேளையில் நிறைவு காலத்தில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் ஆட்சிக்காகவும் மன்றாடுகிறோம்.
3. இறைத்திருவுளம் மண்ணில் நிறைவேற
வேண்டல்:
‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல, மண்ணுலகிலும் நிறைவேறுக.’ கெத்சமனித் தோட்டத்தில் இயேசு வேண்டியதைப் போலவே, நாமும் இறைத்தந்தையின் திருவுளத்திற்கு நம்மைக் கையளித்து வாழ அழைக்கிறது இந்தப் பகுதி.
4. அன்றாட உணவுக்காக மன்றாட்டு:
‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.’ இப்பகுதியில் “என் கடவுள் கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்”
(பிலி 4:19) என்னும் நமது நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். மேலும், நமது உடல் வலிமைக்கான உணவுக்காக மட்டுமல்லாமல், இறைவார்த்தை, நற்கருணை என்னும் உணவுகளுக்காகவும் மன்றாட இப்பகுதி நம்மை அழைக்கிறது.
5. மன்னிப்பு வழங்கி, மன்னிப்புக்
கோரல்:
‘எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்.’ இங்கே கடவுளின் இரக்கத்திற்காக நாம் கெஞ்சி மன்றாடுகிறோம். அத்துடன், பிறரை மன்னிக்கும்போதுதான் கடவுளின் மன்னிப்பை நாமும் பெற முடியும் என்பதையும் இவ்வேண்டல் நமக்கு அறிவுறுத்துகிறது.
6. சோதனையிலிருந்து பாதுகாப்பு வேண்டல்:
‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.’ சிலருக்கு இம்மன்றாட்டு வியப்பாக இருக்கலாம். “கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்” (யாக்
1:13-14) என்று இறைமொழி தெளிவாகப் போதிக்கிறது. எனவே, சோதனையின் பாதையில் நாம் நடக்காதபடியும், பாவத்தின் தூண்டுதல்களில் நாம் வீழ்ந்துவிடாதபடியும் நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் மன்றாடுகிறோம்.
7. தீமையிலிருந்து விடுவிப்புக்
கோருதல்:
‘தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.’ தீயோனாகிய அலகையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க மன்றாடுகிறோம். தீயோன் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், அலகையை வென்று, நம்மை விடுவிக்கும் ஆற்றல் கொண்ட ஆண்டவரிடம் நம்மை ஒப்படைக்கிறோம். இந்த ஏழு மன்றாட்டுகளும் நம் வாழ்வில் நிறைவேறட்டும், ‘அப்படியே ஆகட்டும்’
என்பதற்காக, ‘ஆமென்’ என்று நிறைவு செய்கிறோம்.