news-details
கவிதை
கவிதைச் சாரல்

கைதூக்கி விட யாருமில்லை

என்பதாலோ

அங்கீகரிக்க மறுக்கிறார்கள்

என்பதாலோ

உன் தனித்துவம்

மறையப் போவதில்லை!

அமுதாய் ஊறும்

உன் திறன்களைத் தள்ளிட

யாராலும் இயலாது!

 

அஞ்ஞானம் 

அடிமைப்படுத்துகிறது

ஞானம்

அடங்கிப்

போகின்றது!

 

வலியது என்றே

வட்டமடித்துக்

கொள்கின்றன

கழுகும் காகமும்!

 

கடினமான சூழல்தான்

வலிமையான

ஆளுமைகளைப்

பிரசவிக்கும்!

 

பயன்தராத

செல்வம் விற்றுப்

பயன்தரு

கல்வி கற்கப் பின்

பயன்தரும்

கல்வியை விற்றுப்

பயனுறு செல்வம்

சேர்ப்பதும்

சேர்த்தலின்

சுழற்சியோ?

 

கான்கிரீட் காடுகளில்

மரிக்கிறது

புல் பூண்டுகளும்

காடு கழனிகளும்!

சிலரின் வறண்ட

கரடு முரடான

இதயங்கள் போலே!

 

உன்மீது வீசப்படும்

கல்லைச்  சிலையாக்கு!

சொல்லை வில்லாக்கு!

வானம் வசப்படும்!

 

பேசத் தெரியாத

காலமும் பேசும்!

பேசத் தெரிந்த

பலவற்றிற்கும்

பதில் சொல்வது

காலமே!

 

மலைமுகடும்

மழை மேகமும்

உணர்த்தும்

மித வேகத்தின் 

மழை மேகத்தின்

உயரத்தை!

 

பதக்கங்களும்

புத்தகங்களும்

பட்டயமும்  கேடயமும்

சான்றிதழும்

சன்மானமும்

மீண்டும் மீண்டும்

சிலருக்கே எனும்போது

அதன் நம்பகத்தன்மை

மதிப்பிழந்து போகிறது!

 

முத்துகள்

முந்துவதில்லை!

நிறைகுடம் ததும்பாது!

தன் நிழல் அறியா

ஆலயக் கலசங்களாய்

ஆயிரமாயிரம் பேராமே!

 

நம் நிஜங்கள்

தோற்கும் இடத்தில்

நம் நிழல் கூட

மண்டியிடக் கூடாது!

நம் உண்மை நிலை

தோற்கும் இடத்தில்

நம் பொய் முகம்

ஒன்றும்

ஜெயிக்கப் போவதில்லை!