news-details
தலையங்கம்
கல்வி: சமூகத்தின் திறவுகோல்!

ஒரு சமூகத்தின் உயர் ஒழுக்கங்களின் உண்மையான நெறிகாட்டி கல்வி. அவ்வாறே ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வினை மையம் கொண்ட சிந்தனை, அறம், உண்மை, ஆளுமை, பண்பாடு, ஒழுக்கம், இலக்கு, வெற்றி, உயர்வு என்பதற்கான திசைகாட்டியும் கல்வியே! ஆகவேதான், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கல்வி என்பது உண்மைகளைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; மாறாக, மனத்தைச் சிந்திக்கப் பயிற்றுவிப்பதாகும்என்கிறார். மனிதர்களின் நற்சிந்தனையும் நற்சொல்லும் நற்செயலுமே அதற்குரிய நல்ல அடையாளங்கள்.

இக்கல்வியே மனிதனுக்கு அறிவு, திறன்கள் மற்றும் தகவல்களை வழங்கும் ஒரு கருவியாக அமைகிறது. இது ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பம், சமூகம் மற்றும் தேசம் குறித்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் பார்வையை விரிவுபடுத்தி உலகைப் பரந்த, விரிந்த விசாலப் பார்வையோடு கண்ணோக்கக் கற்றுத்தருகிறது. நம்மில் படைப்பாற்றலை உருவாக்கி, புதிய உலகைப் படைக்க வழிகாட்டுகிறது.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதும், சமூகம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதும் கல்வியே. தனிமனிதருக்கு வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுக்கொடுத்து, சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்துவதும் கல்வியே. சமூகம் வளரவும், நன்கு செழித்தோங்கவும் அடிப்படைக்கூறாக அமைவது கல்வியே! மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற சமூகம் சார்ந்த வாழ்வியல் சூழலுக்கு விடைகாண்பது கல்வியே. படைப்பாற்றலை வளர்த்தெடுத்து, பல்வேறு தொழில் முன்னெடுப்புகளை முன்வைத்துதொழில்நுட்பங்களை வார்த்தெடுத்துச் சமூகத்தின் ஏற்றத்திற்கு வழிவகுப்பதும் புதுமைக்கு வித்திடுவதும் கல்வியே.

ஒளிமயமான எதிர்காலத்தைத் திறப்பதற்கான திறவுகோல் கல்வி; ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை அடையத் தேவையான அறிவையும் திறன்களையும் வழங்குவது கல்வியே! இது சிந்தனையைத் திறக்கும் திறவுகோல்; சிக்கல்களைத் தீர்க்கும் தர்க்கங்களை முன்வைக்கும் திறவுகோல்! கூட்டுணர்வை, பணிப்பகிர்வை, முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்தும் திறவுகோல்; சிறந்த வேலைவாய்ப்புகளைத் தந்து வாழ்வின் வளமான வழியைக் காட்டும் திறவுகோல்!

கல்வியே வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளம். வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதற்கும் நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கும் ஆற்றலை அளிப்பது கல்வியே. கற்றலால் சமூக இடைவெளி குறைந்து சமமான சமத்துவச் சகோதரத்துவ உலகைக் காண வழிவகுப்பதும் இதுவே.

எளிமையாக வாழ்வது, நேர்மையாக நடப்பது, தூய்மையாகச் செயல்படுவது, பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பது இவைதாம் நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த வாழ்க்கையின் இலக்கணங்கள். அவ்வாறே, கல்வி ஒருவரின் முகம், முகவரி தரும் சமூக அடையாளமாக இன்று உயர்ந்து நிற்கிறது. ‘கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புஎன்பது கல்வியின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. கற்பதன் மூலம் ஒருவரின் உள்ளார்ந்த திறமைகள் வளர்க்கப்படுகின்றன என்பதையும் கடந்து, அங்கே ஆளுமை புடமிடப்படுகிறது, சமூகக் கடமைகள் உணர்த்தப்படுகின்றன என்பதே கற்றலில் பொதிந்திருக்கும் பேருண்மை. இதுவே, இன்று கற்றலின் இலக்கணம்!

ஆயினும், அளவுகடந்த ஆசை, குறுக்குவழி, மனம்போன போக்கு, மலிவான சிந்தனை, சுயநல மனநிலை என உலகைச் சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் கல்வியின் மேன்மை சிதைந்துவிட்டதோ, சீரழிந்து விட்டதோ என்றே நம்மில் கேள்வி எழுகிறது. இவ்வேளையில், கல்வி குறித்த சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை என்பதுதான் பொய்மையின் நிழல் படாத உண்மை.

நீ படித்து என்னவாகப் போகிறாய்?’ என்ற கேள்விக்கு, அன்று சமூகச் சிந்தனை கொண்ட வாழ்வியல் அடையாளப்படுத்தப்பட்டது. ‘மருத்துவராக, ஆசிரியராக, காவல்பணியாளராக, இராணுவ வீரராக, அரசு ஊழியராகப் போகிறேன்...’ என்பதில் சமூகக் கடமையும் பொறுப்புணர்வும் தொக்கி நின்றது. ஆனால், இன்று கல்வியின் நோக்கமேபணம்-பொருள் ஈட்டுவது - அதுவும் விரைவாகவே, குறுகிய காலத்தில் அதிகமாக ஈட்டுவது என்றாகிப் போனது. இந்த மனநிலையை இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் யார் தந்தது? எது தந்தது? மற்ற உயிர்களிடமிருந்து மனிதனைப் பிரித்திருப்பது சிந்தனையும் சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் கல்வியும் என்பதைப் பல வேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம்.

வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் மகிழ்ந்திருப்பது. இந்த மகிழ்வுக்கான வழியை உணர்த்துவது கல்வியே! மலரைப்போல் மகிழ்ந்திருக்கவும், பழுத்த மரத்தைப்போல் பிறருக்கு மகிழ்ச்சி கொடுக்கவும் நம்மைப் பண்படுத்துவது கல்வியே! இக்கல்வி யாவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதில் அரசும் இச்சமூகமும் முன்னெடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே. கல்வி உரிமைச் சட்டம் - 2009 வாயிலாக 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக அரசு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கதே.

கடைக்கோடி மனிதனுக்கும் அடிப்படைக்கல்விஎன்னும் இலக்கு, வணிகக் கலாச்சார வாழ்வியல் சிந்தனையால் இன்று வியாபாரப் பொருளாகிவிட்டது. ‘பணம் படைத்தோர் பட்டம் பெறுகின்றனர்; பண மில்லாதோர் பரிதவிக்கின்றனர்என்ற சூழல் வளமான இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உயர்கல்வி என்பது பலருக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதும் வேதனையளிக்கிறது.

2022-ஆம் ஆண்டு இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, இந்தியாவில் 1,168 பல்கலைக்கழகங்களும், 45,473 கல்லூரிகளும் அமைந்திருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் ஏறத்தாழ 4.33 கோடி மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் ஏழை, பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, ஆதிக்குடி மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!

கல்வி, கல்வியின் தரம், கற்றல் வழிமுறை, பாடத்திட்டம், மொழிக்கொள்கை, ஆசிரியர் நியமனம், துணைவேந்தர்கள் நியமனம், கல்வியில் கலக்கும் காவி, தனியார் பள்ளிகளின்மீது திணிக்கப்படும் வரைமுறையற்ற சட்டம்-ஒழுங்குகள் எனும் அன்றாடச் செய்திகள் கல்வி குறித்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சீரான எண்ண ஓட்டங்களை, சிறப்பான சிந்தனைகளை, வளமான வழிகாட்டுதலை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான கல்வியியல் திட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

உண்மையை ஒதுக்கும்போது, நம் விடியலுக்கான கூறுகள் முடங்கிப்போகின்றன; விடுதலைப் பயணம் முடிந்துபோகிறது. இன்றைய காவிச்சிந்தனையால் கல்வியியல் முறை சிதையுறும் வேளையில் நாளைய உலகின் எதார்த்த நிலைகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற, சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மேலும், என் மாநிலம், என் மக்கள், என் இனம் என்னும் கூறுகளால், வட மாநிலங்களில் இன்று நுழைவுத்தேர்வுகள் முதல் அரசுப் பணியாளர் தேர்வுகள் வரை நடைபெறுகின்ற வரைமுறையற்ற குற்றச்சூழல்கள் இந்திய நாட்டில் எல்லாருக்குமான கல்விவாய்ப்பு, எல்லாருக்குமான வேலைவாய்ப்பு, சமத்துவம், சகோதரத்துவம், எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்னும் பல்வேறு கூறுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவுப் பரிமாற்றம் மேற்கொள்ளும் கற்றல், கல்விமுறை, இன்று சுயநலம், வெறுப்பு, பகைசாதியம், இனம், அரசியல், கட்சி எனும் பல கூறுகளால் சிதைந்து வருவதால் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பொறாமையும் போட்டியும் வன்மமும் வன்முறையுமே கடத்தப்படுகின்றன. கல்வியின், கல்விக்கூடங்களின் நோக்கம் அதுவல்ல; கல்வி என்பது இருள் விலக்கும் ஒளிச்சுடர்! தீமையை, தீயவையை அகற்றும் சிற்பக்கூடம்; அல்லவை நீக்கி நல்லவைப் பயக்கும் ஆய்வுக்கூடம்.

தனிநபரின் நலமான வாழ்வையும், சமூகத்தின் வளமான வாழ்வையும் தந்திடும் கல்வி என்னும் சமூகத் திறவுகோல் எல்லாருடைய கரங்களிலும் கிடைக்கவும், அது அடிப்படை உரிமை என்பதை உணர்த்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

கல்வி என்னும் திறவுகோல் யாவர் கையிலும் கிடைக்கட்டும்; சமூகம் மாண்புடன் மலரட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்