news-details
ஞாயிறு தோழன்
மூவொரு கடவுள் பெருவிழா (15-06-2025) (மூன்றாம் ஆண்டு) நீமொ 8:22-31; உரோ 5:1-5; யோவா 16:12-15

திருப்பலி முன்னுரை

திரு அவை இன்றைய நாளில் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூவொரு கடவுளின் பிரசன்னம் நமது வாழ்விற்கு உந்துசக்தியாக இருக்கிறது. மூவொரு கடவுளின் தன்மையே மனிதருக்குள் உறவுகளை ஏற்படுத்துகிறது. மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனித இனத்தை வழிநடத்துவதற்கான அடிப்படை அச்சாரமாகத் திகழ்கிறது. அன்றாடம்தந்தை, மகன்தூய ஆவியார்என்று உச்சரிக்கும்போதுதந்தைஎன்று கூறி நெற்றியில் கைவைக்கிறோம். இது தந்தை கடவுள் உலகத்தைப் படைத்தவர் என்பதையும், மகன் என்று சொல்லி நெஞ்சில் கை வைக்கிறோம்; இது இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நமக்காக இரத்தம் சிந்தி மீட்டார் என்பதையும், தூய ஆவியார் என்று கூறும்போது தோள்களிலும் கைவைக்கிறோம். இது தூய ஆவியார் நமக்கு ஆற்றலைத் தருபவராக இருக்கிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளதுநாம் எந்த ஒரு வழிபாட்டு நிகழ்வையும் மூவொரு கடவுளின் துணையோடு துவங்குகிறோம். மூவொரு கடவுளின் துணையோடு நிறைவு செய்கின்றோம்ஆள்தன்மையில் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தெய்வத்தன்மை உடையதுதான் மூவொரு கடவுளின் கொள்கை. ஒரே கடவுள் மூன்று ஆள்கள் என்ற நம்பிக்கையில் நாளும் வாழவும் வளரவும் வரம் வேண்டுவோம். பேரறிவான தந்தையும், பேரன்பான இயேசுவும், பேராற்றலான தூய ஆவியும் தொடர்ந்து நம்மை வழிநடத்த செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

படைப்புகள் அனைத்தும் இறைவனின் கலை நயம். இறைவனின் அளப்பரிய நன்மைத்தனத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவி. எதனையும் எவற்றோடும் ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்தன்மையோடு ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. படைப்புகள் அனைத்தும் கடவுளின் சாயலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மூவொரு கடவுளின் செயல்பாடு, படைப்புகள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வைப் பெற்றுள்ள நாம், வாழ்க்கையில் வருகின்ற துன்பங்கள், இக்கட்டுகள், இடையூறுகள், சோதனைகள் அனைத்திலும் இயேசு விடுதலை தருவார் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அவருக்காக, அவரோடு வாழ்வதில் பெருமகிழ்ச்சி அடைய வேண்டும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்திலும் ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பு நம்மோடு இருக்கிறது என்ற எதிர்நோக்கில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மூவொரு இறைவா! இயேசுவின் மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் உம்மில் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான அருளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மூவொரு இறைவா! நீவிர் மூன்று ஆள்களாக இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயலாற்றுவதைப்போல, உம் திருமுன் கூடிவந்துள்ள நாங்கள் வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டுள்ள நாங்கள் துன்பங்கள், சோதனைகள் மத்தியிலும் உமக்குச் சான்று பகர்ந்திட தேவையான வல்லமையை எமக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மூவொரு இறைவா! தந்தையாம் இறைவனின் இறையருளும், மகனாம் இயேசுவின் அன்பும், தூய ஆவியாரின் வரங்களும் கனிகளும் நிரம்பப்பெற்று நாங்கள் வாழவும், எங்கள் குழந்தைகளையும் இறைநம்பிக்கையில் வளர்த்தெடுக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.