“வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கவே கூடாது என்று தோன்றுகிறது. பல இழப்புகளையும் ஏமாற்றங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், என் 76-வது வயதில் எதிர்கொள்கின்ற இந்தப் பிரிதல் அப்படியோர் இரணத்தை மனத்திலே ஏற்படுத்துகிறது.
என்
மகள் திருமணம் செய்துகொண்டு, சென்றபோதுகூட இத்தனை வேதனையை நான் அடைந்ததில்லை. ஒருநாள் மகனும் மருமகளும் ‘வெளிநாடு செல்கிறோம்’ என்று
என்னிடம் தயக்கத்தோடு வந்து நின்றபோது, ‘சந்தோசமா போங்க’ என்று வாழ்த்திதான் அனுப்பினேன். வயோதிக நிலையில் மனைவி கனகமும் நானும் தனிமையில் இருந்தபொழுதுகளில் ஒருநாள்கூட இவ்வளவிற்கு மனம் வருந்தியதில்லை.
‘வீட்டுல ஒரு நாய் இருந்தா உங்களுக்குக் கொஞ்சம் நேரம் போகும்; கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருக்கும்’
என்று விருந்துக்கு வந்த என் மகள் ஒரு நாய்க்குட்டி கொடுத்துவிட்டுப் போனாள். தொடக்கத்தில் ‘நம்மையே நாம் பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதில் நாய் வேற?’ என்றுதான் எண்ணினேன்.
வாலாட்டி
நன்றியுணர்வை வெளிப்படுத்துவதில், சொன்னதைச் செய்ததில், பாதுகாப்பதில், பாசத்தை வெளிப்படுத்துவதில், கொடுப்பதைக் குறை சொல்லாமல் சாப்பிடுவதில் என்
பிள்ளைகளைவிட மேல் என்றுதான் சொல்வேன்.
நான்
தூரமாக வரும்போதே கேட் பக்கத்தில் ஓடிவந்து அணைத்துக்கொள்கிறது. யாராவது வந்தால் குரைத்தே சிக்னல் தருகிறது. என்னோடு விளையாடுகிறது. ‘வாக்’ போகிறது. பேப்பர் படிக்கும்போது பக்கத்திலேயே பேசாமல் படுத்துக்கொள்கிறது. என்னதான் என்னோடு இருந்தாலும், ஒருநாள் கூட வீட்டுக்குள் வந்ததில்லை. அந்தக் கட்டுப்பாட்டையும் அது தெரிந்து வைத்திருந்தது.
சென்ற
வாரம் திங்கள்கிழமை பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். காலில் சுளுக்கு. எழுந்து நடக்க முடியவில்லை. டாக்டர் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டார். என் மகள் ‘அப்பா! அம்மாவும் நீங்களும் கொஞ்சம் நாள் என்கூட வந்திருங்க. கால் சரியான பிறகு வீட்டுக்குப் போகலாம்’ என்றாள். என்னைப் பார்த்துக்கொள்கிற நிலையில் என் மனைவியும் இல்லை. அதனால் அவள் கூறியது சரியாகத்தான் பட்டது. ஆனால், நாயை என்ன செய்வது? என்பது பெரும் விவாதமாகவே இருந்தது. மகள் வீட்டுக்குக் கொண்டு போகலாமென்றால், ஏற்கெனவே அங்கு இரண்டு பெரிய நாய்கள் உள்ளன. கடித்தே இதனைக் கொன்றுபோடும். யாரிடமாவது கொடுத்துவிட லாமா? என்று மனைவி கேட்டாள். நம் காலடியிலேயே கிடந்தது மற்றொருவரின் காலடியைச் சுற்றி வருவதைப் பார்க்க எப்படி மனம் வரும்? ‘சாப்பாட்டில் விசம் கலந்து கொடுத்துவிட்டுக் குளத்துக் கரையில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டியதுதானே?’ என்றான் நலம் விசாரிக்க வந்த பக்கத்து வீட்டுக்காரன்.
‘இவர்களுக்கெல்லாம் எப்படிதான் இப்படிப் பேசமுடிகிறதோ?’ என்றிருந்தது. இந்த நாயை என்னதான் செய்வதென்று அறியாது நான் தவித்து உட்கார்ந்திருந்தபோது, என் வீட்டுக்குள் முதல்முறையாக வந்து என் காலடியில் படுத்துக்கொண்டது. அது ‘என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே’ என்று
சொல்வது போலிருந்தது. முதியவர்களை முதியோர் இல்லம் அனுப்புவதைப்போல, என் நாயைக் கடைசியாக நானே என் நண்பர் ஒருவரிடம் கனத்த இதயத்தோடு கொடுத்தனுப்பினேன்.
ஒருநாள்
நான் என் மகள் வீட்டில் இருக்கையில் என் நண்பன் மகன் போனில், ‘அங்கிள்! நீங்க கொடுத்த நாய் எங்கேயோ ஓடிப்போச்சு’ என்றான்.
அன்றைய நாள் மழை நாளில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல என் உயிர் அடித்துச் செல்லப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தேன். என் நாயைத் தேடிச்செல்ல எனக்கு வலுவில்லை. எனினும், என் நாய் என்னை ஒரு நாள் தேடிவரும் என்னும் நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறேன்.”
முதியவர்
தன்னோடு இருந்த நாய் இல்லாமல் வாழ முடியாத சூழல் உருவானதைப்போல, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் இனி வாழவே முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கல்வி, மருத்துவம், ஊடகம், கட்டுமானம், அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனால், இத் துறைகளில் பணி செய்கின்ற பலரும் தங்கள் பணியை இழக்கின்ற அபாயச்சூழல் நிலவுவதை உணர்கின்றனர்.
1930-ஆம் ஆண்டு
ஜான் மேனார்ட் கேய்னஸ் (John Maynard Keynes) ‘தொழில்நுட்ப
வேலையின்மைக் கோட்பாடு’
(Technological Unemploy ment
Theory) எனும்
கோட்பாட்டை முன்மொழிந்தார். அக்கோட்பாட்டின் அடிப்படைக்கூறு என்னவெனில் ‘தொழில்நுட்ப மாற்றம் வேலையிழப்புக்கு வழிவகுக்கும்’ என்பதாகும்.
சிலர் இக்கோட்பாட்டைக் காலாவதியானது என்று விமர்சிப்பதும் உண்டு.
எந்தவொரு
தொழில்நுட்ப வளர்ச்சியும் இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்: 1. தொழிலாளர்கள் முன்பு செய்த பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இடம்பெயர்வர் (Displacement Effect). 2. தொழில்நுட்ப
வளர்ச்சியினால் எழும் தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு கூடும் (Productivity Effect).
அண்மையில்
வெளியிடப்பட்ட ‘எதிர்கால வேலைவாய்ப்புக்கான அறிக்கை’
(Future of Jobs Report) 2020-இன்
அடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்குள் 85 மில்லியன் பணியிடங்கள் காலியாகும் என்றும், 97 மில்லியன் பணியிடங்கள் புதிதாக உருவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகத்தில்
எது மாறுகிறதோ இல்லையோ தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கின்றது. மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும், அதன் பரவலாக்கமும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. எனவே, வேலையிழப்பு அதிகமாக ஏற்படும் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோன்று புதிய வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
செயற்கை
நுண்ணறிவு நம் வேலைகளை எடுத்துக்கொண்டாலும், வேறு புதிய வேலை வாய்ப்புக்கான தளங்களை உருவாக்கித் தருகிறது. இவ்வேலைவாய்ப்புச் சூழலை எவ்வாறு நமதாக்கப் போகிறோம்? என்பதுதான் நம்முன் வைக்கப்படுகின்ற கேள்வி.
இன்றைய
சூழலில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஆசிரியர், ஏ.ஐ. தெரிந்த
ஆசிரியரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஊடகவியலாளர், ஏ.ஐ. தெரிந்த
ஊடகவியலாளரிடம் தன் வேலையை இழப்பார். ஏ.ஐ. தொழில்நுட்பம்
தெரியாத ஐ.டி. பணியாளர்
ஏ.ஐ. தெரிந்த மற்றுமோர்
ஐ.டி. பணியாளரிடம் தன் வேலையைப் பறிகொடுப்பார். எனவே, காலத்திற்கேற்ப நம் அறிவையும், நம் திறனையும் வளர்த்துக்கொள்வது (Upskilling) மிகவும்
முக்கியமானது. இல்லையேல் வேலையில்லாப் பட்டதாரி பட்டியலில் நம் பெயரும் இடம்பெற்று நம் வாழ்க்கையே நாய் பிழைப்பாக மாறக்கூடும்.