மே மாத வெயில் உச்சந்தலையைப் பிளக்க, காலில் தேய்ந்துபோன செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டு, கையில் பச்சை நிறத்தில் கொடி ஒன்றைப் பிடித்தநிலையில் நின்றான் இராமச்சந்திரன். ஆறு வழிச் சாலை வழியாகப் போகின்றவர்களை ஹோட்டலுக்குச் சாப்பிட அழைப்பதுதான் அறுபது வயது இராமச்சந்திரனின் வேலை.
வேலையில்
சேர்ந்த தொடக்கத்தில் இராமச்சந்திரனுக்கு இந்த வேலை பிடிக்கவே இல்லை. “கொரோனா காய்ச்சல் வந்ததிலிருந்து வேறு எந்த வேலையையும் செய்ய முடியல; அதான் இந்த வேலைக்குச் சம்மதிச்சேன்” - ஏ.டி.எம்.மில்
செக்யூரிட்டி வேலை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் இதையே அடிக்கடிச் சொல்வார். மணிகண்டனும் அவருடைய வயதுக்காரர் என்பதால் அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையும், கடுத்துப்போகும் கால்களும், கண்டுகொள்ளாமல் செல்லும் ஓராயிரம் பார்வையும் போகப்போக இராமச்சந்திரனுக்குப் பழகிப்போயின. ஒருசிலர் மட்டும் வெயிலில் காய்ந்தச் செடிக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பதுபோல பாவம் பரிதாபம் பார்த்து அஞ்சோ... பத்தோ அவருக்குக் கொடுப்பார்கள். இராமச்சந்திரன் வேலை முடிந்து ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்பும் நேரத்தில் தனக்குக் கிடைத்த வடை அல்லது அவித்த கடலையை மணிகண்டனிடம் பகிர்ந்துகொள்வார். இருவரும் நேரம் போவது தெரியாமலே சிறுபிள்ளைகள்போல பேசிக்கொண்டிருப்பர்.
ஒருநாள்
வழக்கம்போல இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாக வீடு திரும்புகையில் “டேய், இராமச்சந்திரா, எப்படிப் போகுது? உன் காட்டுல டிப்ஸ் மழைபோல”
- மணிகண்டன் நக்கலாகவே கேட்டார்.
“உனக்கென்னப்பா சூடுனா ஏசி அறையிலபோய் குந்திக்கிற. காலுல, இடுப்புல பெல்ட்டு, மிலிட்டரி சட்டை வேற... நமக்கு அப்படியா? வெயில் மழைனு பிச்சக்காரப் பொழப்புதான்” - இராமச்சந்திரனின்
பதிலில் கொஞ்சம் வலியும் கொஞ்சம் பொறாமையும் அவர் மென்று துப்பிய வெற்றிலைப் பாக்குபோல சேர்ந்தே வெளிப்பட்டன.
பதிலுக்குப்
பதில் பேசியேதான் ஆகவேண்டுமா! சில பேச்சுகளை மனிதர்கள் காதில் வாங்காமல் கடந்துபோனால்தான் என்ன? ஆனால், இராமச்சந்திரனின் நக்கல் பேச்சைக் கேட்ட பிறகும் அவர் துப்பிய எச்சில் தன்மேலே விழுந்ததுபோல உணர்ந்த ஏ.டி.எம்.
மணிகண்டனால் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியவில்லை. அவனது உள்ளமும் உதடும் ஆயிரங்களில் ரூபாய் எடுக்கும்போது அலறித்துடிக்கும் எ.டி.எம்.
மெஷினைப்போல குலுங்கி அடங்கியது. அன்றிலிருந்து இரண்டு பேரும் பார்த்தாலும் பேசிக்கொள்வதில்லை. இராமச்சந்திரன் ஏ.டி.எம்.
வழியாகப் பலமுறை கடந்து சென்றாலும் அத்தனை முறையும் தன்னை முறைத்துப் பார்ப்பது போலவே மணிகண்டனுக்குத் தோன்றியது.
இராமச்சந்திரனுக்கும்
மணிகண்டனுக்குமிடையே ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் பொதுமொழி வறுமையும் முதுமையும்தான். ஒருநாள் காலை வேளையில் ஏ.டி.எம்.
மிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. போலிஸ்காரர்கள், வியாபாரிகள் என்று பெருங்கூட்டம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த இராமச்சந்திரனும் கூட்டத்தோடு வந்து நின்றுகொண்டான். சில காவலர்கள் மணிகண்டனிடம் ஏதோ திருடனிடம் விசாரிப்பதுபோல மூர்க்கமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். நண்பனைப்போல பேசிப் பழகியிருந்தாலும் குற்றவாளியைப் போன்று விசாரிக்கப்பட்ட மணிகண்டனை ‘இவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’
என்ற கோணத்திலேயே பார்த்தான் இராமச்சந்திரன்.
தீவிர
விசாரணையிலிருந்த மணிகண்டனின் பார்வை ‘சட்’டென்று கூட்டத்தில் நின்ற இராமச்சந்திரனின் மேல் விழுந்தது. ‘நான் திருடியதாக இராமச்சந்திரன் நினைத்திருப்பானோ?’ என்று மணிகண்டன் நினைக்கையில், ‘போலீசிடம் என் பெயரைச் சொல்லி என்னை மாட்டிவிட்டாலும் விடுவான் இந்த மணிகண்டன்’
என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சென்றான் இராமச்சந்திரன்.
வாழ்க்கையில்
ஏதோ ஒன்று இடைவெளியை உருவாக்குகிறது. ஏதோ ஒன்று இடைவெளியைப் போக்குகிறது. அந்த ஏதோ ஒன்று நாம்தான்.
பிரிவு,
பிளவு மனித உறவுகளில் மட்டுமல்ல, அது தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிலும் அதன் பரவலாக்கத்திலும் இருக்கிறது. இதனை ‘எண்ணிம இடைவெளி’
(Digital Divide) என்கிறோம்.
இராமச்சந்திரனும் மணிகண்டனும் அருகருகே பணி செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதுபோல ஒரே நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நம்மிடையே பல்வேறு இடைவெளிகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது ‘எண்ணிம இடைவெளி.’ கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கணினி (Computer), மடிக்
கணினி (Laptop), கைக்கணினி
(tablet), திறன்பேசி (Smart phone),
திறன் கடிகாரம் (Smartwatch), செவிப்பேசி
(Ear phone),
இணையம் (Internet) என்று
பலவிதமான திறன்பொருள்கள் (Gadgets) வந்தபோதும்
அது இன்னும் எல்லாருடைய பயன்பாட்டிற்கும் வந்து சேரவில்லையென்றே கூற வேண்டும்.
இந்த
‘எண்ணிம இடைவெளி’ என்பது ஏழ்மைச் சூழலினாலும், புவியியல் அமைப்பினாலும், மின்மய மாக்கலின்மையினாலும், தலைமுறை இடைவெளியினாலும், ஆண்-பெண் சமத்துவமின்மையாலும், கல்வியறிவு குறைபாடாலும் ஏற்படலாம். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சியென்பது இந்த இடை வெளி குறைகிறபோது நிச்சயம் நடக்கும்.
கொரோனா
காலகட்டத்தில் வசதியான குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், ஏழ்மையில் வாடிய மாணவர்கள் இணையவழிக் கல்வியின் பயன்பாட்டை முழுமையாகப் பெறமுடியவில்லை. இந்த டிஜிட்டல் இடைவெளியைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ‘இது கல்விகற்கும் மாணவர்களுக்கு எதிரான ஓர் அடிப்படை உரிமை மீறல்’ என்று குற்றம்சாட்டியது.
‘ஆக்ஸ்பாம் இந்தியா’
(Oxfam India) என்ற
அமைப்பு 2022-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் வெறும் 31 விழுக்காடு கிராமப்புற மக்களிடமும், 67 விழுக்காடு நகர்ப்புற மக்களிடமும் இணையப் பயன்பாடு உள்ளது என்பது தெரிய வருகிறது. நகர்ப்புறம் தொழில்நுட்பக் கூறுகளாலும் டிஜிட்டல்மயமாகுதலாலும் தாங்கிப் பிடிக்கப்படுகிறபோது, கிராமப்புறங்கள் இன்னும் மனிதக் கண்டுபிடிப்புகளைத் தங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பயன்படுத்த முடியாத சூழலை என்னவென்று கூறுவது?
இணையமும்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இன்று கற்றோரையும் பொருள் பெற்றோரையும் இன்னும் அதிகமாக உயரச் செய்கிறதே தவிர, ஏழைகளையும் எளியவர்களையும் கண்டுகொள்ளாமலேயே இருக்கின்றது. இந்நிலை மாறி செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் மனித மாண்பைப் பேணுவதாகவும், மனித ஆற்றலை வளர்ச்சியடையச் செய்வதாகவும் இருக்கவேண்டும்.
பள்ளி-கல்லூரிகளில் டிஜிட்டல் கல்விமுறையை அறிமுகமாக்குவது, கிராமப்புறங்களில் இணையக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, தாய்மொழிகளில் கணினி பற்றிய பாடத் திட்டத்தை வரையறுப்பது, ‘சைபர்’ பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பயிலரங்குகள் நடத்துவது, செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவுகளைக் கொடுப்பது போன்ற செயல்களின் வழியாக டிஜிட்டல் இடைவெளியை நம் பகுதிகளிலே இல்லாமல் செய்யலாம். மனித இடைவெளியினை இதயத்தால் இணைப்போம்! டிஜிட்டல் இடைவெளியினை இணையத்தால் இணைப்போம்!