news-details
ஆன்மிகம்
விதையும் வார்த்தையும் (திருத்தந்தையின் மறைக்கல்வி உரை)

அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற நமது திருத்தந்தை 14-ஆம் லியோ, தனது பணியில் தன் முன்னோடிகளின் வார்த்தைகளை அவ்வப்போது மேற்கோள்காட்டி, இறைப்பணியில் திரு அவை பயணித்த பாதையைப் பக்குவப்படுத்தும் பணியாளராய் தோற்றமளிக்கிறார்.

கடந்த மே 13 அன்று உரோமில் உள்ள புனித அகுஸ்தினார் சபையின் தலைமையகத்தில் உரையாற்றிய அவர்கடவுளில் ஓர் இதயமும் ஒரே உள்ளமும்என்ற புனித அகுஸ்தினார் சபையின் ஆன்மிகத் தத்துவக் கருத்தை வெளிப்படுத்தினார்.

மே 15 அன்று கிறித்தவப் பள்ளிகளின் சகோதரர்களைச் சந்தித்த திருத்தந்தை கல்வி கற்பித்தலின் வாயிலாக நற்செய்தி அறிவித்தல், நற்செய்தி அறிவித்தலின் வாயிலாகக் கல்வி கற்பித்தல் அவசியம் என்றும், புனித ஜொவான்னி பத்திஸ்தா தெலசாலைப்போலக் கற்றலில் புதிய வழிகளைக் கண்டறியவேண்டும் என்றுரைத்தார்.

திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவர்கள் கத்தோலிக்கப் பள்ளி நிறுவனங்களுக்கான விதிகளை அங்கீகரித்த திரு அவை பிரகடனத்தின் மூன்றாம் நூற்றாண்டு (ஜனவரி 26, 1725) மற்றும் திருத்தந்தை 12 -ஆம் பயஸ், புனித ஜான் தெ பாப்டிஸ் தெலசால் அவர்களை அனைத்துக் கல்வியாளர்களின் பாதுகாவலராக நியமித்த 75-வது ஆண்டு (மே 15, 1950) ஆகியவற்றை முன்னிட்டு கத்தோலிக்கப் பள்ளி நிறுவனங்களைச் சந்தித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மே 18 அன்று தன் திருத்தந்தை திருநிலைப்பாட்டு நிகழ்வில், திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்று செபித்தது, திரு அவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் பேதுரு, அவரது மறைச்சாட்சியான வாழ்வு போன்றவற்றோடு நெருங்கிய தொடர்பைப் புதிய திருத்தந்தை அவர்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது.

தனது முதல் மறையுரையில் புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளானஆண்டவரே, நீர் எங்களை உமக்காகவே படைத்தீர்! எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறுதல் அடையும் வரை ஓய்வெடுக்காதுஎன்றுரைத்தார்.

மே 19 அன்று கிறித்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையிலான சிறப்பு உறவு பற்றி உரையாற்றிய திருத்தந்தைஉலகளாவிய உடன் பிறந்த உணர்வு என்ற சிறப்பம்சங்களின் உரிமையாளர்கள்என்று திருத்தந்தை புனித 23-ஆம் யோவான் மற்றும் தனது மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

இவ்வாறு தான், திருத்தந்தையாகப் பதவியேற்றது முதல் தன் முன்னோடிகளின் வழிநடக்கும் நம் திருந்தந்தை 14 -ஆம் லியோ அவர்கள் கடந்த மே 21, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் விதைப்பவர் உவமை குறித்த கருத்துகளைத் திருப்பயணிகளுக்குத் தனது முதல் மறைக்கல்வி உரையின்போது எடுத்துரைத்தார்.

யூபிலி ஆண்டு 2025- முன்னிட்டு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்குஎன்ற தலைப்பில் தொடங்கப்பட்ட தொடர் மறைக்கல்வியை ஏறக்குறைய 14 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார் திருத்தந்தை 14 -ஆம் லியோ.

ஒரு விதை எவ்வாறு வளர்ந்து, மரமாக விருட்சம் பெறுகிறதோ அதேபோல தன் முன்னோடிகளின் வார்த்தைகளை வாழ்வாக்கும் திருத்தந்தை, எதிர்காலத் திரு அவையே இறைவார்த்தையில் வித்திடும் வகையில் மத்தேயு 13:1-9-யில் வரும் விதைப்பவர் உவமையை மையமாகக் கொண்டு மறையுரையாற்றினார்.

இதில் விதைப்பவர் உவமையின் வழியாக இயேசுவின் தொடர்புகொள்ளும் முறையை நாம் அடையாளம் காண முடிகின்றது. இக்காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு இவ்வுவமையானது நமக்கு அதிகம் கற்பிக்கின்றது என்றார். உண்மையில் நற்செய்தியில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் நம் வாழ்க்கை என்னும் நிலத்தில் வீசப்படும் விதை போன்றதாகும். உவமையில் குறிப்பிடப்படும் மண் என்பது நம் இதயம். இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது. வாழ்வின் ஒவ்வோர் எதார்த்தத்தையும் வாழத்தூண்டுகிறது.

இயேசுவின் வார்த்தை பொதுவாக எல்லாருக்குமானது. ஆனால், அவ்வார்த்தைகள் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ‘வீணாகவிதையை வீசும் விதைப்பவரின் செயலானது கடவுள் நம்மேல் அன்பை வீசும் செயலுக்கான ஓர் உருவகமாகும். இயேசுவே வார்த்தையாகவும் விதையாகவும் இருக்கின்றார். நம் வாழ்க்கையை மாற்றுவதற்காக இறக்கவும் தயாராக இருக்கிறார் என்றார்.

இன்றைய வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையில் கடவுளின் வார்த்தை நம்மை வந்தடைகிறது எனச் சிந்திப்போம். நாம் ஒரு வளமான மண் அல்ல என்பதை உணர்ந்தோமானால், நாம் சோர்வடையாமல், நம்மை ஒரு சிறந்த நிலமாக மாற்றுவதற்கு முயற்சிப்போம்.

வார்த்தையின் விதை

இன்றும் நம்மில் பல கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்களில் கடவுளின் வார்த்தையை மதிக்கவும் வணங்கவும் தங்கள் இல்லங்களில் திருவிவிலியத்தை வைத்திருப்பது மதிக்கத்தக்க செயலாகும். அதேவேளையில், அவர்களுக்கு இறைவார்த்தையைப் படித்துத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சிந்தையிலும் சொற்களிலும் செயல்களிலும் பயன்படுத்த வேண்டும்.

கடவுளின் வார்த்தை மிகவும் வலிமை வாய்ந்தது; ஆனால், அதேவேளையில் அதைப்பெற்று நடைமுறைப்படுத்தும்படி நம்மைக் கெஞ்சும் அளவுக்கு மிகவும் பணிவானது.

யூபிலி 2025-ஆம் ஆண்டில் மையமானஇயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்குஎன்னும் வார்த்தை முழக்கம் கொண்டு, இறைவனால் நம்மில் விதைக்கப்பட்ட வார்த்தை என்னும் விதையை நமதாக்குவோம், வாழ்வாக்குவோம்.