‘ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல்’ - இது இந்தியாவெங்கும் ஓங்கி ஒலிக்கும் ‘ஒற்றை’ முழக்கம்!
‘ஒரே’ அல்லது ‘ஓர்’ அல்லது ‘ஒன்று’ என்பது ஒரு வசீகரமான சொல் என்பதில் ஐயமில்லை. எங்கும் நிறைந்த பரம்பொருளை ‘ஒருவன்’ என்கிறோம். ‘ஒன்று’ என்ற சொல்லுக்கு ‘உயர்வு’ அல்லது ‘ஒப்பற்ற’ என்ற பொருள்களும் உள்ளன. ‘இந்தியா’ எனும் நாடு ஒன்று; அதன் மக்கள் ஒன்று; புவிப் பரப்பு ஒன்று. இவ்வொன்றின் உள்ளடங்கிய பொருள் பல சிறப்புகளை உள்ளடக்கியதால்
மக்களைக் குறிப்பாக, குடிமக்களை எளிதாக ஈர்க்க முடிகிறது.
ஒருவன்,
ஒன்று, ஒற்றை என்ற சொற்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல; இந்தச் சொற்களின் பின்னே ஒரு கலாச்சாரம் இருப்பதையும், இதன் பின்னே ஓர் அரசியல் இருப்பதையும் காணமுடியும். இந்தப் பின்னணியையும் கண்டுகொள்ள முடியாதவர்கள், கண்டுகொள்ளும் ஆற்றல் பெற்ற வகையில் இவ்வழகிய சொல்லை அறிமுகம் செய்கிறவர்கள் பார்த்துக்கொள்கின்றனர். ஒன்று என்ற சொல் இரண்டினை மறுப்பது; இரண்டு என்பது மற்றொன்றின் இருப்பை ஏற்பது! எளிமையாகக் கூறுவதானால் அல்லது இன்றைய அரசியல் வழக்கில் கூறுவதானால் பன்மையை மறுப்பது!
ஒருமை
அல்லது பன்மை என்பது வெறும் சொற்கள் அல்ல; பன்மை என்ற சொல் மற்றொன்றை ஏற்பது. இன்னொன்றை ஏற்பதில் சமூக உணர்வு இருக்கிறது. ஒற்றையில் அல்லது ஒன்றில் தொக்கி நிற்கும் பண்பு எது?
ஒற்றை,
ஒன்று என்பது எதேச்சதிகாரத்தின் வடிவம். ‘நான்’
(I am) எனும்
இச்சொல்லில் ‘நாம்’ இல்லை. ‘நாம்’ என்ற சொல் உள்ளடங்கும் சொல். நாம் என்ற சொல் அனைவரையும் உள்ளடக்கியது என்பதுபோல், ஒன்றைத் தவிர்த்து இரண்டு என்ற சொல்லிலும் உள்ளடங்கும் சொல்லிலும் உள்ளடங்கிய பண்பு (Inclusiveness) உண்டு.
‘ஒன்று’ என்பது சனநாயகத்திற்கு முரணானது. ‘நான்’ என்ற சொல்லில், ‘நான்’ என்ற சொல் உள்ளடக்கும் ஒற்றையில், பன்மை இல்லாதபோது அங்குச் சனநாயகம் இல்லை.
‘சனநாயகம்’
என்றால் என்ன?
சனநாயகம்
ஒற்றையை ஏற்பதல்ல; சனநாயகம் பன்மையை மதிப்பது. பன்மைச் சமூகங்களின் சமப் பங்கேற்பை மதிப்பது. சமம் என்பது, சமத்துவம் என்பது இதன் உயரிய விழுமியம். பன்மைச் சமூகங்களின் மாண்பு சனநாயகத்திலும்தான் மிளிர்கிறது. பன்மைச் சமூகத்தின் மாண்பு அல்லது மரியாதை அதன் பன்முகப் பண்பைப் போற்றுதலில்தான் உள்ளது. இன்றைய இந்திய ஒன்றிய அரசு, மக்கள் முன்பு வைக்கும் ‘ஒற்றை’ அல்லது ‘ஒரு’ அல்லது ‘ஒன்று’ எனும் பெருமுழக்கத்தின் உள்ளடக்கம் சனநாயக மறுப்பு என்பதனைப் புரிந்திருக்கிறோமா?
ஒற்றையும் ஒற்றுமையும்
‘ஒற்றை’ ஒற்றுமையை உருவாக்க முடியாது. பன்மையைப் போற்றலில் ஒற்றுமையை உருவாக்க முடியுமே தவிர, பன்மையை மறுத்த சமூகம் ஒற்றுமையை உருவாக்காது. எனவேதான் ‘வேற்றுமையுள் ஒற்றுமை’ என்கிறோம். ஒரு சமூகம் எப்போதுமே ஒற்றைச் சமூகமாக இருக்க முடியாது. சமூகத்தின் அழகே அதன் பன்மைக்குணம்தான். பன்மைச் சமூகங்கள் தம் தனித்த அடையாளங்களைக் காக்கின்ற உரிமை பெறுகின்றபோது, நிலவும் சமூகங்களுக்கிடையே சமத்துவத்தைப் பேணும்போது இச்சமூகங்களிடையே சுமூக உறவும் உரையாடலும் நிகழும்போது உண்மையான ஒற்றுமை ஏற்படும்.
பன்மைச்
சமூகங்கள் தம் பன்முகப்பண்பை மதிக்கும் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப் பெறுகின்றபோதுதான் ஒற்றுமை உருவாகும். இவ்வொற்றுமை உரிமைப் பாதுகாப்பில், சமூகங்களின் மாண்பினை அங்கீகரிக்கும் தன்மையில் உள்ளது. இந்நோக்கில் கட்டப்படும் ஒற்றுமை நிலையானது, உண்மையானது. ஒற்றுமை (Unity) என்பது
ஒரு மதிப்பீடு. மாந்தர்தம் உயர் மதிப்பீடு! ஒற்றுமை வெறுமையில் உதிப்பதல்ல; ஒற்றுமை நிதர்சனத்தின் ஊற்றுக்கண்!
இன்றைய
ஒன்றிய அரசின் ‘ஒற்றை’ எனும் கொள்கை ஒற்றுமையை உருவாக்குவதுதான் என்று கூறிக்கொண்டாலும், இவர்கள் நோக்கம் ‘ஒற்றுமை’ எனும் பொய்யான முழக்கத்தின் பெயரால், ஒற்றுமையைச் சிதைத்து, பகையை வளர்த்து, சமூகத்தின் அமைதியைக் கெடுப்பதே ஆகும். வெறும் வெற்று முழக்கங்களால் பன்மைச்சமூகங்களின் சமப் பங்கேற்பில் பன்முகச் சமூகங்களின் சனநாயக உறுதியேற்பில்தான் ஒற்றுமை உருவாகும்.
வேறுபாடு
என்பது சமூகத்தின் இயல்பான பண்பு. வேறுபாடுகள் உடைய சமூகம் அல்லது வேற்றுமை நிலவும் சமூகங்கள்தாம் பன்மைச் சமூகமாக இருக்கமுடியும். வேற்றுமையை இயல்பாகக் கருதும்போது, வேறுபாடுகள் இயல்பானவை என்று ஏற்றுக்கொள்கின்றபோது, வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாட்டிற்கு இடமில்லை. ஐக்கிய நாட்டு அவையின் அரிய முழக்கங்களில் ஒன்றான ‘வேற்றுமையைப் பாதுகாப்போம்’ (Protect diversity),
‘பாகுபாட்டைத் துறப்போம்’
(Eliminate Discrimination) என்ற
முழக்கம் மக்களின் பெருமுழக்கமாக மாற வேண்டும்.
தேசம்,
தேசப்பற்று, தேசியம் என்ற பல்வகைப் பெயர்களில் மக்களைத் திசை திருப்பிவரும் இன்றைய அரசுகள் ‘ஒற்றை’,
‘ஒருமை’, ‘ஒற்றுமை’ என்ற
கேள்விகளால் மக்களைத் திசைதிருப்பி வரும் சூழலில், இம்மாதிரியான பொய்முழக்கங்களால் மக்கள் நிலைதடுமாறி விழாமல் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
ஓர்மையும் ஒற்றுமையும்
இன்றைய
இந்துத்துவ அரசியல் இந்துமத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி, வெறியூட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதை நாம் அறிவோம். ‘இந்து’ என்ற மத அடையாளத்தையும், ‘இந்தியா’ என்ற நாட்டு அடையாளத்தையும் வேறு வேறாகப் பார்க்கவிடாது, ஒற்றைக்குள் பார்க்கச் செய்து மக்களை மயக்கி வருகிறது. இந்து மதத்தினை விமர்சிப்பவர்களை, இந்துகளின் எதிரிகளாகப் பார்க்க மறுத்து, இந்தியாவின் எதிரிகளாகச் சித்தரிப்பதோடு, கொடிய சட்டங்களால் தண்டிக்கப்படுதலையும் காண்கிறோம்.
இந்தியக்
குடிமக்களாகிய ‘நாம்’ என்பதே அரசமைப்புச் சட்டத்தின் முகவரியாக இருக்க, குடிமக்களை மத ரீதியாக ஒன்றுபடுத்தி
அவர்களின் வாக்கைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது சனநாயகத்திற்கு எதிரானது. குடிமக்களின் தேர்வு என்பது, அவர்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. சாதி, மத, இன ரீதியாக மக்களை
ஒருங்கிணைத்து அல்லது ஓர்மைப்படுத்திப் (Polarise) பெரும்பான்மை
என்று காட்டுவது பெரும்பான்மை அல்ல; இது பெரும்பான்மைவாதம் (majoritarian). பெரும்பான்மைவாத அரசு எப்போதுமே சமத்துவ அரசாக இருக்காது. பெரும்பான்மைவாத அரசு பெரும்பான்மை அடையாளம் சார்ந்த அரசாக இருப்பதால் பன்முக அடையாளத்தை மறுக்கும். பன்முக அடையாளங்களுடைய ஏனைய சமூகங்களை ஒடுக்கும், ஒதுக்கும்.
‘தேசம்’,
‘தேச ஒற்றுமை’,
‘தேசப்பற்று’ என்று
ஓயாது பேசும் இன்றைய மதவாத அரசு மதச்சிறுபான்மையினரை ஒடுக்குவதையும், ஒதுக்கி வருவதையும் பார்க்கிறோமல்லவா! ‘உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய அரசின் ஆளும் கட்சியில் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்த எவரும் பிரதிநிதித்துவப்படவில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே! குடிமக்களின் தெரிவு செய்யும் உண்மையை முற்றிலுமாக மறுத்து, அடையாள அரசியலைக் கையிலெடுக்கும் மதவாத அரசியலில், அரசியல் அறத்தை எங்கே தேடுவது?
மதவாத
அரசியலாளர் பேசும் மத ஒற்றுமை என்பது
உள்நோக்கம் கொண்டது. இது ஒற்றுமையின்பால் கொண்ட பணியல்ல; அரசியல் ஆதாய நோக்கில் செய்யப்படும் பிரிவினை. உள்ளார்ந்த பிரிவினைக் கொள்கையை மறைக்கச் செய்யும் கபட நாடகமே ‘ஒற்றுமை’ எனும் இந்தப் பொய்முழக்கம்.
ஆகவே,
‘ஒருமை’, ‘ஓர்மை’, ‘ஒற்றுமை’ எனும்
உயரிய விழுமியங்கள் போற்றப்பெற வேண்டியன. ஆனால், இன்றைய மதவாத அரசு பகை, வெறுப்பு என்பன மூலம் பிரிவினையை வேகமாகச் சமூகத்தில் வளர்த்து வரும் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஒருமையிலும்’, ‘ஒற்றுமையிலும்’ இன்றைய
மதவாத அரசு செய்யும் அரசியலைப் புரிந்துகொள்வோம்.