news-details
ஆன்மிகம்
வயது முதிர்வு என்பது ஒரு கொடை! (நீங்கா நினைவுகள் – 4)

இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இச் சமூகம் முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகக் கருதுகின்றது.  ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்துதான் அந்தச் சமூகத்தின் தரத்தை நாம் கணிக்க முடியும். எளிதில் பாதிப்பு அடையக்கூடிய நிலையில் இருக்கும் முதியோர் குறிப்பாக, தனிமையில் மற்றும் நோயில் இருப்போர் நமது சிறப்புக் கவனத்திற்கும் அக்கறைக்கும் உரியவர்கள். இவர்கள் சுமையானவர்கள் அல்லர்; மாறாக, திருவிவிலியம் எடுத்துக்கூறுவது போன்று ஞானத்தின் சேமிப்புக்கிடங்குகள் (சீராக் 8:9). எனவேதான், நம் திருத்தந்தை பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு திரு அவையில் முதலாவது தாத்தா-பாட்டிகள் தினத்தை நிறுவினார்.

முதியோர்களைப் பயனற்றவர்களாகக் கருதும் ‘தூக்கி எறியப்படும் கலாச்சாரத்திற்கு மாறாக, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பதன் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் மதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். காணாமல் போன மகன் பற்றிய உவமையைக் குறிப்பிட்ட திருத்தந்தை, வயது முதிர்ந்த தந்தை தனது இரு மகன்கள் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளலை விண்ணகத் தந்தையின் அன்போடு ஒப்பிட்டுப் பேசினார்.

முதியோர்மீது இரக்கம் மற்றும் கருணையை வலியுறுத்துவதற்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி முதியோர் குறித்த நற்செய்திப் பகுதிகள் மற்றும் திருவிவிலிய வசனங்களை மேற்கோள் காட்டினார் (திபா 71:9; சீரா 14:2; சீரா 8:9; லூக் 1:42). கடவுளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முதியோர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்ட திபா 71-ஐ மேற்கோள்காட்டினார். பெற்றோரை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முதியோர்களை அவமதிப்பது கடவுள் பார்வையில் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

முதியவர்களை ஒரு சுமையாகப் பார்ப்பதையோ அல்லது அவர்களை நிராகரிப்பதையோ விட, அவர்களை மதிப்பது மற்றும் பராமரிப்பது, அன்பு மற்றும் இரக்கம் காட்டுவது, அவர்களோடு நட்புறவு பாராட்டுவது, முதியவர்களுடன் மீண்டும் இணைவது, அவர்களுக்குச் செவிசாய்ப்பது, அவர்களுக்கு மரியாதை காட்டுவது குறித்து இளைஞர்களுக்குத் திருத்தந்தை பல அறிவுரைகளை வழங்கினார்.

தனிமையாகவோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ இருக்கும் முதியவர்களுடன் இணைய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார். கருணை மற்றும் பாசத்தைக் காட்ட தொலைப்பேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள் அல்லது நேரில் சென்று சந்திக்குமாறு பரிந்துரைத்தார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் சுயநலத்தையும் தோற்கடித்து, மிகவும் மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ உலகத்தை உருவாக்க உதவும் என்று திருத்தந்தை நம்பினார்.

இளைஞர்கள் முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் ஞானத்திலிருந்தும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். அங்கு அனுபவம் வாய்ந்த தனிநபர்களின் ‘சாறு இளைய தலைமுறையினரில் ‘நம்பிக்கையின் தளிர்களை வளர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார். முதுமையை நோயாகக் கருதாமல், ஒரு பேறாகப் பார்க்கக் கூறினார்.

மூத்தவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இளைஞர்கள் மிகவும் சகோதரத்துவச் சமூகத்தை உருவாக்க உதவலாம்; திரு அவையில் பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் இடையிலான உரையாடலை எளிதாக்கலாம். எனவே, இன்று முதியோரின் முக்கியத்துவத்தை உணர்வோம். முதியோர்களே சமூகத்தின் அடித்தளம்; அவர்களே சமூகம் எனும் கட்டடத்தின் மூலைக்கற்கள். அவர்களை மாண்புடன் நடத்துவோம்; அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவோம்; உள்ளன்புடன் அவர்களைப் பராமரிப்போம்.