news-details
ஆன்மிகம்
எதிர்நோக்கின் சாட்சிகளாக...

எதிர்நோக்கு யாரைப் பற்றியது? எதைப் பற்றியது? எதிர்நோக்கு விசித்திரமானதா? எதிர்நோக்கு வீரியமானதா?  எதிர்நோக்கு விந்தையானதா? என அடுக்கடுக்கான தொடர் தேடல்களில் மலர்ந்த பதிவுகள் என் வாழ்வைப் புரட்டிப்போட்டன.

தோற்றுவிடுவோம்என்ற உணர்வோடு யாரும் போராட போர்க்களத்திற்குச்  செல்வதில்லை; வெற்றியை எதிர்நோக்கியே களம் இறங்குகின்றனர்.

தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள்இழந்துவிடுவோம்என்ற நம்பிக்கையில் பணத்தை முதலீடு செய்வதில்லை; இலாபம் ஈட்டுவோம் என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத்  தொடர்கின்றனர்

முப்போக விளைச்சலில் விருட்சங்களைக் காண முடியும் என்ற எதிர்நோக்கில்தான் இறுகிப்போன மண்ணை இலகுவாக்கி விதையைத் தூவுகிறான் விவசாயி.

கடவுளின் ஆசிரை இழந்த மனிதனை, ஏன் படைக்க வேண்டும்?’ என்று கடவுள் நினைப்பதில்லை. தமது சாயலாகப் படைக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் பூமியை அழகாக்குவான் என்ற எதிர்நோக்கோடுதான் கடவுள் மனிதனைப் படைக்கின்றார். ஆம், எதிர்நோக்கு வித்தியாசமானதுதான்; வீரியமானதுதான்; விவரமானதுதான்; விந்தையானதுதான்.

எதிர்நோக்கு ஒரு நற்செய்தி. மண்ணின் எதிர்நோக்கு விண்ணைச் சார்ந்தது. விதையின் எதிர்நோக்கு துளிரைச் சார்ந்தது. இசையின் எதிர்நோக்குப் புல்லாங்குழலின் துளையைச் சார்ந்தது.   தேனீக்களின் எதிர்நோக்குப் பூக்களைச் சார்ந்ததுபறவையின் உணவுக்கான எதிர்நோக்குப் பயணத்தைச் சார்ந்தது. இரவின் எதிர்நோக்கு விடியலைச் சார்ந்தது. கடல் பயணத்தின் எதிர்நோக்குக் கலங்கரை விளக்கைச் சார்ந்தது. முத்துக்குளிப்போரின் எதிர்நோக்குக் கடலின் ஆழத்தைச் சார்ந்தது. தேடலின் எதிர்நோக்கு மன உறுதியைச் சார்ந்தது. முயற்சியின் எதிர்நோக்கு  வெற்றியைச் சார்ந்தது.

ஒன்று மற்றொன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அங்கு நன்மைத்தன்மை உதயமாகிறது. எதிர்நோக்கு நற்செய்தியைக் கொடுக்கவே உருவெடுக்கிறது. எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் மீட்பின் நற்செய்தியைச் சுவைத்தார்கள். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் (லூக் 8:1). நற்செய்தி நேர்மறைச்சிந்தனையை, நம்பிக்கையின் ஆழத்தை, வாழ்வின் இலக்குத் தெளிவுகளை, மகிழ்ச்சியான அனுபவத்தை, முன்னேற்றத்தின் படிநிலையை, விடுதலைத் தாகத்தை வடிவமைக்கிறது.

பழைய ஏற்பாட்டில் சேமின் வழிமரபினராகிய தெராகுவின் மகன் ஆபிரகாம் தன் மனைவி சாரா மலடியாய் இருப்பதைக் கண்டு தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று எதிர்நோக்கிக் காத்திருந்தார். சாராவிடம் அந்த எதிர்நோக்குத் தடைபட்டிருந்தது. இறைதூதர்கள் வழியாக இறையாசிர் வெளிப்படும்போதுநானோ மலடி! எனக்குப் பிள்ளைப்பேறா?” எனச் சிரிக்கிறாள் (தொநூ 18:13). ஆபிரகாம் தனது ஈர்ப்புசக்தியால் இறைநற்செய்தியைப் பெற்றுக் கொள்கிறார். “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்கள் இனங்கள் அனைத்தும் ஆசிர் பெறும் (தொநூ 12:3) என்ற நற்செய்தி ஆபிரகாமின் மனநிலையில் வெளிப்படுகிறது. நல்ல மனநிலை நம்மை நன்மைக்கு இட்டுச் செல்கின்றது. நன்மைத்தனம் செயலுக்கு இட்டுச் செல்கின்றது. செயல் வெற்றிக்கு இட்டுச் செல்கின்றது. கடவுள் மனிதனைப் படைத்த நோக்கமே நற்செய்தியைப் பிறருக்கு விதைத்திடவே. வளர்ந்து வருகின்ற நாகரிகமும் அறிவியல் மாற்றங்களும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு நற்செய்தியைக் கொடுப்பதைவிட முரண்பாடான வாழ்க்கை முறைகளை, இயற்கையை அழிக்கும் செயற்கைத்தனத்தை, எதிர்மறை உணர்வுகளைக் கையாளும் சின்னத்திரை நாடகங்களை, வியாபார நோக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும் புதுப்புது விளம்பர யுக்திகளை, திரைக்குள் வந்து மறைந்து கோடிகளைச் சம்பாதித்துச் செல்லும் நடிகர் - நடிகைகளின் வாழ்க்கைப் பின்பற்றல்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனால் நற்செய்தியை வென்றெடுப்பது என்பது எட்டாக்கனியாகவே அமைந்துவிடுகிறது. நல்ல செய்திகள் வாழ்வை அழகுபடுத்தும் என்ற உண்மை சுடும் காலம் எப்போது வருமோ?

எதிர்நோக்கு ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். ஆர்ப்பரிக்கும் அலைகளில் அலைக்கழிக்கப்பட்ட மனங்களுக்குகரையைச் சேர்ந்துவிடமாட்டோமா?’ என்ற எதிர்நோக்கு அவர்களின் கண்களில் தெரியும். முரண்பட்ட வாழ்க்கையில் முடமாகிப் போனவர்களுக்கு, எழுந்து ஒளிவீச வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்கள் நெஞ்சுறுதியில் தெரியும். வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் உயிர் மூச்சைத் தொலைத்தவர்களுக்கு வாழ்ந்துவிட வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின் நம்பிக்கையில் தெரியும். அடிமைத்தனத்திற்குச் சாவு மணி அடித்துச் சமாதியில் புதைக்க வேண்டும் என்ற எதிர்நோக்கு விடுதலைக் குரல் முழங்கும் போராளியின் போர்க்குரலில் தெரியும். இருட்டறைக்குள் வாழ்வைத் தொலைத்து  வாடும் மனங்களுக்கு வெளிச்சத்தைக் காண வேண்டும் என்ற எதிர்நோக்கு அவர்களின்   நம்பிக்கையில் தெரியும்.

எதிர்நோக்கு புதிய வாழ்வின் தொடக்கம். புதிய வாழ்வு நம்மைப் புதுமைக்கு இட்டுச் செல்கின்றது. பழையன கழியும்போது இனிமை பிறக்கிறது. கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் மறைந்து எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கிறது. இயல்புகளையும் திரிபுகளையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பைத் தருகிறது. சவால்களை எதிர்கொள்ள சக்தி தருகிறது. தொலைநோக்குக் கனவுகளுக்குப் பாதை அமைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தருகிறது.

வெற்றிக்காக எதிர்நோக்கிக் காத்திருத்தல் என்பது ஓர் இனிய கலை. கலைஞன் கவிதையை உருவாக்க வார்த்தைகளால் சொல் தொடுத்து, வாக்கியங்களைக் கோர்வையாக்கி, எதுகை மோனையுடன் அறப்பா தொடுத்துப் பாக்களால் பண்ணிசைத்துக் காத்திருக்கின்றான். அவனின் காத்திருத்தலில் கவிதை துள்ளிவரும் அருவியாக வாசிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. எதிர்நோக்கு என்பது காத்திருப்பது. என்ன வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம்; எனது இலக்கு வெற்றியே! எனவே, எதற்கும் தயார் என்ற மனநிலையில் வாழ்வது.

இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கு மெசியா வருவார் எனப் பல பெண்கள் காத்திருந்தனர். ஆனால், அந்த மீட்புத்திட்டம் அன்னை மரியாவில் வெளிப்படுகின்றது. காத்திருக்கும்போது துணிவு பிறக்கின்றது தோல்விக்கான பாடங்களைக் கற்றுக்கொண்டு வெற்றிக்கான பாதைகளை வகுத்துக் கொடுக்கின்றது. “வெற்றி என்பது ஒரு தோல்வி அல்ல; மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் நகரும் திறன்என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். நாலு வயதுவரை பேச முடியவில்லை. இவனால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று பள்ளியை விட்டு அனுப்பப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறந்த இயற்பியலாளராக நோபல் பரிசு பெறுகிறார்.

தேர்ந்தெடுக்கும் இலக்கின்மீது ஆர்வமும் ஆளுமையைப் பிரதிபலிக்கும் எண்ணமும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நல்ல எண்ணங்களும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக அமைகின்றன. “எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும்போது ஒன்றை மட்டும் மறக்காதீர்கள்! எதிர்காலம் என்ற ஒன்று உண்டுஎன்கிறார் கிளப்டை. தாமஸ் ஆல்வா எடிசன் பலமுறை தோல்வி அடைந்துவிட்ட பின்புதான் மின்சாரத்தைக் கண்டுபிடிக்கின்றார். கடந்த காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தை எதிர்நோக்குவதைவிட நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி இலக்குகளை அடையப் பாடுபடும்பொழுது வெற்றி நிச்சயம் உண்டு.

எதிர்நோக்கு என்னும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றி எரியச் செய்ய வேண்டும் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்றாட வாழ்வில் முரண்பட்ட வாழ்க்கையில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நமக்கு நமது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்நோக்குப் பல இருக்கும். ‘கனவு காணுங்கள்என்ற அப்துல்கலாம் வார்த்தைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் ஏராளமாக இருக்கும். “உங்கள் நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால்  தன்னிலே உயிரற்றதாய் இருக்கும் (யாக் 2:17) என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம் எதிர்நோக்குச் செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும். ‘செயல்களில்லா விசுவாசம் செத்த விசுவாசம்என்பதற்கேற்ப தொலைநோக்குப் பார்வையில் எதிர்நோக்கு ஒளிர வேண்டும்.

உலக அதிசயங்களை வியந்து வியந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் அறிவியல் அறிஞர்கள் தம் புதுமைகளை, கண்டுபிடிப்புகளை ஒருபோதும் நிறுத்துவதே இல்லை; ‘புது உலகு படைப்போம்என்ற எதிர்நோக்கோடு பயணத்தைத் தொடர்கின்றனர். நாமும் புனிதப் பயணங்களை நம் வாழ்வில் தொடர்வோம்.