அது ஒரு காட்சி அல்ல; ஓர் உணர்வு!
அது
ஒரு பார்வையல்ல; ஒரு மூச்சு!
தெருவோரத்தில்
வாழும் ஒவ்வொருவரும் ஒரு கதையோடு மட்டுமல்ல, கண்ணீரோடும் நிறைந்திருக்கிறார்கள். சாலையோரத்தில் விற்கும் பழக்கடைகளின் பின்னால் ஒரு வாழ்க்கை நிற்கிறதென்பதை உணராமல், அதை வாடையோடு மோதுகிறது மனிதகுலம். வலி அனைவருக்கும் பொதுவானது. பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியவர் வரை. ஏன்?
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசு பாவம் ஒன்றைத் தவிர மனிதரைப்போல் எல்லா வலிகளையும் தம் வாழ்வில் கொண்டிருந்தார்.”
வலி
வர்ணிக்க முடியாத சுனைநீராகப் பலரின் வாழ்வில் சுரந்துகொண்டே இருக்கிறது. வலியை வெளிக்கொணர்கிறது ஒரு கூட்டம். வலியை உள்நிறுத்தி உந்துகட்டையாக வாழ்வை நகர்த்திச் செல்கிறது மற்றொரு கூட்டம். வலி எவருக்கும் விதி விலக்கு அல்ல; பணம் இருப்பவர்கள் வலிக்குப் பதம் பார்க்கிறார்கள். மற்றவர்கள் பாதைக்காகத் தடம் பார்க்கிறார்கள்.
திருச்சியை
நெருங்கும் நெடுஞ்சாலையில், தூசி பறக்கும் ஒரு சாலையோரத்தில் தனியாக ஒரு பழக்கடை. அதன் அருகில் நிழலுக்காய் மாட்டியுள்ள பிளாஸ்டிக் தண்டு. அதன் கீழ் அமர்ந்திருக்கும் ஒரு முகம். அது முகம் அல்ல... ஒரு கதைக் கட்டம்!
‘என் பெயர் மாரியம்மா...’ என்று மௌனமாகக் கூறினார். “இது என் வாழ்வாதாரம். நான் தினமும் காலை 6 மணிக்குப் பழங்களை வாங்கி வருவேன். இங்கேயே வைத்து விற்கிறேன். அதிகம் விற்க முடியவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் வழியோரத்தில் காத்திருப்பேன்.”
முடிவிலாக்
காத்திருப்பும், வாடிக்கையாளர் வருகிறாரோ என்ற ஆவலும், விற்பனை ஆகாத பழங்கள் சுருங்கும் வேதனையும், அவளது கண்களில் தெரிந்தது.
வாடிய
வாழ்வின் வாசல்,
அதுவே
வழியோரத்தில் பழம் விற்கும்
அம்மாவின்
கைகளில் - வாடுகிறது.
பூக்கள்போல
பழங்கள்...
வாடாதது
மட்டும் அவளது - நம்பிக்கையே!
ஒரு
வாடிக்கையாளர் வந்தால் போதும்,
அவள்
பிள்ளையின் வயிறு பசியறியும்!
யாரும்
பார்க்கவில்லை அவளது கண்ணீரை,
ஆனால், பார்த்தோம் பழங்களில் மட்டும் - விலையை!
- ஷெபி ஆர்லின் உணர்ச்சிக் கவிகள்
வழியோரங்களில்
வாழும் இவர்களுக்கு வீடு என்பது மழையில்லாத ஒரு மூலை. உணவு என்பது ஒருவன் கொடுத்தால் கிடைக்கும் பாக்கியம். அவர்கள் வாழ்வில் ‘இனிமேல் என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாது. அவர்கள் வாழும் நாள்கள், நம் காலணிகள் கீழ் அழியும் ஓர் உறவுமில்லா மண்ணாகவே இருக்கிறது.
சென்னை-விழுப்புரம் சாலையில் ஒரு பாட்டி பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவரிடம் ஒரு சிறுமி வந்து, “பாட்டி, எனக்கு ரொம்பப் பசிக்குது. ஒரு பழம் குடுக்கலாமா?” என்று கேட்டார். அவரிடம் இருந்த இறுதி மூன்று பழங்களில் ஒன்றை எந்தவொரு முறுவலுமின்றி அந்தச் சிறுமிக்குக் கொடுத்தார்.
நானும்
அங்கே இருந்தேன். “பாட்டி, உங்களுக்கே விற்று வாழவேண்டிய நிலை இருக்கும்போது ஏன் இவ்வாறு?” என்று கேட்டேன். அவர் கூறினார்: “என் குழந்தைப் பருவத்தில் யாரும் எனக்குச் செய்யாத உதவியை இப்போது ஒரு பசிக்கு நான்தான் செய்யவேண்டும். அதிலே அளவு மிகுந்த சந்தோஷமிருக்குப்பா” என்றார்.
இந்த வார்த்தைகள் என் உள்ளத்தை நசுக்கின. அவர் விற்றது பழம் மட்டுமல்ல... மனிதத்துவமும் கூட!
வழியோரமாய்
ஒரு வலி; அது நாம் காணும் சாதாரண வாழ்க்கை அல்ல; அது சக்கரங்கள் ஓடும் நெடுஞ்சாலையின் ஓசையில் ஒளிந்திருக்கும் சத்தமற்ற கதைகள். நாம் பார்வையிட்டாலும் உணராத உண்மைகள்.
ஒரு
பழம் விற்கும் அம்மாவின் புன்னகையில், ஒரு கண்ணீர் இருக்கிறது. ஒரு சாலையோரத் தந்தையின் கண்களில், ஒரு கனவு களங்கமாய் காணப்படுகிறது. நாம் ஒரு நாளாவது அவர்களிடம் நின்று ஒரு பழம் வாங்கினாலோ, ஒரு பசிக்கு உணவு கொடுத்தாலோ, ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் கொடுத்தாலோ, அந்த வழியோர வலிக்குள் சிறு நிழல் கொடுக்க முடியும்.
நாம்
அவர்களுக்கு வாடிக்கையல்ல; வாழ்வாக இருக்கலாம். வழியோரமாய் நின்ற அந்த வலிக்கு நாம் ஒரு சந்தோசமான வழி தேடலாம், மகிழ்ச்சியான தடம் பதிக்கலாம்.