news-details
சிறப்புக்கட்டுரை
கிப்ளி ஸ்டைல் ஆர்ட் (வலையும் வாழ்வும் – 15)

ஊர் மையத்தின் மரத்தடி வீதியில் ஒரே கூட்டம். போலிஸ் வாகனம் ஒன்று வந்திருந்தது. காவலர்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் காதுகளில் ஏதேதோ கிசுகிசுத்துக் கொண்டனர். கறுப்புக் கண்ணாடி ஒன்றைச் சட்டையின் நடுபட்டனில் தொங்கவிட்டுக்கொண்டு ஸ்டைலாகப் போலிஸ் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான் ஆண்ட்ரூ.

ஆண்ட்ரூ. பி.இ. கல்லூரி பைனல் இயர். நடுத்தர வர்க்கம். வீட்டடிக் குடும்பச்சொத்தில் கொஞ்சம் இரப்பர் மரங்கள் உண்டு. ஆண்ட்ரூவுக்கு ‘பைக்னா ரொம்பப் பிடிக்கும். காலேஜ் பர்ஸ்ட் இயரிலிருந்தே பைக் வாங்கித் தரவேண்டிப் பெற்றோரைக் கட்டாயப்படுத்தினான். முதலில் மறுத்த பெற்றோர் வேறு வழி தெரியாமல் சம்மதித்துக் கடனை வாங்கி ஒரு விலையுயர்ந்த பைக்கை வாங்கிக் கொடுத்தார்கள்.

பைக் வாங்கியதிலிருந்து ஆண்ட்ரூவின் குணமே மாறியது. பயணத்தின்போது அவ்வப்போது ஹெல்மெட் அணிவதில்லை. அடிக்கடி நண்பர்களோடு பைக் ரைடு. அவன் அந்தக் கிராமத்தின் குறுகலான ரோட்டில் பைக் ஓட்டுவதே அவ்வளவு பயத்தை ஏற்படுத்தும்.

உங்கப் பையனைக் கொஞ்சம் மெதுவாப் போகச் சொல்லுங்க, ரோட்டுல நிம்மதியா நடக்க முடியமாட்டேங்குது எனப் பலர் ஆண்ட்ரூவின் தந்தையிடம் ‘பராதி சொன்னார்கள். வீட்டில் தட்டிக்கேட்டால் தினமும் சண்டை. ஒருநாள் தன் தாயையே அடிக்கக் கை ஓங்கிட்டான்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பாக ஆன்ட்ரூ வீட்டிலிருந்த விலையுயர்ந்த புதிய பைக் திருடப்பட்டிருந்தது. “என் வீட்டுலயே களவாண்ட அந்தக் களவாணிப் பையன் என் கையில மாட்டுனான் அவ்வளவுதான்...”

ஆண்ட்ரூ வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது தெரிந்தது. கம்ப்ளைண்ட் கொடுத்து இரண்டு வாரங்கள் ஆகியும் திருடன் பிடிபடவில்லை.

இரப்பர் சீட் திருடிய சிறுவர்களை அடித்துக் கையைக்கட்டித் தெருவில் இழுத்து வந்ததால அதுக்குப் பழிவாங்க யாராவது திருடியிருப்பார்களோ? பைக்கில் வேகமாக வந்து வித்தைகளைக் காட்டிக் கடுப்பேத்தியதால யாராவது திருடியிருப்பார்களோ? அவனே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடுறானோ...’ கூடியிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகக் கற்பனை செய்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில்தான் திருடன் மாட்டிக்கொண்டான் என்ற செய்தி ஊராரின் செவிக்கு எட்டியது. செயல்முறை விளக்கத்திற்காகத் திருடனை அழைத்து வந்துகொண்டிருக்கின்றார்கள். எனவேதான், இத்தனை பந்தோபஸ்து இன்று.

திருடன் யாராக இருக்குமென்று கண்டறிய எல்லாருக்கும் ஓர் ஆர்வம் இருந்தது. அரை மணி நேரம் கழித்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு பொலேரோ வாகனம் வந்து மரத்தடி வீதியில் நின்றது. மாலை நேரத்தில் நெடுக வளர்ந்த மரங்களிலிருந்து வெளியேறும் வவ்வால்கள்போல ஆங்காங்கே நின்றவர்கள் வாகனத்தை நோக்கிப் படையெடுத்தனர். திருடன் வந்தவுடன் அவன் மூஞ்சியில் ஒரு குத்துவிட வேண்டுமென்று ஆண்ட்ரூ கையை முறுக்கிக் கொண்டிருந்தான்.

போலிஸ் வாகனத்திலிருந்து ஒருவர் காவலர்களின் பாதுகாப்போடு கீழே இறங்கினார். அவர் அந்த ஊருக்கு மிகவும் பரிச்சயமானவர். கூடியிருந்தவர்களின் கண்கள் எல்லாம் ஆச்சரியத்தில் கறுப்பு வெள்ளையாய் பூத்திருந்தன.

இவர் ஏன் பைக்கைக் களவாண்டார்? இவரா இப்படிச் செய்தார்?’ யாராலும் நம்ப முடியவில்லை. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பைக் இருபது கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு வந்ததைப்போல முறுக்கி வைத்திருந்த கையையும் மனத்தையும் ஆண்ட்ரூ தளர்த்தியிருந்தான். மற்றவர்கள் எல்லாரும் வந்த வேகத்தில் கலைந்து சென்றார்கள். பிடித்து வந்தவரை அங்கேயே விட்டுவிட்டு போலிஸ் வாகனங்கள் புழுதிப் பறக்க ஊரைவிட்டுக் கிளம்பியது.

ஆண்ட்ரூ சட்டையில் தொங்கிக்கொண்டிருந்த தூசு படிந்த கறுப்புக் கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டான். அருகில் யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்டு போலிஸ் விட்டுச்சென்ற தன் தந்தையைப் பார்த்து ஒப்பாரிவைத்து அழுதான் அவன்.

நீ பைக்ல ஸ்பீடா போறத பாக்க பயமா இருக்குப்பா. அதான் உன் பைக்கைச் சித்தப்பா வீட்ல மறைச்சு வைச்சேன். இனியாவது கொஞ்சம் ஸ்லோவா போப்பா...” கனத்த குரலில் வெளிவந்த தந்தையின் வார்த்தை கரும்புகையாய் அவனை நிறம் மாற்றியது.

ஆண்ட்ரூவின் பைக் திருடப்பட்டது போன்றது அல்ல டேட்டா திருட்டு. இணைய உலகில் எந்தப் பக்கம் திரும்பினாலும் டேட்டா திருட்டைப் பற்றிய பல விவாதங்கள் மற்றும் கட்டுரைகள் காணக்கிடக்கின்றன. அண்மையில் டிரண்டிங் ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட் (Ghibli Style Art) புகைப்படப் பதிவுகள்தான். கிப்ளி ஸ்டைல்னா என்னவென்று வாசகர்கள் குழப்பத்தில் இருக்கக்கூடும். உங்களுக்காகவே இந்த விளக்கம். ‘சாட் ஜிபிடி (Chat GPT) அறிமுகப்படுத்திய இந்த அப்டேட்டில் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால், அது ஜப்பானிய கார்ட்டூனிஸ்டான ‘ஹாயோ மியாசாக்கியின் (Hayao Miyazaki) பாணியில் அந்தப் புகைப்படத்தைக் கார்ட்டூனாக உருமாற்றித் தருகிறது. இணைய உலகமே ஸ்தம்பித்துப்போகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே கோடிக்கணக்கில் இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து, அதனைச் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்திருந்தனர். இந்த ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட் டிரண்டான பிறகு சாம் ஆல்ட்மேன் ‘ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் தலைவர் “எப்பா கொஞ்சம் சில் பண்ணுங்க. எங்க ஊழியர்களைக் கொஞ்சம் தூங்க விடுங்க என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ‘டிரண்டிங் பலருக்குப் பிடித்திருந்தாலும், அது முன்வைக்கும் வலைத்தள ஆபத்துகளை யாரும் எளிதாகக் கடந்துபோக முடியாது. விலைகொடுத்து வினையை வாங்குகிறோம் என்பதைப்போல, நாமே நம் புகைப்படங்களை ‘ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு இலவசமாகக் கொடுக்கின்றோம். இப்பெரும் தரவுகளே அந்நிறுவனத்தின் ‘ஏஐ மாதிரிகளைப் பழக்குவதற்கான மூலப்பொருளாகி விடுகின்றது. ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட் என்னும் வியாபார யுக்தி மூலமாக ‘ஓபன் ஏஐ நிறுவனம் ஏராளமான தரவுகளை இலவசமாகவே பெற்றுள்ளது என்பதை நாம் எப்போது அறியப் போகிறோம்?

நம் அந்தரங்கத் தரவுகள் களவாடப்படுகின்றன என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘ஸ்டுடியோ கிப்ளி நிறுவனத்தின் தலைவர் ஜப்பானிய கார்ட்டூனிஸ்டான ஹாயோ மியாசாக்கி ‘ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘கிப்ளி ஸ்டைல் ஆர்ட் என்னும் தன் பாணியும் படைப்பும் தன் அனுமதியில்லாமலேயே திருடப்பட்டிருக்கிறது என்றும், அதற்கான இழப்பீடு தனக்குத் தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் அராபியக் கதைகளில் வரும் பூதம்போலும், பறக்கும் விரிப்புப் போலும் நமக்கு மாயா ஜால வித்தைகளைக் காட்டினாலும் தரவுத் திருட்டும் (Personal Data Stealing), காப்புரிமைத் திருட்டும் (Copyright Infringement) வெளிப்படையாகவே அரங்கேறுகின்றது. இந்திய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம், 2023 (The Digital Personal Data Protection Act, 2023) இருந்தும் அதனால் தண்டிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகக் குறைவே.

நெதர்லாந்து ஒழுங்குமுறை ஆணையம் ‘கிளியர் வீயு ஏஐ (Clear View Ai) என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு 30.5 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்திருக்கிறது. தரவுத்திரட்டிலுள்ள (Database) பயனர்களின் புகைப்பட முகத்தினைத் தனித்துவமான பயோமெட்ரிக் குறியீடாக இந்நிறுவனம் மாற்றி ஒவ்வொருவரையும் உளவு பார்க்க முனைகிறது என்பது நெதர்லாந்து ஒழுங்குமுறை ஆணையம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டாகும். அரசுகளே மக்களின் நகர்வுகளை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உளவு பார்க்கிறது என்பாரும் உண்டு.

2019-ஆம் ஆண்டில் இந்திய அரசு காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக உலகின் மிகப்பெரிய முக அளவியல் அமைப்பை (Facial Recognition System) உருவாக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இந்தியாவின் கண்காணிப்பு உள்கட்டமைப்பை மேலும் தீவிரப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ‘ஏஐ ஆல் இயங்கும் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டிருப்பதாகவும் ‘தி இந்து பத்திரிகைச் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

ஏஐ ஒரு நொடிப்பொழுதில் நாம் கேட்பதைத் தந்துவிடுகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அது நமக்கு இலவசமாகவோ, எளிதாகவோ கிடைத்துவிடவில்லை; மாறாக, நம் சொந்த மற்றும் தனிப்பட்ட தரவுகளை அதனிடம் அடமானம் வைத்த பிறகே அதன் சேவையை நாம் பயன்படுத்த முடிகிறது. “பொருளுக்கான பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் நீங்களே விலைபொருள் (If you\'re not paying for the product you are the product) என்னும் கூற்றின் உட்பொருளை உணர வேண்டும். இணையத்தில் வலம் வரும் பெரிய நிறுவனங்கள் அதன் பயன்களை எப்போதுமே விலைபொருளாகவும், அவர்களின் தரவுகளைப் பெரும் சந்தையாகவுமே பார்க்கின்றது. இதனை அறிந்து கொண்டால் நாம் விலைபோகும் முன்பே அதன் ஆபத்தை உணர்ந்துகொண்டால் மட்டுமே முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.