இராபின்சன் காலை பத்து மணிக்குதான் பழைய கால கூட்சு இரயில் வண்டிபோல புகையைக் கக்கிக்கொண்டே ஆபிசுக்கு வந்தான். ‘நீ ஆபிசுக்கு ஏன் லேட்டா வர?’ என்றும் ‘ஏன் புகை பிடிக்குற?’ என்றும் அவனிடம் யாரும் கேட்டதே கிடையாது. கேட்டாலும் விளைவு ஒன்றும் இல்லை. உள்ளூர் பி.இ. பட்டதாரி என்ற திமிர் அவனிடம் இருக்கத்தான் செய்தது. அது மட்டுமல்ல, இராபின்சன் இல்லையென்றால் சில வேலைகள் அங்கு நடக்காது. முப்பந்தல், ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், காவல்கிணறு என்று எந்தக் காற்றாடியாலை எங்கு இருக்கிறது? அவை யாருக்கெல்லாம் சொந்தமானது? அதன் பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்வது? என்பதும் அவனுக்குதான் அத்துப்படி. எனவே ‘எல்.ஜி. விண்ட்மில் டெக்’ நிறுவனத்தினர் அவனிடம் குறைகள் பல இருந்தாலும், மான் தன் கொம்புகளின் வளர்ச்சியையும், அதன் கனத்தையும் பொறுத்துக்கொள்வதுபோல அவனையும் பொறுத்துக்கொண்டிருந்தனர். இராபின்சன் தன் அலுவலக அறைக்குள்போய் இருக்கையில் அமர்ந்ததுதான் மிச்சம், “இராபின்சன் சார்! இன்னைக்கு அஞ்சு கிராமம் பகுதியில ஒரு விண்ட்மில் லீப் இன்ஸ்டாலேசன். தீபக் சார் உங்கள அங்கே போகச்சொன்னார். ரொட்டேட்டர்ல பிராப்ளமாம்.” எக்சிகியூட்டிவ் மேனேஜர் இரங்கராஜன் சீனியர் என்றாலும் இராபின்சன்கிட்ட பேசும்போது மட்டும் கொஞ்சம் பார்த்தே பேசுவார். “ஆமா! நேற்று கனகராஜ் சார் கேன்டில் பண்ணினாருனு சொன்னாங்களே? என்னாச்சு?”
“சார்! யாரு போனாலும் உங்களபோல வருமா? அவரால பிராப்ளத்த சார்ட் அவுட் பண்ண முடியல. இந்த ஆபீசுல உங்களபோல யாரு இருக்கா சொல்லுங்க?” எக்சிகியூடிவ் மேனேஜர் இரங்கராஜன் இராபின்சனைக் கொஞ்ச நேரம் காற்றில் பஞ்சாய் மிதக்க வைத்தார். போதைப் பட்டியலில் புகழ்ச்சி இடம்பெறவில்லையென்றாலும், அது தரும் கிறக்கம் மதுவைவிட அதிகம்தான் போலும். இதற்குப் பிறகு இராபின்சன் எப்போது இருக்கையிலிருந்து எழுந்தான்? எப்போது கிளம்பிப் போனான்? என்று யாருக்கும் தெரியாது. அடுத்த நொடியே அவன் இன்ஸ்டாலேசன் ஸ்பாட் அஞ்சு கிராமத்தில் இருந்தான்.
முந்தைய
கருவேல மரக்காடுகள் இன்று காற்றாலைக் காடுகளாக மாறியிருந்தன. பனை மரங்கள் முளைத்திருந்த இடங்களில் காற்றாலைகள் வானுயர முளைத்திருந்தன. தோவாளையில் இராபின்சன் இன்ஜினியரிங் காலேஜ் படிக்கும்போது தினமும் காலை 4 மணிக்கே எழுந்து தாய் இராணியோடு முப்பந்தலிலிருந்த தங்கள் சாமந்திப்பூ தோட்டத்திற்குப் போய்விடுவார்கள். அதிகாலையிலேயே சாமந்திப்பூ பறித்து, தோவாளைச் சந்தைக்குச் சைக்கிளிலேயே கொண்டுபோய் சேர்க்க வேண்டும். பூ சாகுபடியிலே தன்
தாய்க்கு ஒத்தாசையாக இருப்பான். சாமந்திப்பூ சாகுபடியில் குண்டு மல்லி சாகுபடிபோல அதிக வருமானம் ஈட்ட முடியாது என்றாலும், இராணிக்குச் சாமந்திப்பூ சாகுபடி ஏதோ பிடித்திருந்தது.
காலப்போக்கில்
முப்பந்தலிலிருந்த சாமந்திப்பூ தோட்டத்தை இராபின்சன் கல்லூரிப் படிப்பிற்காகக் காற்றாலை கம்பெனிக்காரர்களுக்கு விற்கவேண்டிய சூழல் உருவானது. இராணி இறந்தபோது இராபின்சன் அவள் உடலைச் சாமந்திப்பூ மலர்களாலேயே அலங்கரித்திருந்தான். அழகாகக் கட்டப்பட்டிருந்த அவள் கல்லறையில் துளசி மாடம்போல ஒரு சாமந்திப்பூ மாடம் கட்டியிருந்தான். இராணி இறந்து ஆண்டுகள் ஐந்தானாலும் தன் தாயை நினைக்கும்போதெல்லாம் சாமந்திப்பூ வாசமும் சேர்ந்தே வந்தது.
“சார் நல்ல வேளை வந்தீங்க. நீங்க இல்லாம நம்ம கம்பெனியில ஒண்ணும் ஓடாதுபோல.” பீல்டு
இன்ஜினியர் கனகராஜ் பேசும்போது மட்டும் அவர் வார்த்தைகளில் முள்கள் முளைத்திருந்தாலும் ‘புகழ்தல்’
வாடை அதில் இருந்ததால் இராபின்சனுக்கு அது முத்தங்களாகவே தெரிந்தது.
வானுயர
வளர்ந்திருந்தது கற்றாடி. செக்ன் அறைக்குள் இராபின்சன் நுழைந்ததும் காற்றுக்கு வழிவிட்டு நிற்கும் நாணல்கள்போல அங்கிருந்த ஆப்பரேட்டர்கள் வழிவிட்டு நின்றனர். இராபின்சன் சில விவரங்களைக் கேட்டறிந்தான். சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தினான். அவன் கட்டளையிடுவதைப் பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. அவனுடைய வார்த்தைகளில் சிறுதுளி திமிரும் அவனுடைய உடல் மொழியில் கடலளவு திமிரும் தெரிந்தது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’
என்ற எண்ணமும் அவன் தலைமுடியைப்போல சிலிர்த்துக் கொண்டுதான் நின்றது.
‘ஓ.கே! நவ்
சுவிட்ச் ஆன்’ என்றான். சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. இயங்காமலிருந்த ரொட்டேட்டர் இயங்கத் தொடங்கியது. விண்ட்மில் காற்றாடி சுற்றத்தொடங்கியது. இராபின்சன் கண்ணிலே பெருமை கறுப்புப்பந்தாகத் திரண்டிருந்தது. அங்கிருந்தோர் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரச்சத்தத்திற்கு நடுவே மெதுவாக ஓடிய ரொட்டேட்டர் கொஞ்சநேரத்தில் கட்டுப்பாடற்றுப் பேயாய் சுழன்று சில நொடிப்பொழுதிலே நெடுக வளர்ந்திருந்த விண்ட்மில் காற்றாடி கழுத்தொடிந்து விழுந்தது. சில வினாடிகள் எங்கும் மௌனம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.
அன்று
இராபின்சன் சோகத்தில் ஊர் திரும்புகை யில் பல நாள்களுக்குப் பிறகு
அவன் தாய் இராணியின் ஞாபகமும் சாமந்திப்பூ வாசமும் அவன் கூடவே வீடு வந்தது. காற்றாலை காற்றாடி சுழற்சி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது மட்டுமே அதன் பயன்பாடு மனிதகுலத்திற்குத் தேவையானதாக இருக்கும். இக்கதையில் கட்டுப்பாடு என்பது மனிதனுக்கும் வேண்டும்; மனிதன் உருவாக்குகின்ற தொழில்நுட்பத்திற்கும் வேண்டும் என்ற புரிதலை நாம் உணரமுடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கட்டுப்பாடற்ற அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இச்சூழலில் கட்டுப்பாடு என்பது வரையறை செய்யப்படவேண்டும்.
இந்தியாவில்
பெரும்பாலான குற்றங்களுக்கான தண்டனை ‘இந்தியத் தண்டனை சட்டம் 1860’-இன் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இந்த டிஜிட்டல் உலகிலே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம் - 2000’ மற்றும் ‘தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம் - 2008’ வழிவகை செய்கின்றன. சைபர் குற்றங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்கள் ஏழைகளும் பெண்களும்
குழந்தைகளுமாகவே இருக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
2016-ஆம் ஆண்டு
அமெரிக்கா முதன் முதலில் செயற்கை நுண்ணறிவு அறிக்கையை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து 2017-இல் பிரான்சு, இங்கிலாந்து, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டன. ஜூன் 2018-ஆம் ஆண்டு இந்திய ‘நிதி ஆயோக் கமிஷன்’ (NITI Aayog) செயற்கை
நுண்ணறிவிற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.
2020-இல் செயற்கை
நுண்ணறிவு பற்றிய அறநெறிப் பார்வையை ‘செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான உரோமின் அழைப்பு’
(Rome call for AI Ethics) என்ற
தலைப்பில் வத்திக்கான் வெளியிட்ட அறிநெறிப் புரிதல் உலகளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024-இல் இத்தாலியில் நடந்த ஜி-7 நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் சவால்களைப்பற்றி உலகத் தலைவர்கள் விவாதித்தார்கள். 2025-இல் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்றுகூடி செயற்கை நுண்ணறிவு பற்றிய திட்டங்களையும், அவை கட்டுப்பாடோடு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.
எத்தனை
அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் நாடளவிலும் உலகளவிலும் நடந்தாலும், செயற்கை நுண்ணறிவிற்கான உலகளாவியச் சட்டம் (AI Act) இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்பது கவலையளிக்கின்றது. இதற்கிடையில் முதல்முறையாக ‘ஐரோப்பிய செயற்கை நுண்ணறிவுச் சட்டம்’
(European Union AI Act) 2025-இல்
பல கட்டத் திருத்தங்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
எத்தனை
சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் வந்தாலும் சட்ட ஓட்டைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் முதலைகள் இருக்கத்தான் செய்கின்றன. சட்டம் சில வேளைகளில் சிலந்தி வலையாக இருந்து சிறு பூச்சிகளைச் சிக்கவைத்து, பெரும் வண்டுகளை விட்டுவிடுகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றன. ‘திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’
என்பர். சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ஆயிரம் இருந்தாலும், தனிமனித ஒழுக்கமும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய விழிப்புணர்வும் இன்று காலத்தின் கட்டாயம்.