news-details
ஆன்மிகம்
தந்தையைக் கொண்டாடுதல்! (கண்டனையோ, கேட்டனையோ! – 36)

மெஜோலின் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. ‘யார் மெஜோலின்?’ என்று கேட்கிறீர்களா? ஐந்தாவது படிக்கும் என் பங்குச் சிறுமி; பீடப் பணியாளர். வயது 10. பங்கு நிர்வாகம் மற்றும் ஆன்மிகப் பணிகளில் என் முதன்மை ஆலோசகர்.

ஜூன் 15 அன்று ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டிற்குச் சென்றபின், என்னைப் போனில் அழைத்து, “Happy Father’s Dayஎன்று கூறினாள். “அது இன்றைக்கா?” என்றேன். “ஆமாம். இதுகூட உங்களுக்குத் தெரியலியா? செமினேரியில் அப்படி என்னதான் கற்றுக்கொண்டீர்கள்?”

கூடுதல் அவமானங்களைத் தவிர்க்க  அவசரமாகப் போனைத் துண்டித்துவிட்டு, கூகுளில் தேடினேன். அதுவும், ‘ஆம், இன்றைக்கு ஃபாதர்ஸ் டேதான்என்றுஅப்பா சத்தியம்செய்தது.

Father’s Day-க்கு ஐந்து நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1500-களின் ஆரம்பங்களிலேயே ஐரோப்பாவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தொடக்கத்தில் இது ஒரு சமய வழிபாட்டு நிகழ்வாக இருந்துள்ளது. நாள் - மார்ச் 19, புனித யோசேப்பு விழா தினம். திருப்பலி வைத்து, யோசேப்பு போலவே எல்லா அப்பாக்களும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்கள். விழா நாளடைவில் மற்ற கலாச்சாரங்களுக்குச் சென்றபோது, நோக்கத்திலும் வடிவத்திலும் மாற்றங்கள் வந்தன.

நவீனத் தந்தையர் தினம் அமெரிக்காவில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகி, பின் உலகம் ழுழுவதும் பரவி பிரபலமடைந்த ஒரு கொண்டாட்டம். வியாபார நோக்கங்கள் மலிந்தது. ஒருசில நாடுகளில் வேறு நாள்களில் அனுசரிக்கப்பட்டாலும், ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு என்பது ஓரளவு நிலைபெற்றுவிட்டது.

தந்தையரைthe unsung parentஎன்றுதான் கூறவேண்டும். அமெரிக்காவில் கூட கவனித்திருக்கிறேன்அன்னையர் தினத்தின் மவுசு, தந்தையர் தினத்திற்கு இல்லை. உலகம் முழுவதும் அதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம்!

அப்பா என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி! பெரிதாகக் கொண்டாடப்படவில்லையென்றாலும், ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தந்தை மிகப்பெரும் தாக்கம் செலுத்துகிறார். இது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்பாவின் முன்மாதிரியால் சிறப்பாக உருவான குழந்தைகளும் உள்ளனர். அப்பாவைப் பின்பற்றிக் கெட்டுப் போனவர்களும் உள்ளனர்.

அண்மையில், ‘National Catholic Registerஎனும் இணையப் பத்திரிகையில், ‘திருத்தந்தையர்களும் அவர்களின் தந்தையர்களும்என்ற தலைப்பில் நான்கு திருத்தந்தையர்களின் அப்பாக்கள் குறித்து வெளியான சிறு குறிப்புகளை இரசித்து வாசித்தேன்

லூயிஸ் ப்ரெவோஸ்ட்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தந்தை. முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர். 23 வயதில் கல்லூரி முடித்தவுடன் 1943-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றினார். D-Day Operationஎன்று வரலாற்றில் குறிப்பிடப்படும் மிக முக்கிய இராணுவ நடவடிக்கையில் ஏறக்குறைய 1,56,000 நேசப் படை வீரர்களைப் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் கொண்டு வந்து இறக்கிய கப்பல்கள் ஒன்றின் அதிகாரியாக லூயிஸ் இருந்தார்

போர் முடிந்தபின்பு சிகாகோ நகரில் மவுண்ட் கார்மெல் துவக்கப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார். 1949-ஆம் ஆண்டு நூலகராகப் பணிபுரிந்த மில்ட்ரெட் மார்டினெஸ் என்ற பெண்ணை மணந்தார். மூன்று ஆண் குழந்தைகள். கடையவர்தான் இன்றைய திருத்தந்தை லியோ.

2024-ஆம் ஆண்டு அப்போதைய கர்தினால் இராபர்ட் ப்ரெவோஸ்ட் ஓர் இத்தாலிய டி.வி. சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டார்:

இளம் அருள்பணியாளராக இருந்தபோது இராபர்ட் அழைத்தல் வாழ்க்கையில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தார். ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல உணர்ந்தார். தான் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

ஒருநாள் தன் தந்தையை அழைத்து, “நான் துறவற வாழ்வைக் கைவிட்டு, திருமணம் செய்துகொள்வது நல்லது என நினைக்கிறேன்எனக்குக் குழந்தைகள் வேண்டும். நான் ஓர் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்என்று இராபர்ட் கூறினார்.

தந்தை லூயிஸ், “நீ எதையும் இழந்துவிடவில்லை. எனக்கும் உன் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பு மிக முக்கியமானது. ஆனால், அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாதது, ஓர் அருள்பணியாளருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற அன்பு. யோசித்து முடிவெடுஎன்று கூறினாராம். அதை நினைவுகூர்ந்து, ‘There is something to listen to hereஎன்று அந்த நேர்காணலில் குறிப்பிடும் இராபர்ட், அதன்பின் எந்தவித மாற்றுச் சிந்தனைக்கும் தன் மனத்தில் இடம்கொடுக்காத காரணத்தால்தான்  இன்று அவர் திருத்தந்தை!

கரோல் வொய்த்திவா சீனியர்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் தந்தை. இருவரின் இயற்பெயர்களும் ஒன்றேகரோல், போலந்து நாட்டு இராணுவத்தில் லெஃப்டினன்ட் பதவி வகித்தவர்.   தன் இறையழைத்தல் ஊக்குநர் என்று ஜான்பால், தந்தை கரோலையே குறிப்பிடுகிறார்.

எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் அம்மா இறந்துபோனார். நான் புதுநன்மை கூட பெற்றிருக்கவில்லை. என் மூத்த சகோதரனும் சீக்கிரமே இறந்துவிட, நான் என் தந்தையுடன் தனித்து விடப்பட்டேன். அவர் ஒரு போர்வீரர். ஆழமான நம்பிக்கையாளர். அம்மாவின் இறப்புக்குப் பின், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்பெரும் பொழுதை இறைவேண்டலிலேயே செலவழித்தார். இரவில் சில நேரங்களில் நான் கண்விழித்துப் பார்க்கும்போது, என் தந்தை முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருப்பார்.

நான் அருள்பணியாளராக வேண்டும் என்று ஒரு நாளும் அவர் என்னிடம் கூறியதில்லை. இறையழைத்தல் குறித்து நாங்கள் இருவரும் வீட்டில் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. ஆனால், என் தந்தையின் வாழ்க்கைதான் அருள்பணியாளராக என்னைத் தூண்டியது. அவருடைய முன்னுதாரணம்தான் என் முதல் குருமடம்என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் குறிப்பிடுகிறார்.

ஜோசப் இராட்சிங்கர்

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் தந்தை. அவர் பெயரும் ஜோசப் இராட்சிங்கர்தான். ஒரு போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. ‘Liebfrauenboteஎன்ற பத்திரிகையில்மணமகள் தேவைஎன்று விளம்பரம் கொடுத்துள்ளார்.  ‘மாநில அரசு ஊழியர். கத்தோலிக்கர். வயது 43. ஒரு திறமையான கத்தோலிக்கப் பெண் தேவை.’ இராட்சிங்கர் குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கை, வழிபாடு, இறைவேண்டல் ஆகிய மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது.

பெனடிக்ட் 1927-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் பிறந்தார். அது ஒரு புனித சனிக்கிழமை. அந்த நாளில் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, புதுத் தண்ணீரை நிரப்புவது வழக்கம். இராட்சிங்கருக்குத் தன் மகன் பாஸ்கா புது தண்ணீரில் திருமுழுக்குப் பெறவேண்டும் என்று ஆசை. குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகியிருந்தது. அம்மா இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை. இராட்சிங்கர் தன் மகனை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு, வேகமாகக் கோவிலுக்கு ஓடிப்போய், அவன் பிறந்த நாளிலேயே திருமுழுக்குப் பெறச்செய்தார். இது குறித்துப் பின்னாளில், “பாஸ்கா மறைபொருளில் மூழ்கி எழும் அனுபவத்தை என் வாழ்வின் முதல் நாளிலேயே எனக்குப் பெற்றுத் தந்த என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்என்று பெனடிக்ட் குறிப்பிடுகிறார்.

மரியோ பெர்கோக்லியோ

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தை. இரயில்வே துறையில் கணக்கராகப் பணிபுரிந்தார். இளம்வயதிலேயே ஒரு பெரும் கப்பல் விபத்தில் இறக்க வேண்டியவர். அவர் உயிர் தப்பிய நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்Hopeதன் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டிலிருந்து அர்ஜென்டினாவுக்குப் புறப்பட்டSS Principessa Mafaldaஎன்ற பயணிகள் கப்பல், 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் நடுக்கடலில் மூழ்கியது. மொத்தம் 314 பேர் இறந்தனர்.

இந்தக் கதை எங்கள் குடும்பத்தில், எங்கள் ஊரில், குடியிருப்பில்  திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. என்னுடைய தாத்தாவும், பாட்டியும், பிற்காலத்தில் என் தந்தையான இளம் மரியோவும், அந்தக் கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கித் தயாராக  இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லைஎனவே உயிர் பிழைத்தார்கள்.\"

ஒரு தந்தை காப்பாற்றப்பட்டு, ஒரு திருத்தந்தை நமக்குக் கிடைத்தார்.

ஒவ்வொரு மனிதத் தந்தையும், தந்தை கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்ய அழைக்கப்படுகிறார்.

தந்தைமையைக் கொண்டாடுவோம்!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)