news-details
ஆன்மிகம்
அன்னை மரியா இறைவேண்டலின் தாய்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 50)

திரு அவையின் அனைத்து ஆவணங்களும் திருமடல்களும் மரியன்னையின் உதவியை நாடி நிறைவடைவதை ஒரு மரபாகவே கொண்டுள்ளன. எனவே, இறைவேண்டல் பற்றிய நமது பார்வையும் பகிர்வும் அன்னை மரியாவோடு நிறைவடைவது பொருத்தமானதே.

அன்னை மரியாவுக்கு எத்தனையோ சிறப்புப் பெயர்களைச் சூட்டி நாம் மகிழ்கிறோம். அவர் இறைவேண்டலின் தாய் என்பது அவற்றுள் ஒன்று. நாம் இறைவேண்டல் செய்வதற்கும், நமது எல்லாப் பணிகளையும் நிறைவாக ஆற்றுவதற்கும் நம் தாய் நமக்குத் துணை நிற்கிறார். திருவிவிலியம் காட்டும் உண்மை இதுவே. திரு அவையின் மரபும் இதுவே. நமது சொந்த அனுபவமும் இதுவே.

தொடக்கத் திரு அவையினர் இறைவேண்டலில் ஈடுபட்டபோது, அன்னை மரியாவின் துணை அவர்களுக்கு இருந்தது என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது. “இயேசுவின் சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் (திப 1:14). அந்த இறைவேண்டலின் விளைவாகத்தான் தூய ஆவியார் பெருவிழாவின்போது அனைவரும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுக்கொண்டார்கள்.

தனதுஇறைவேண்டல்என்னும் மறைக்கல்வித் தொடரில் அன்னை மரியா பற்றி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைப் பருவத்திலிருந்தே மரியா இறைவேண்டலில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்றும், இளமைப் பருவத்தில் அமைதியிலும், இறைவனோடு உரையாடுவதிலும் அவர் நேரம் செலவழித்திருப்பார் என்றும் கூறுகிறார். வழக்கமான யூத மரபிலான மன்றாட்டுகளோடு, தன் வாழ்வில் இறைவன் செய்த அருஞ்செயல்களைப் போற்றிப் புகழும் இறைப்புகழ்ச்சியாளராகவும் (லூக் 1:47-55) அன்னை மரியா இருந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.

இதைவிட மேலாக, “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார் (லூக் 2:19) என்னும் பதிவின் வழியாக, மரியா ஓர் ஆழ்நிலைத் தியானி (Contemplative) என்பதையும் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் நம் திருத்தந்தை.

மேலும், மரியா மரபார்ந்த இறைவேண்டலில் மட்டும் ஈடுபடவில்லை; அவரது வாழ்வே ஓர்  இறைவேண்டலாக இருந்தது என்கிறார். மரியாவின் தாழ்ச்சியும், இறைத்திருவுளத்துக்குப் பணிதலும் இறைவேண்டலின் வடிவங்கள் என்பது திருத்தந்தையின் கருத்து.

நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்பதே மரியாவின் மிகச்சிறந்த இறைவேண்டல் என்று கூறி நம்மை நெகிழ வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் இறைப்பற்றை இழக்காமலிருப்பதும், இறைநம்பிக்கையில் நிலைத்திருப்பதும் எத்துணை பெரிய பேறு! “மரியா சிலுவையடியில் நின்றபோது இறைநம்பிக்கையில் உயர்ந்து நின்றார். அது மிகச்சிறந்த இறைவேண்டல் அல்லவா!” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களும் 2011-12-ஆம்  ஆண்டுகளில்இறைவேண்டல்பற்றிய தொடர் உரைகளைத் தனது புதன்கிழமை மறைக்கல்வி நேரங்களில் வழங்கியுள்ளார். நாற்பத்தைந்து வாரங்கள் தொடர்ந்து வழங்கிய இந்தத் தொடரில், ‘மரியாவின் இறைவேண்டல் உடனிருப்புஎன்னும் தலைப்பில் மரியன்னையின் இறைவேண்டலைப்பற்றிக் கற்பித்துள்ளார்.

மரியா இறைவனின் தாய் மட்டுமல்ல; திரு அவையின் தாயும்கூட அல்லவா! எனவே, மன்றாடும் திரு அவைக்கு மாதிரியாகவும் உடன் வேண்டுபவராகவும் திகழ்கிறார். நற்செய்தியாளர் லூக்காவின் பார்வையில் மீட்பின் வரலாறு மரியாவுடன் தொடங்கி, திருத்தூதர் பணிகள் நூலில் திரு அவையின் பிறப்பின்போது இறைவேண்டல் செய்த மரியாவுடன் நிறைவடைகிறது. வழிநெடுக மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிபவராகவும், அதனைப் பற்றிச் சிந்திப்பவராகவுமே காட்சி தருகிறார். எனவே, அந்தத் தாயை நாமும் பின்பற்ற வேண்டும் என்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்.

திருத்தந்தையர்களைப் போலவே, திரு அவைப் புனிதர்களும் மரியாவைத் தங்களின் இறைவேண்டல் மாதிரியாகக் கொண்டனர். தங்கள் பணிகளையும் இறைவேண்டலையும் மரியன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.

அன்னை மரியாவிடமிருந்து இறைவேண்டல் செய்ய கற்றுக்கொண்டவர்கள் என்று சில புனிதர்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, புனித தோமினிக் மரியன்னையைக் காட்சியில் கண்டு, ‘வானதூதரின் வாழ்த்துஎன்னும் செபமாலையைத் தோற்றுவித்தார்.

லூர்து நகரில் காட்சி தந்த மரியன்னையோடு இணைந்து செபமாலையை வேண்டும் வியப்பான பேற்றைப் பெற்றவர் புனித பெர்னதெத். அன்னை காட்சி தந்த 18 முறையும் செபமாலை அவரின் கைகளில் இருந்தது. பெர்னதெத் செபமாலையை மன்றாடியபோது, மரியன்னை அமைதியில் அவரோடு இணைந்தார். திருத்துவப் புகழ் கூறப்பட்டபோது மரியன்னையும் இணைந்துகொண்டார் என்னும் வியப்பான செய்தி பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரியன்னையின்மீது கொண்ட பக்தியினால் அனைத்துப் புனிதர்களுமே தங்கள் இறைவேண்டல் வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டனர். இன்றளவும் பல கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கும் மரியன்னை மன்றாட்டுகளுக்கும் சிறப்பிடம் இருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே மரியா இறைவேண்டலின் தாயாக விளங்குகிறார்.

நமது இறைவேண்டல் வாழ்வுக்கும் நம் தாய் மரியா துணை நிற்பாராக! அவரது துணையும் பரிந்துரையும் நம் அருள் வாழ்வை, இறைவேண்டலை ஊக்கப்படுத்தட்டும்.

மரியன்னையைப் போலவே நாமும் தனி வேண்டலில் இறைப்புகழ்ச்சியும், பிறரோடு இணைந்து மன்றாடுவதில் பரிந்துரையும், நம் வாழ்வின் நிகழ்வுகளை ஆய்வு செய்து, சிந்திப்பதில் தியானியாகவும் வளர்வோமாக! இறைத்திருவுளத்திற்குப் பணிதலும் எளிமையும் தாழ்ச்சியும் பிறரன்பும் நம்மில் செழிக்கட்டும்.

கடந்த 50 வாரங்களாக இந்தத் தொடரை எழுத அருள்கூர்ந்த இறைவனைப் போற்றி மகிழ்கிறேன். யூபிலி 2025-க்கு ஆயத்தமாக இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு இறைவேண்டலின் பரிமாணங்களை விரிவாக எழுத என்னை ஊக்குவித்து, பெருமைப்படுத்திய நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இறைவனுக்குத் திருவுளமானால், மற்றொரு தொடரில் மீண்டும் சந்திப்போம்.