இன்று நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் தெய்வீக அன்பையும் ஒன்றிப்பையும் உறவையும் உணர்த்துகிறது.
நாம்
ஒவ்வொருவரும் குழந்தையாக இருந்தபோது அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமானவர்
மூவொரு கடவுளே! குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில்
சிலுவை அடையாளம் வரைந்து, நமக்கு ஆசியளித்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்,
ஆமென்’ என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து
கூறும் ‘அர்ச்சிஸ்ட்ட சிலுவை அடையாளத்தினாலே...’ எனும் அடையாளச் செயலுமே நமது பெற்றோர்
நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் செபம். நாம் தட்டுத் தடுமாறி நடைபயின்றபோது திருமுழுக்கின்
வழியாகவே மூவொரு கடவுளின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம்மைத் திரு அவைக்கு வரவேற்றார்.
நமது வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக இருக்கின்ற திருப்பலியில் அருள்பணியாளர், ‘தந்தை,
மகன், தூய ஆவியாரின் பெயராலே!’ என்று தொடங்கி, அதே மூவொரு கடவுள் பெயரால் வாழ்த்துக்
கூறி இறுதியில், அதே பெயராலே இறைமக்களுக்கு ஆசி வழங்கித் திருப்பலிக் கொண்டாட்டத்தை
நிறைவு செய்கின்றார். இவ்வாறு நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் மூவொரு கடவுளின் உறவிலிருந்து
நாம் பிரிக்கப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.
தந்தை,
மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஆள்தன்மையில் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே கடவுளாகச்
செயல்படுகிறார்கள். படைத்தல், மீட்டல், காத்தல் ஆகிய முப்பெரும் செயல்கள் இவர்களிடத்தில்
காணப்படுகின்றன. இவ்வுலகை மீட்கும் செயலில் மூவொரு கடவுள் ஈடுபட்டதைப் புனித இஞ்ஞாசியார்
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் தொடக்கத்திலேயே ‘மூவொரு கடவுள் இவ்வுலகை மீட்க விரும்பும்போது,
தம்மிலிருந்து தமது மகனாக இயேசுவை அனுப்புகிறார். தமது இரத்தத்தால் இவ்வுலகை மீட்ட
இயேசுவைத் தொடர்ந்து தந்தையிடமிருந்து புறப்பட்டு வருபவர்தான் துணையாளராம் தூய ஆவியார்’ என்றே குறிப்பிடுகின்றார்.
‘மூவொரு
கடவுள்’ என்பது இன்றுவரை ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது.
ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார். மூவருமே ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை,
ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. இந்த மறையுண்மையை நமது அறிவுகொண்டு
புரிந்துகொள்ள முடியாது. புனித அகுஸ்தினாரும்கூட இந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள முடியாமல்
தடுமாறினார். பல நேரங்களில் இந்த மூவொரு கடவுள் கருத்தியலைப் படிக்காதவர்களைக் காட்டிலும்,
படித்தவர்களே புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். காரணம், படித்தவர்களிடம் இருப்பது
‘அறிவுத் தேடல்’; படிக்காதவர்களிடம் இருப்பது ‘நம்பிக்கைத்
தேடல்.’ “கடவுள் தம்மை நூல்கள் வழியாக அவ்வளவாக அறிவிப்பதில்லை; ஆனால், வாழ்வின் சான்று
வழியாக அறிவிக்கிறார்” (மே 26, 2024) என்று திருத்தந்தை பிரான்சிஸ்
கூறியதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
நம்மை
மீட்பதற்காகவே மூன்று ஆள்களும் ஒரே கடவுளாய் இணைந்திருக்கிறார்கள் என்று இறைநம்பிக்கையில்
ஏற்றுக்கொள்வதுதான் நமது ஞானத்தின் வெளிப்பாடாக அமைகிறது. இதைத்தான் இன்றைய முதல் வாசகம்
நமக்கு எடுத்துரைக்கிறது. ஞானத்தின் தொன்மை குறித்து விவரிக்கப்படும் இவ்வாசகத்தில்,
ஞானத்திற்கு ஆளுமை கொடுத்து விவரிக்கிறார் ஆசிரியர். இறைவனே ஞானமாக வெளிப்படுகிறார்.
ஞானமானது கடவுளின் மகனின் சாயல். ஞானம் கிறிஸ்துவிற்கு ஒப்பிடப்படுகிறது. ஞானம் கடவுளின்
சிந்தனையிலிருந்து வருகிறபடியால் அதனை மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளான மகனாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஞானம் தொல் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. அதாவது உலகம் தோன்றுவதற்கு முன்னரே
ஞானம் இருக்கிறது (8:23). மலைகள், குன்றுகள், சமவெளிகள், மணல்கள், வானம், கடல், மேகம்,
நீர்த்திரள், நீர் ஊற்றுகள் என அனைத்தையும்விட மிகத் தொன்மையானது ஞானம் (8:25-29).
உண்மைக் கட வுளை உணர்த்த விரும்பும் ஆசிரியர், ‘ஞானம் மனிதர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி
கொள்கிறது’ என்கிறார். அவரே நம் வாழ்வில் என்றும்
பிரசன்னமாக இருக்கிறார்; அவர் நமது இதயத்தின் ஆழத்திலும் ஆன்மாவிலும் வாழ்கிறார்; அவர்
நம்மைத் தனியாக விட்டுவிடமாட்டார்; அவரை நமது வாழ்விலிருந்து யாரும் எடுத்துவிட முடியாது
எனும் அழகான சில உண்மைகளை நமக்கு கற்றுத்தருகிறார்.
தாமாக
இருப்பவர், தனித்திருப்பவர், கண்டிப்புள்ளவர், காணமுடியாத தூரத்தில் உள்ளவர், ‘கடவுள்’ எனப் பெயரிட்டு அழைக்க முடியாதவர் என்றெல்லாம் இஸ்ரயேல்
மக்களுக்கு அறிமுகமான கடவுளை தந்தை, மகன், தூய ஆவியார் என்ற கூட்டுக்குடும்பமாக நமக்கு
அறிமுகம் செய்தவர் இயேசு. அவர் கடவுளை ‘தந்தையாக’ உணர்ந்தார்;
தந்தை-மகன் உறவை அவர் ஒவ்வொரு நாளும் அனுபவித்தார்; ‘தந்தை’ என்று கடவுளை உளமார அழைத்து, தம் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தினார்.
ஆகவே, மூவொரு கடவுளே நம் முதல் உறவினர்; நம் உடன் பயணிக்கும் நண்பர் என்பதை இயேசு நமக்கு
உணர்த்தியுள்ளார். இவ்விதம் நமக்கு அறிமுகமான கடவுள் நமக்குக் கற்றுத்தரும் பாடம்
‘கடவுள் - உறவின் ஊற்று’ என்பதே.
இந்த
உலகம் என்பது ஓர் அழகான குடும்பம். உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமைய வேண்டும் என்றால்,
நமது ஒவ்வொரு குடும்பத்திலும் பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்க
வேண்டும். மூவொரு கடவுள் தம்மிலே அன்புற்று வாழ்வது போன்று, நாமும் நம் குடும்பங்களில்
அன்புடன் வாழ வேண்டும். உறவில் வாழ்வது ஒன்றே இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு கடவுளின்
இலக்கணம். உறவே இறைவனின் உயிர்நாடி! கடவுள் என்னும் அச்சில் உருவாக்கப்பட்ட நாம், நம்முடைய
உறவுகளில் ‘நாமும் - கடவுளும் - பிறரும்’ இணைந்த குடும்பமாக வாழ முயற்சிக்கவேண்டும்.
“கடவுள் ஒருவரே, அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என ஒரு குடும்பமாக உறவில் ஒன்றிணைந்திருக்கிறார்” (மே 26, 2024) எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
கூற்று உண்மையானதே. நம் இறைவன் உறவுகளின் ஊற்றாக இருப்பதால், நாமும் உறவுகளுக்கு முதன்மையான
இடம் தரவேண்டும் என்பதே இப்பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் அழகான பாடம்.
நாம்
வாழும் இன்றைய உலகில், நம் உறவுகள் மிக அதிகமாகவே பழுதடைந்திருப்பதை மறுக்க இயலாது.
முகநூல், வாட்ஸ் ஆப், ஆண்ட்ராய்டு, ஏ.ஐ. காலம் வந்ததும் மனிதரின் உறவுகளும், வாட்ஸ்
ஆப் மயமாக மாறிவிட்டன. முன்கடந்து போவோரின் முகம் தெரியவில்லை. பின்நின்று சிரிப்போரின்
எண்ணம் புரியவில்லை. தலைதாழ்ந்தே எங்கும் பயணம். மனைவியும், கணவரும் வீட்டுக்குள்ளே
கைப்பேசியில் உரையாடல். உண்மையான, ஆழமான, எதார்த்தமான குடும்ப உறவுகளும், நட்பும் மெல்ல
மெல்ல தூரமாகச் செல்வதை உணர முடிகின்றது. பெற்றோர்மீது, அதுவும் வயதான பெற்றோர்மீது,
சுற்றத்தார்மீது நாம் கொண்டுள்ள உறவை மீண்டும் அலசிப்பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை
மீண்டும் சரிசெய்ய இந்த நாள் நம்மை அழைக்கிறது.
எனவே,
நம் குடும்ப உறவுகளுக்கு மிகச்சிறந்த மாதிரி மூவொரு கடவுளின் உறவு. “எல்லாரும் ஒன்றாய்
இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும்
ஒன்றாய் இருப்பார்களாக!” என்றே இயேசு இறைத்தந்தையிடம் வேண்டுதல் செய்கின்றார் (யோவா
17:21). “ஆவியானவர் தமது சொந்த அதிகாரத்தால் பேசுவதில்லை; ஆனால், அவர் தாம் கேட்பதையே
பேசுகிறார். வரப்போகிறவற்றை அவர் உங்களுக்கு அறிவிப்பார்” என
இயேசு அவர் பற்றி விளக்குகிறார் (16:13). எல்லாவற்றிற்கும் தொடக்கமும், எல்லாவற்றையும்
கொண்டிருப்பவருமான இறைத்தந்தை தமக்கென எதையும் கொண்டிராமல், எல்லாவற்றையும் தம் மகனிடம்
கொடுக்கிறார். ஆகவேதான், “தந்தையுடையவை யாவும் என்னுடையவையே” (யோவா 16:15) என்று இயேசுவால் கூறமுடிந்தது. தூய ஆவியாரும்
இயேசுவோடு மிக நெருக்கமாக இருந்து அவரை வழிநடத்தியதை இயேசுவின் வாழ்வு முழுவதிலும்
காண இயலும்.
ஆகவே,
மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் எப்படி வாழ்கிறோம்? நாம் பேசும்போது
நம்மைப்பற்றியும், நாம் ஆற்றும் செயல்களைப்பற்றியும் மட்டுமே பேசுகிறோம். நாம் முற்றிலும்
தூய ஆவியானவரின் செயலிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம்? நம்மிடம் இருப்பனவற்றை
அடிப்படை வசதிகளின்றி இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ள இந்த விழா நம்மை அழைக்கிறது. மூவொரு
கடவுள் மற்றவருக்காக வாழ்கின்ற கடவுள். அவர் நம்மையும் மற்றவருக்காக வாழுமாறு தூண்டுகிறார்.
நாம் ஒருவர் மற்றவரின்றி ஒருபோதும் இருக்க முடியாது என்பதையும் அவர் நமக்குக் கற்பிக்கின்றார்.
ஆகவே,
நாம் தீவுகள் அல்ல; இவ்வுலகில் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்த மனதாய் இருந்து, அவர்களுக்கு
உதவிடவும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மூவொரு கடவுளைப்போல உறவுடன் வாழவும் வேண்டிய
வரத்தை மூவொரு கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.