நம்மில் பலர் நல்லவர்களாய் இல்லாதிருக்க அடிப்படைக் காரணம் என்னவென்றால், பலருடைய அன்பை நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். நற்செய்தி என்றால் என்ன? ‘கடவுள் என்னை அன்பு செய்கிறார்’ என உணர்வதுதான் நற்செய்தி. கடவுளின் அன்பை உணர்ந்து எல்லாவற்றிற்கும் நன்றிகூற நமக்குக் கடமையுண்டு.
ஓசேயா
நூல் 11-ஆம் அதிகாரம் இறைவனின் பராமரிப்புப் பற்றி மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது: “இஸ்ரேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்துவந்தேன். எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமல் போனார்கள். அவர்கள் கழுத்தின்மேலிருந்த நுகத்தை அகற்றினேன். அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.”
“பால் குடிக்கும் தன் சேயைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்!” (எசா 49:15).
“என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன்; மதிப்புமிக்கவன்; இதோ, நான்
உன்மேல் அன்பு கூர்கிறேன்” (எசா
43.4).
“என் உள்ளங்கையில் நான் உன்னைப் பொறித்து வைத்துள்ளேன்” (எசா
49:16). இதைப்போல இன்னும் எத்தனையோ பகுதிகள் பழைய ஏற்பாட்டில் கடவுளின் அன்பைப்பற்றிக் கூறுகின்றன. நாம் நம்மையே மதிக்காவிட்டாலும், கடவுள் நம்மை மதிப்பிற்குரியவர்களாகப் பார்க்கின்றார்.
ஆண்டவர்
இயேசுவின் பிறப்பே அன்பு நிறைந்ததுதான். தாழ்ச்சி, எளிமை, புன்சிரிப்பு எல்லாம் நிறைந்த குழந்தை இயேசுவாக, கடவுள் மனிதராகப் பிறந்தது அன்பின் வெளிப்பாடுதான். அவர் வளர்ந்த விதத்திலே அன்பு. வளர்ந்த பிறகு அவர் செய்த அனைத்திலும் அன்பு. கானாவூர் திருமணத்திலே தண்ணீர் திராட்சை இரசமானது எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தும் இயேசுவின் அன்பு. இவ்வாறு அவருடைய பொதுவாழ்வின் மத்தியில் அவரது பெருந்தன்மையான இதயத்தைப் பார்க்கலாம். உண்ணக்கூட நேரமில்லாமல் பணியாற்றிய தமது சீடர்களைப் பார்த்து, தனியே வந்து “என்னோடு சற்று இளைப்பாறுங்கள்” என
அன்போடு அழைக்கின்றார். தொழு நோயாளியைப் பார்த்துப் பரிவு கொண்டார். கைம்பெண் தன் ஒரே மகனை இழந்தபோது, “அம்மா, அழாதே” என்று பரிவு கொண்டார். இப்படியாக ஒடுக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர் அனைவர்மீதும் அன்பு காட்டுகின்றது ஆண்டவரின் இதயம்.
துன்பப்படுபவர்களைத்
தூக்கி எறிந்துவிட்டுச் செல்லும் மக்கள் மத்தியிலே, திரும்பி வந்து கவனித்துக் கொண்ட நல்ல சமாரியனைப்போல் நம்மீது பரிவு கொண்டது நம் ஆண்டவர் இயேசுவின் இதயம் (லூக் 10). அதைவிட அதிகமாக, காணாமல்போன மகன் பற்றிய உவமையில், தந்தையின் அன்பை அடையாளம் காட்டும் இதயம்; மன்னிக்க மனமில்லாத மூத்த மகனைப்போல் இல்லாமல் தொலைவில் வரும்போது ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தமிட்டு, அழுது அணைத்த தந்தையின் இதயம்; மகனை மன்னித்து ஏற்றுக்கொண்டு புதிய ஆடை, மோதிரம், புதிய காலணி, விருந்து இவற்றால் மகிழ்ந்த தாராளமான தந்தையின் இதயம்; துன்புறுவோருக்காக அழுகின்ற ஆண்டவரின் இதயம்; எருசலேம் பட்டணம் மனம் மாறாததைக் குறித்துக் கண்ணீர் விட்ட இதயம்; இலாசரின் கல்லறையில் மார்த்தா-மரியாவின் துன்பத்திலே கண்ணீர் விட்டு அழுத இயேசுவின் இதயம்; இயேசு இறந்தபின் படைவீரர் ஒருவர் அவரது விலாவை ஈட்டியால் குத்தியபோது இரத்தமும் தண்ணீரும் வெளிவந்து, இறுதிமூச்சுவரை எல்லாவற்றையும் கொடுத்ததுதான் இயேசுவின் இதயம்.
இயேசுவின்
திரு இதயத்திடம் இருந்து இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகின்றார். “ஒன்று, உங்கள் அன்பு சொல்லில் இராமல், செயலில் வெளிப்பட வேண்டும்; இரண்டாவதாக, பெறுவதைவிட கொடுப்பதில் மகிழ்ச்சி காண வேண்டும்.” சிலர் அழகாய் சிரிப்பார்கள், நன்றாகப் பேசுவார்கள். அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்பார்கள். ஆனால், எதுவும் செய்யமாட்டார்கள். சிறு வயதிலிருந்து அதுவேண்டும், இதுவேண்டும் எனக் கேட்டுப் பழகிக்கொள்கிறோம். கொடுப்பது எப்போது? கொடுக்கத் தொடங்குங்கள். நல்லது செய்பவர்களுக்குப் பாராட்டுகளைப் பரிசாகக் கொடுங்கள். நல்ல பாதுகாப்பை, உடனிருப்பை வயதான பெற்றோருக்குக் கொடுக்கவேண்டும்.
நம்
திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் இதயத்திடமிருந்து நமக்குக் கற்றுத்தருகின்ற மூன்று பண்புகள்:
1.நெருக்கம்!
(Closeness) கடவுளிடமும்
குடும்பத்தாரிடமும் நெருக்கமாக இருக்க வேண்டும். அருகில் இருந்தாலும் தொட்டுக்கொள்ளாத தண்டவாளம்போல் அந்நியமாகவே வாழ்கிறோம். கடலில் இருக்கிற கூழாங்கல்போல் தொடப்படாமலேயே இருந்துவிடுகிறோம். கடவுள் நம் அருகில், மிக நெருக்கமாக இருக்கிறார். இரக்கத்துடன் இருக்கிறார். மென்மையாக இருக்கிறார். எனவே, நாம் மென்மையாக மாறவேண்டும். நம்மு டைய சாதாரண தொடக்கத்தை மறந்துவிடக் கூடாது. கடவுள் செய்த நன்மைகளுக்கு நன்றிகூற வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கடவுளின் இரக்கத்தையும் பராமரிப்பையும் நினைத்துத் திருப்பாடல்களை இசைத்ததுபோல, நாம் நன்றி கூறவேண்டும். ஆண்டவரின் வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும்.
2. துன்புறுதல்! (suffer) தேவையில்
இருப்பவர்களுக்காக, நம்முடைய சகோதர-சகோதரிகளுக்காக, நம் குடும்பத்தாருக்காகத் துன்புற வேண்டும். நமது பாவங்களுக்காக மட்டுமல்ல, மக்களுக்கு வாழ்வு கொடுக்கவும் துன்புற்றார் இயேசு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கான ஆக்கப்பணிகளிலே பங்கெடுத்துத் துன்புற வேண்டும்.
3. ஆறுதல் கூறுதல்!
(console)
நம் ஆண்டவர் ஆறுதல் அளிக்கிறார்; ஊக்கமூட்டுகிறார். இதுதான் இயேசுவின் இதயம். நாமும் அப்படித்தான் வாழ வேண்டும். இன்று இயேசுவின் இதயம் நம்மைப் பார்த்துக் கேட்கிறது: ‘என் அன்பை உணரமாட்டாயா? உணர்ந்தால் என்னைபோல் வாழமாட்டாயா?’ என்று. அவருடைய அன்புத்தாய் அன்னை மரியாவின் இதயமும் இதைப்போன்றுதான், கனிவான இதயம், மென்மையான இதயம், துன்புறும் இதயம்!
ஆண்டவர்
செய்த அனைத்துச் செயல்களையும் நினைத்து நன்றிகூறுகின்ற இதயம். அன்பின் வடிவமான இயேசுவின்
இதயம் நம்முடையதாகட்டும்.