1992-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர் டெரெக் ரெட்மண்ட் பங்கெடுத்தார். தன் ஓட்டத்தைத் துவக்கிய சில விநாடிகளிலே அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சினையால் அவர் கீழே விழுந்தார். ஒருசில விநாடிகளில் மீண்டும் எழுந்து, வலது காலை நொண்டியபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து டெரெக்கின் தந்தை ஜிம் ரெட்மண்ட் பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். “டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை” என்று தந்தை கூற, மகனோ கண்ணீர் மல்க, “அப்பா நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியதும், “சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்” என்று கூறி மகனைத் தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார். இறுதி ஒருசில மீட்டர் தூரத்தை டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தையும் அனுப்பி வைத்தார்.
வாழ்வெனும்
ஓட்டத்தில் பிரச்சினைகளால் நாம் வீழும்போது, ‘நம்மைத் தூக்கி நிறுத்த யாரும் இல்லையே!’ என்று அங்கலாய்க்கும்போது, அனைத்திலும் நம்பிக்கையை இழந்து நிர்க்கதியாக நிற்கும்போது அவமதிப்பு, வெறுப்பு, புறக்கணிப்பு என எத்தனையோ வலிகளைத்
தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றினை இழக்கும்போது நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தந்தையால் அனுப்பப்பட்ட துணையாளர் ஒருவர் இருக்கிறார். அவரே நம் தூய ஆவியார்!
இயேசுவின்
உயிர்ப்பு, அவரின் விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை எனும் இந்த மூன்று விழாக்களும்தான் நமது கிறித்தவ நம்பிக்கையின் அடித்தளமான பேருண்மைகளை வெளிப்படுத்தும் விழாக்கள். இன்று நாம் உலக விழாக்கள் கொண்டாடும்போது, எதற்காக விழாக்களைக் கொண்டாடுகிறோம் என்பதைவிட, விழாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேதான் அதிகக் கவனம் செலுத்துகிறோம். ஒரு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த விழா முக்கியத்துவம் பெறுகிறது; வெளி உலகிற்குத் தெரியவருகிறது. இன்று பகட்டும் பிரமிப்பும் பிரம்மாண்டமுமே விழாக்களின் உயிர்நாடி. ஆனால், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் ஆடம்பரமுமின்றி அமைதியாக நிகழ்ந்த விழாக்கள்தான் இயேசுவின் உயிர்ப்பும், அவரின் விண்ணேற்றமும், தூய ஆவியாரின் வருகையும். இந்த விழாக்கள் ஒருநாள் கேளிக்கையாக அல்லது எரிச்சலூட்டும் உலகக் கொண்டாட்டங்களில் வரிசையில் அமையாமல், நமக்குள் மாற்றங்களை உருவாக்கும் விழாக்களாக, வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கிப் புதுப்புது படிப்பினைகளைக் கற்றுத்தரும் விழாக்களாக இருக்கின்றன.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் பெருவிழா எனும் ‘பெந்தக்கோஸ்து விழா’ சீடர்களின் வாழ்விலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாள் சீடர்களின் அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றி கொண்ட நாள்; சீடர்களின் மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்புக்கெனத் திறக்கப்பட்ட நாள்; சீடர்களின் சந்தேகங்கள் அன்பு நிரம்பிய நம்பிக்கையினால் விரட்டப்பட்ட நாள். இது அறுவடையின் நாள்! ஆம், நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களைத் திரு அவைக்கு அறுவடை செய்யும் நாள். தமது மீட்புப்பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று தாம் ஏற்கெனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம் தூய ஆவியாரை நமக்கு அனுப்பிய நாள். இன்றே திரு அவை பிறந்த நாள்!
யோவான்
நற்செய்தியாளர் மட்டுமே தூய ஆவியாரின் வருகை, இயல்பு, பணிகள் பற்றி நான்கு இடங்களில் பேசுகிறார் (14:16-17,
25;15:26; 16:7-15). இன்றைய
நற்செய்திப் பகுதியில், இயேசு விரைவில் தங்களைவிட்டுச் சென்றுவிடுவார் எனப் பெரிதும் கலக்கமுற்ற சீடர்களை இயேசு திக்கற்றவர்களாக விடவில்லை (14:18); மாறாக, இயேசுவின்மீது சீடர்கள் அன்புகொண்டு, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்குக் கொடையாகத் தூய ஆவியாரை அருளுகிறார் (14:15). அவர் அவர்களோடு தொடர்ந்து இருப்பார், செயல்படுவார், தந்தை அனுப்பும் துணையாளர் மூலம் இயேசு சீடரோடு இருப்பார் (14:16), அவர் அவர்களிடம் திரும்பி வருவார் (14:18), அவரது பணியைத் தொடரச் செய்ய தந்தை மற்றொரு துணையாளரை அனுப்புவார் (14:16), அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் (14:26) என உறுதியளிக்கிறார்.
துணையாளரும்
தூய ஆவியாரும் ஒருவரா? அல்லது இருவேறு நபர்களா? என்னும் கேள்வி நமக்கு எழலாம். அவர்கள் இருவேறு நபர்கள் அல்லர்; மாறாக ‘துணையாளர்’,
‘தூய ஆவியார்’ என்பவை ஒருவரின் இரு பெயர்களே எனத் துணிந்து கூறமுடியும். இருவருமே புதிய ஏற்பாட்டில் ஆள்தன்மை கொண்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். துணையாளருக்கும் தூய ஆவியாருக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. துணையாளர் உண்மையை வெளிப்படுத்துபவர் (15:16);
தூய ஆவியாரே உண்மை. இருவருமே சான்று பகர்கின்றனர். துணையாளர் சீடர் வழியாகச் சான்று பகர்கிறார். தூய ஆவி சீடர்கள்மீது இறங்கி வந்து அவர்கள் சான்று பகர ஆற்றல் அளிக்கிறார் (திப 2:1-41). துணையாளரும் தூய ஆவியும் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்
(14:26; 16:13). எனவே,
தூய ஆவியே துணையாளர். இதனையே யோவான் இவ்வாறு கூறுகின்றார்: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்”
(15:26).
இயேசு
கூறிய துணையாளராம் தூய ஆவியாரின் செயல்பாடுகள் மேலானவை. அவருடைய பணிகள் பன்முகத்தன்மை கொண்டவை. ‘பராக்கிலீத்தோஸ்’ என்ற
கிரேக்க மூலச்சொல்லின் பொருளான ‘துணையாளர்’
என்ற சொல் நான்கு வகைகளில் பொருள்படுகின்றன. அவை: 1. வாதிடுபவர், 2. பரிந்துபேசுபவர், 3. ஆறுதல் அளிப்பவர், 4. ஊக்கம் ஊட்டுபவர். சீடர்களின் வாழ்விலே செயல்பட்ட துணையாளராம் தூய ஆவியார் எவ்வாறு நமது வாழ்வில் செயலாற்றுகிறார் என்பதைச் சிந்தித்து, இன்றைய நாள் சிந்தனையை நிறைவு செய்யலாம்.
பல்வேறு
தவறான குற்றச்சாட்டுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்ட சீடர்கள் தங்களது நற்செய்திப் பணியில் தூய ஆவியாரின் துணைகொண்டே பேசினர் (மத் 10:20; திப 6:10). இன்றைய முதல் வாசகத்தில், துணையாளராம் தூய ஆவியார் ‘நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள்’ அடையாளத்தில்
‘ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்து’
(திப 2:1-3) வெவ்வேறு மொழிகளில் பேசுவதற்கான ஆற்றலை வழங்குவதைப் பார்க்கிறோம். எனவே, நாம் நற்செய்திப் பணியின் பொருட்டு துன்ப துயரங்களைச் சந்திக்கும் வேளைகளில், நமது வலுவின்மையால் நம்பிக்கையை இழக்கும் நிலையில் நமக்காகப் பரிந்துபேசுபவராக, வாதிடுபவராக, நமக்குப் பதிலாகப் பேசுபவராகத் தூய ஆவியார் செயல்படுகிறார் (1யோவா 2:1). எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல “நாம் எப்போதும் தனியாக இருப்பதில்லை. தூய ஆவியார் எப்போதும் நம்மில் விழித்திருக்கிறார்; நம்மைப் பாதுகாக்கிறார்.”
உதவியளிப்பவரும்
வழிகாட்டுபவரும் உடன் வருபவருமான தூய ஆவியார் ஆறுதலும் மனத்திடமும் தந்து ஊக்கமூட்டுகிறார் (உரோ 12:8; எபி 31:22; திப 13:15). தூய மரிய மேக்தலின் தே பாசி எனும்
புனிதர் குறிப்பிடுவதுபோல, “தூய ஆவியார் உண்மையின் ஆவியார்; புனிதர்களின் வெகுமதி; ஆன்மாக்களின் தேற்றரவாளர்; இருளில் ஒளிரும் சுடரானவர்; ஏழைகளின் செல்வம்.” தூய ஆவியானவரே திரு அவையின் ஆன்மா. அவரே திரு அவையின் உள்ளிருந்து ஊக்குவிப்பவர். திரு அவையின் ஆன்மாவாய் இருக்கும் அவர் ஒவ்வொரு கிறித்தவரின் உள்ளத்திலும் குடிகொள்கிறார். எனவே, நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழி நடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை நாம் கேட்கவேண்டும். திருத்தந்தை
பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நமது இதயங்களைத் திறந்து, தூய ஆவியாரின் செயல்பாடுகளை அனுமதிப்பதன் மூலமே இறைவனின் புதிய கட்டளையை நாம் புரிந்துகொள்ள முடியும்.”
தூய
ஆவியார் நம் வழிகாட்டியாக, துணையாளராகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, அவருக்குச் செவிமடுத்தல் அவசியம். அருளடையாளங்கள் வழியாகத் தூய ஆவியாரே நமது
உள்ளத்தைத் தூய்மை செய்பவராக, துணை வருபவராக, உறுதிப்படுத்துபவராக, அன்பில் இணைப்பவராக, பணியில் திடப்படுத்துபவராக, நோயில் நற்சுகம் தருபவராக, உணவூட்டித் திடன் அளிப்பவராக நமது வாழ்வில் செயலாற்றுகிறார்.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் முக்கியப் பாடம் இதுதான்... ‘இறைவன் வானிலிருந்து இறங்கி வந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடுபவர் அல்லர்; மாறாக, அவர் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும் உயிர் வழங்கும் மூச்சாக எப்போதும் நம்முள் உறைந்திருக்கும் (1கொரி 3:16) இறைவன், துணையாளர் என்பது இப்பெருவிழா பறைசாற்றும் பேருண்மை.