இயேசுவின் “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவா 14:6) என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் சீடராகப் பிரதிபலித்த திருத்தந்தை பிரான்சிஸ் மாமனிதர்; மங்காத விளக்கு; இயேசுவின் பாதச்சுவடுகளை இன்பமாகப் பின்பற்றியவர்; கருணை உள்ளம் கொண்ட கடவுளின் படைப்பாற்றல்!
கடவுளை
அன்பால் உணரலாம்; இரக்கத்தினால் அறியலாம்; அன்பையும் இரக்கத்தையும் இரண்டறத் தன் துறவற வாழ்க்கையில் துணிவோடு பின்பற்றியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஆன்மிகத்தில் ஆழமானதால் அன்பால் உலகை ஆண்டவர். அவரை நினைக்காத உள்ளம் இல்லை, உணராத இல்லமும் இல்லை.
கொரோனா
என்ற கொள்ளை நோய் உலகைத் தாக்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவருக்காகவும் நம் மீட்புக்காகவும் புனித பேதுரு சதுக்கத்தில் விடாத மழையிலும் செபித்தார் என்பதற்கு நாங்களே சாட்சிகள். கடவுள்மேல் வைத்த பேரன்பாலும் நம்பிக்கையினாலும் அனைவரையும் ஆண்டவர்பால் அரவணைத்து, இறைவன்மீது நம்பிக்கையை ஆழப்படுத்தும் வகையில் காணொளியில் திருப்பலியை நிறைவேற்றி ‘திருவிருந்துதான் நமக்கு அருமருந்து’ என்று
ஒவ்வொரு நாளும் இறைப்பிரசன்னத்தில் வழிநடத்தியவர். இயேசுவின் விழுமியங்களான செபம், அன்பு, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை, தாழ்ச்சி இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, நம் இதயத்தில் விதைக்கப்படுகிறார்கள். பல நூற்றாண்டு இம்மண்ணிலே
பலராலும் போற்றப்பட இருப்பவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
“விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக” (மத்
6:9) என்று இயேசு தந்தையை நோக்கிச் செபித்ததுபோல திருத்தந்தை பிரான்சிசும் செபத்தின் மூலம் கடவுளின் தயவையும் வழிகாட்டுதலையும் நாடினார். திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வாழ்வின் ஆதாரமாகப் பார்த்தார். செபத்தின் மூலம் மனிதர்கள் கடவுளின் உதவியையும் ஞானத்தையும் பெறமுடியும் என நம்பினார். சிறியோர்
முதல் பெரியோர் வரை இறையன்பை எடுத்து இயம்பியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அகில உலகத்தை அன்பால் அரவணைத்தவர்; அன்புக்கும் அடிபணியாத உயிர்கள் எதுவுமில்லை என்பதை வாழ்வாக்கியவர்; இயேசுவின் முதன்மையான கட்டளையைக் கடைப்பிடித்தவர்; “முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே, தலைசிறந்த முதன்மையான கட்டளை”
(மத் 22:37); “உன்மீது நீ அன்புகூர்வது போல
உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” (மத்
22:39) என்ற இந்த இரண்டு கட்டளைகளுக்கும் சொந்தக்காரர். தன் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் கட்டளைகளைக் கடைப்பிடித்து இறைவனின் அருள்கரம் பிடித்தவர்.
ஏழை-எளியவர்கள்மீது இரக்கம் கொண்டார். பாவிகளின்மீது இரக்கம் கொண்டார். கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்மீது இரக்கம் கொண்டார். சிறையில் வசித்தவர்கள்மீதும் இரக்கம் கொண்டார். தந்தையாம்
கடவுளிடமும் இயேசுவிடமும் பெற்ற இரக்கத்தைத் தூய ஆவியின் துணையோடு செயல்படுத்தினார். ருவாண்டா
நாட்டில் நடந்த இனப் படுகொலைக்காக மன்னிப்புக் கேட்டார். பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்.
ஆடம்பரத்தைத்
தவிர்த்து ஏழைகளுடன் தொடர்புகொண்டு பொதுமக்களுடன் எளிதாகப் பழகிப் பணிவை வெளிப்படுத்தினார். எளிமையான வாழ்க்கைமுறை, சமூகத்துடன் தொடர்பு, எளிய மொழிகளைப் பேசுதல், சகோதரத்துவத்தை வலியுறுத்தல், மற்றவர்களைச் சார்ந்திருப்பது போன்ற செயல்கள் மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகப் பணிவு மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணமாக விளங்கினார். நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டுத் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்ட நம் திருத்தந்தை உயிர்ப்பில் இயேசுவோடு இணைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசுவார் என்ற நம்பிக்கையோடு நாம் நம்முடைய நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்வோம்.