news-details
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

இறைவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுதுஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார் (தொநூ 1:3-4). பேரொளியாம் கடவுள் படைத்த ஒளி அனைத்தையும் தெளிவுபடுத்துகின்றது; உண்மை நிலைகளை உணர்த்துகின்றது; அனைத்தையும் நலமெனக் கண்ட இறைவனின் பார்வை நமதாகும்பொழுது, நிறைவாழ்வை நோக்கிய எதிர்நோக்கின் திருப்பயணம் அருள்வாழ்வின் திருப்பயணமாகிறது.

பேரொளியான இறைவனின் திருமகன் மனுவுருவானதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் தனது நற்செய்தியில் இதை உறுதிப்படுத்துகின்றார்: “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது; ஆனால், உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை (யோவா 1:9-10).

இறைத்தந்தையோடு ஒன்றாய் இணைந்திருக்கும் இயேசு, பேரொளியாய் உலகில் நம்மோடு இருக்கின்றார். இந்தப் பேருண்மையை இயேசு நிக்கதேமுடன் உரையாடும்போது உறுதிப்படுத்துகின்றார்: “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும் (யோவான் 3:21).

கடவுளைசிக்கெனப் பற்றிகொண்டு அவரைச் சார்ந்து வாழ இறைவார்த்தையே நமக்கு ஒளியூட்டும், வழிகாட்டும், உள்ளிருந்து மெய்ஞானம் புகட்டும், உடனிருந்து செயலாற்றும். திபா 119:105 இதனை  உறுதிப்படுத்துகின்றது: “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!”

நாம் உலகின் ஒளியாகச் சுடர்விட வேண்டும் என்றால் உண்மையைச் சார்ந்தவர்களாய் இயேசுவின் குரலைக் கேட்டு, அவர் விருப்பப்படி  நன்மைசெய்து வாழவேண்டும். அப்பொழுது உலகில் ஒளியாகச் சுடர் விடமுடியும். இதனால் இயேசுவை அறியாதவர்களை அவரிடம் ஈர்க்கும் மீட்பின் கருவிகளாக, சீடர்களாக நாம் செயல்பட முடியும்.

இறையாட்சிப் பணியை வல்லமையுடன் ஆற்றி மறைச்சாட்சிகளான புனித அருளானந்தர், புனித தேவசகாயம், மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலரான புனித சவேரியார் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணங்களாக, வழிகாட்டிகளாக, உலகின் ஒளியாகத் திகழ்கின்றனர். இந்த மறைப்பணி தொடர்ந்து இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இறையன்பு பிறரன்பாக வெளிப்பட்டு இயேசுவின்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நிகழ்வைச் சாட்சியப்படுத்த விரும்புகின்றேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு தாய் தன் மகளுடன் எங்கள் துறவற இல்லத்திற்கு உதவி கேட்டு வந்தார். தாய்க்குச் சமையல் வேலை கொடுத்து, மகளைப் படிக்கவைத்தோம். திறமையும் ஆர்வமும் கொண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பில் சிறந்த வெற்றி பெற்றாள் அப்பெண். உடனே நல்ல வேலையும் கிடைத்தது. தங்கள் வாழ்வின் முன்னேற்றம் இயேசுவால்தான் என்பதை ஆழமாக நம்பி, அவருடைய பிள்ளையாக வேண்டும் என்ற ஆவலுடன் இருவரும் தாங்களாகவே முன்வந்து திருமுழுக்குப் பெற்றனர். இது அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்திய ஒரு நன்றி காணிக்கை. தன்னை வளர்த்தெடுத்து உயர்ந்திடச் செய்த அருள்சகோதரிகளுக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பேரொளியின் ஒளியாகச் சுடர்விடும் அனைவரும் இயேசுவின் வார்த்தையின்படி இறைத்தந்தையை மாட்சிப்படுத்த முடியும். “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5:16) என்ற இயேசுவின் வார்த்தை நம் வாழ்வாகட்டும். இது கத்தோலிக்கத் திரு அவையின் உறுப்பினர் ஒவ்வொருவரின் கடமையும்கூட.

திருமுழுக்கில் பெற்றோரிடமும் ஞானப் பெற்றோரிடமும் ஒளி ஒப்படைக்கப்பட்டு அவர்களது கடமை உணர்த்தப்படுகிறது. “பெற்றோர்களே, ஞானத் தாய்-தந்தையரே! உங்கள் குழந்தையின் உள்ளத்தில் அணையாது காக்கும் பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் இக்குழந்தைகள் ஒளி பெற்று, ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. நம்பிக்கையில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது அனைவரோடும் வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதி பெறுவார்களாகஎன்று அருள்பணியாளர் கடமையையும் பொறுப்பையும் உறுதிப்படுத்துகின்றார். இந்தத் திருமுழுக்கு வழிபாடு நாம் பேரொளியின் ஒளியாகவே என்றும் வாழவேண்டிய நம் கடமையை உணர்த்துகின்றது. எனவே, வாழ்வைப் பற்றிய வார்த்தையை வழங்க ஒளியில் வாழ்வோம். உலகின் ஒளியாவோம்.