news-details
சிறப்புக்கட்டுரை
அத்துமீறுகிறதா அமலாக்கத்துறை?

இந்திய அரசு பண மோசடிக் குற்றங்களை அந்நியச் செலாவணிச் சட்ட விரோதப் பண பரிமாற்றங்களைக் கண்டறிய 1956, மே 11 அன்று ஒரு புதிய புலனாய்வு அமைப்பை உருவாக்கியது. அமலாக்கத்துறை எனும் அத்துறை தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியையும் செய்தது. இன்று அமலாக்கத்துறை ஆளும் பா...வின் அரசியல் மிரட்டலுக்குப் பயன்படுத்தும் துறையாக உருமாறியிருப்பது பெரும் அவலம்.

பா... ஆட்சிக்கு முன் 262 அதிகாரிகள் இருந்த அமலாக்கத்துறை, இன்று 3000 அதிகாரிகளோடு ஊழல் மிகுந்த, அதிகாரம் குவிந்த, காவிச் சாயம் பூசப்பட்ட அடியாள் அமைப்பாக மாறிவிட்டது. அமலாக்கத்துறை ஊழல் மிகுந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வெளுக்கும் பா... வாஷிங்மிசினுக்கு மிரட்டியே ஆள்பிடிக்கிறது. ஆளும் பா...வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் துணைபோகிறது என்பதே நிகழ்காலக் குற்றச்சாட்டு.

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறைக்கு உள்பட்ட அமலாக்கத்துறைக்குத் தேசத்தின் முக்கிய நகரங்களில் 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இத்துடன் 11 துணை இயக்குநர் அலுவலகங்களும் உள்ளன. அமலாக்கத்துறையில் பணியாற்றும் 70 விழுக்காடு அதிகாரிகள் இந்திய வருவாய் சேவை, இந்திய நிர்வாகச் சேவை, இந்திய காவல் சேவை, மத்திய சுங்கக் காவல்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள். இவர்கள் கடந்த பத்தாண்டுகளில் அரசியல்வாதிகள்மீது பதிந்த வழக்குகள் 193. தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்குகள் இரண்டு மட்டுமே. அமலாக்கத்துறை பதிந்த பண மோசடி வழக்குகள் 5422. நிரூபிக்கப்பட்டுச்  சிறைக்குச் சென்றவர்கள்  23 பேர் மட்டுமே. அவர்களது வழக்கு வெற்றி விழுக்காடு 0.5 விழுக்காடு மட்டுமே. அந்நியச் செலாவணி மோசடிக் குற்றவாளிகளான குஜராத் தொழில் அதிபர்களை அமலாக்கத்துறை வெளிநாடுகளுக்குக் காலம் கடத்தியே தப்பவிட்டதாக ஐயம் உண்டு. ஆனால், அமலாக்கத்துறை  எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்மீது வேகம் காட்டுகிறது.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு 2021-2022 காலத்திற்கு உள்பட்டது. தில்லி அரசு மதுபான வணிகத்திலிருந்து விலகிச் சில்லறை மதுபான விற்பனைக்கு உரிமை வழங்கியது. இதில் அமலாக்கத்துறை கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது என வழக்குப் பதிந்தது. அன்றைய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அன்றைய தெலுங்கானா முதல்வர் . சந்திர சேகரின் மகள் கவிதா வரை கைது நடவடிக்கை நீண்டது. வழக்கு எந்நிலை எனிலும், ஆட்சி மாற்றங்கள் தில்லியிலும், தெலுங்கானாவிலும் நடந்தது. அதன் அடிதொட்டுத் தமிழ்நாட்டிலும் இதேபோன்ற காட்சியை அமலாக்கத்துறை அரங்கேற்றியது.

ஜி.எஸ்.டி. வரிமாற்றத்திற்குப் பின் மாநில அரசுகளுக்கு மது விற்பனை, பத்திரப் பதிவு, வாகன எரிபொருள் என்பவையே பிரதான வரி வருவாயாகும். தமிழ்நாடு அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனம், தமிழ்நாடு மாநிலச் சந்தைப்படுத்தும் கழகம் (டாஸ்மாக்) என்பதாகும். அதன் சில்லறை விற்பனையில் 2017 முதல் 2024 வரை முறைகேடுகள் நடந்ததாகத் தமிழ்நாடு காவல் துறையால் 41 முதல் 46 வரை குற்றப்பதிவிற்கான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. இவற்றில் 6 முதல் 7 வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் .தி.மு..-வின் ஆட்சிக்காலத்தில் நடந்தவை.

இது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு முன்னாள் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டார்: “எந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை உள் வருகிறது?”

குற்றம் நடந்த இடங்களைக் குறிவைக்காமல், அமலாக்கத்துறை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முதற்கொண்டுடாஸ்மாக் அதிகாரிகளைக் குறிவைத்துப் பெரும் ரெய்டு நடத்துகிறார்கள். கடந்த வாரத்திலேயே தமிழ்நாடு துணை முதல்வர், ஏன் தமிழ்நாடு முதல்வர்கூட அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி காவி ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ரெய்டு நடக்கும்போதே அன்றைய தமிழ்நாடு பா... தலைவர் அண்ணாமலைரூபாய் 1000 கோடி ஊழல்எனக் கொளுத்திப் போடுகிறார். அடுத்த நாள் அமலாக்கத்துறையும்தமிழ்நாட்டில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதுஎன அறிக்கை தருகிறது. புது தில்லியிலும் இதே ரூபாய் 1000 கோடி மதுபானக் கொள்கை ஊழல் என்றே அமலாக்கத்துறை அரசியல் சார்ந்த ஆட்டத்தைத் தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.

தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வுமுன் வழக்கு செல்கிறது. வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கிய தலைமை நீதிபதி அமலாக்கத்துறையை நோக்கிக் கேட்கிறார்: “அமலாக்கத்துறை இவ்வழக்கில் கையில் எடுத்த மூல வழக்கு எது? தனி மனிதக் குற்றங்களுக்காக, ஏன் ஓர் அரசு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமென்ன?” எனக் கேட்டு, “இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதுஎன்கிறார். இவை அனைத்து வரம்புகளையும் மீறியது எனவும்  கண்டிக்கிறார். வழக்கில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகளின் அலைப்பேசிகள் குளோனிங் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். “இது அமலாக்கத்துறை தன்னிச்சையோடு செயல்பட்டுத் தனிமனிதச் சுதந்திரத்தைப் பறிக்கிற செயல்என வாதிட்டார். அமலாக்கத்துறைக்கு எல்லை மீறுவது தினப்படி நடவடிக்கை. பொறியில் மாட்டிய பின் விழிப்பது கைவந்த கலை.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் முடிந்த சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்கச் சொல்கிறது. விசாரணை வேண்டாம் எனில், ரூ. 51 இலட்சம் தர வேண்டும் எனக் கூறி, ரூ. 20 இலட்சம் முதல் தவணைப் பெற்றார். இரண்டாம் தவணை ரூ. 20 இலட்சம் பெற்றபோது காரில் தப்பி ஓடி, துரத்திப் பிடிபட்டார். இவ்வாறு பெறப்பட்ட பணம், சக அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்ற தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் மதுரை அமலாக்கத்துறையின் அலுவலகம், தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. ஏன்... கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வழக்கில், அமலாக்கத்துறையின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் சி.பி..யால் கைது செய்யப்பட்டதும்  கடந்தகாலப் பதிவு.

கேரளாவில் முந்திரி வியாபாரியைப் பண மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூபாய் இரண்டு கோடி கேட்ட கொச்சி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சேகர் குமாரும், இராஜஸ்தானில் சிட் பண்டு (chit fund) விவகாரத்தில் ரூபாய் 15 இலட்சம் கேட்ட இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறையின்இலட்சணமானமுகமாக இருக்கிறார்கள். அமலாக்கத்துறை எவ்வளவு வெளிப்பட்டாலும், தன் தன்மை மாறாமல் ஆளும் காவி பா...விற்குச் சேவகம் செய்வதில் குறியாக உள்ளது. உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை குட்டுப்பட்டாலும் வலிப்பதில்லை.

முன்னாள் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மற்றும் பிணையின்போது அமலாக்கத்துறைக்கு  நீதித்துறை காட்டிய கடுமை, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கு... எனப் பல வழக்குகள் உதாரணங்கள்.

அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் எத்தனை  அடி வாங்கினாலும்எவ்வளவு அடித்தாலும், தாங்கும் வலுகொண்டதாக உள்ளது. அமலாக்கத்துறை ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தன்னாட்சிப் பெற்ற சுயாட்சி அமைப்பாகத் தன்னை வடிவமைத்தால், மக்களிடையே மதிப்புப் பெறும்.