news-details
ஆன்மிகம்
அடைக்கப்பட்டோரின் அழுகுரல் (நீங்கா நினைவுகள் – 1)

நீதி அப்பொழுதே கிடைத்தால் மட்டுமே அது நீதி; அந்த நீதி சில நிமிடங்களைக் கடந்தால், அது அநீதியின் குரலாக மாறிவிடுகிறது.

காலமும் சூழலும், இயற்கையும் இயலும், உண்மையும் பொய்யும், தேடலும் தேவனும், அறிவியலும் அரசியலும் மாறிவருகின்ற இன்றைய காலச்சூழலில் நீதி, நேர்மை, உண்மை, இரக்கம், அரவணைப்பு என்பதனைத் தேடுவது மனித வாழ்க்கையில் காண இயலாத பொக்கிஷமாக மாறிக்கொண்டிருக்கிறது.

அநீதிக்காகக் குரல் கொடுத்த நீதிமான்கள் ஏராளம் ஏராளம்! உண்மைக்காகப் போராடிய புண்ணியவான்கள் ஏராளம் ஏராளம்!

யார் யார் கண்டுகொள்ள முடியும்? அடைக்கப்பட்ட மனிதனின் கண்ணீரையையும் கவலையையும். சிறைக்குச் செல்பவர்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்தவர்களும் அல்ல; நேர்மைக்காக வந்தவர்களும் அல்ல; பல பேர் தவறுக்குத் தண்டனையாக வந்தவர்கள், சில பேர் பிறரைக் காக்கத் தானாக வந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு; வந்த கதை கேட்டால் பலருக்குக் கண்ணீரும், சொந்தக் கதை கேட்டால் சிலருக்குக் கொடுமையும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அழுகுரல்... அழுகுரல்... சிறையில் அடைக்கப்பட்ட பலரின் அழுகுரல்!

குடும்பத்திற்காக, உறவுகளுக்காக, நண்பனுக்காக, அரசியலுக்காக, அமைதிக்காக, மற்றவருக்காக, தனக்காக என்று பல்வேறு சூழ்நிலையில் அடைக்கப்பட்ட மனிதர்களின் அழுகுரல் யார் காதுகளுக்கும் கேட்காது. அடைக்கப்பட்டவரின் அழுகுரலுக்குச் செவிகொடுப்பவர்கள் சிலர். அதிலும் பல அழுகுரலுக்கு அமைதி அளித்தவர் நமது திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை அவர்கள் நற்செய்தியின் விழுமியங்களானநான் சிறையில் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்தீர்கள்என்பதனைத் தன் வாழ்வாக வாழ்ந்தவர். சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பது, அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுவது, அவர்களின் காலடிகளைக் கழுவுவது போன்ற பல்வேறு செயல்களை அவர்களுக்காகச் செய்து அழுகையை அரவணைப்பில் மாற்றிக் கொண்டிருந்தவர்.

மக்கள் குரல்என்ற இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியிலே திருத்தந்தை இவ்வாறு கூறுகிறார். “நான் சிறைகளுக்குச் செல்கின்ற வேளையில் என் உள்ளம் உருகும். எனது மூன்று பெரிய வியாழன் கொண்டாட்டங்களில் இரண்டினைச் சிறைகளிலே காலடிகளைக் கழுவும் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இத்தாலியிலே ஒரு சிறைக்குச் சென்று சிறைக்கைதிகளோடு உணவருந்தி உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஓர் எண்ணம் எனது தலையில் உதித்தது. இங்கே நான் ஒரு கைதியாக இருந்தால்என்ற நினைப்பு. யாரும் குற்றம் செய்ய மாட்டோம், சிறையிலே அடைக்கப்பட மாட்டோம் என்ற நிச்சயம் இல்லை. நான் இங்கு வராமல் கடவுள் எப்படிக் காப்பாற்றினார்? என்று கடவுளிடம் கேட்பேன். அவர்களுக்காக நான் வருத்தமுறுகிறேன். நான் சிறையில் இல்லை என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். பெரும் குற்றங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியதுபோல அவர்கள் காப்பாற்றப்படவில்லை. அந்த நினைப்பு என்னை உள்ளத்தில் அழவைக்கிறது. அந்த உணர்வு அழுத்தமாகவே உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

நீதியரசர்களின் நீதி சாட்சிகளையும், ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், அடைக்கப்பட்ட மனிதனின் அழுகுரல் எதையும் ஈடு செய்ய முடியாது. வார்த்தைகளும் வசனங்களும் மாறி மாறி பேசினாலும், நீதியும் நேர்மையும் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டாலும், அன்பும் அமைதியும் உறவுகளில் திளைத்தாலும் காரணமும் சூழ்நிலையும், தன்னிடம் உள்ள தவறான குணத்தால்  அடைக்கப்பட்டு மனிதனின் அழுகுரலின் வேதனை; பார்ப்பவருக்கு அல்ல, அதை உணர்ந்தவர்களுக்கு...!