திண்டுக்கல் மறைமாவட்டத்தில் யூபிலி 2025-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மாணவர்களுக்கான நம்பிக்கை வளர் மாநாடு ஜூன் மாதம் 7-ஆம் நாள் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்கள், “மாணவர்கள் இந்த யூபிலி ஆண்டில் இறைநம்பிக்கையில் வளர்ந்து நல்ல கிறித்தவ மாணவர்களாக, இயேசுவுக்குச் சான்றுபகர்கின்றவர்களாக வாழவேண்டும்” என்று எடுத்துரைத்தார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுவின் பொதுச்செயலர் அருள்பணி. பெனடிக்ட் ஆனலின் ‘சிறார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற தலைப்பில், “நாம் எல்லாரும் கடவுளின் அன்பான பிள்ளைகள்; நம்மோடு வாழும் எல்லா உயிர்களும் நம் சொந்தங்கள்; நாம் பூமியைப் பண்படுத்தி, பாதுகாத்து அதனுடன் பயணிக்கப் பிறந்தவர்கள்” என்ற கருத்தை முன்வைத்தார். திண்டுக்கல் மறைமாவட்டக் குருகுல முதல்வர் பேரருள்பணி. த. சகாயராஜ் அவர்களும், மரியன்னை பள்ளி இல்ல அதிபர் அருள்பணி. மரிவளன் சே.ச. அவர்களும் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வாழ்த்திப் பேசினார்கள். இம்மாநாட்டில், மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலிருந்து 850-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் கலந்துகொண்டனர். புனித தோமா அருள்பணி மைய இயக்குநர் அருள்பணி. அ. சூசை ஆரோக்கியதாஸ் மற்றும் யூபிலி ஆண்டு ஒருங்கிணைப்பாளரும், புனித வளனார் பேராலயப் பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான அருள்பணி. இரா. மரிய இஞ்ஞாசி ஆகியோர் இம்மாநாட்டைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.