அன்புச் செல்வன்: “தந்தையே! பிறப்புநிலைப் பாவம் என்பது மனம் தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்பட்டு, புறம் நோக்கிச் சென்று, தன் வாழ்வின் மகிழ்வைத் தேடுவதற்கான வேட்கை என்று கூறினீர்கள். இத்தகைய பிறப்புநிலைப் பாவத்தைதான் திருமுழுக்கு அருளடையாளம் கழுவுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அது எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க முடியுமா?”
அருள்பணி:
“இங்கு ஆற்றல் மையங்கள் (energy centres) குறித்து நாம்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நம் உடலில் ஏழு ஆற்றல் மையங்கள் உள்ளன. இந்த ஏழு இடங்களும் உடலின் நரம்பு மண்டலத்தோடு மிக நெருங்கியத் தொடர்பு உள்ளவையாக இருப்பதோடு, உடல் மற்றும் மனநலனைப் பேணுவதற்குக் காரணமான ஏழு சுரப்பிகளோடு (glands) தொடர்புடையதாக இருக்கின்றன. முதலாவது ஆற்றல் மையமானது, நம் உச்சந்தலையில் உள்ளது. குழந்தைகளின் தலையைப் பார்த்தோம் என்றால் அவர்களது உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போன்ற ஒரு வட்டமான பகுதி பள்ளமாக இருப்பதையும், அதைத் தோல் மூடி இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதுவே, உச்சந்தலை ஆற்றல் மையம். இந்த ஆற்றம் மையம் மூளையின் மேற்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியோடு (pineal gland) தொடர்பு உடையது.
இரண்டாவது
ஆற்றல் மையம், நம் புருவ மத்தியில் உள்ளது. இது பிட்யூட்டரி சுரப்பியோடு (pituitary gland) தொடர்புடையது. மூன்றாவது
ஆற்றல் மையம், நம் தொண்டைப்பகுதியில் உள்ளது. இது தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. நான்காவது ஆற்றல் மையம், நம் இதயத்திற்கு அருகில் உள்ளது. இது ‘இதய ஆற்றல் மையம்’
(Heart Center) என்று
அழைக்கப்படுகிறது. இது தைமஸ் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஐந்தாவது ஆற்றல் மையம், நம் தொப்புளுக்கு அருகில் உள்ளது. இது கணையம் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஆறாவது ஆற்றல் மையம், நம் பாலியல் உறுப்போடு தொடர்புடையது. இது பாலியல் சுரப்பிகளான டெஸ்ட்ரஜன் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஏழாவது ஆற்றல் மையம், நம் முதுகுத் தண்டு வடம் முடியும் இடத்தில் உள்ளது. இது அட்ரினல் சுரப்பியோடு தொடர்புடையது.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, இந்திய ஆன்மிக மரபில் கூறப்படும் ஏழு சக்கரங்கள் (seven chakras) என்பனவற்றிற்கும், இந்த ஆற்றல்
மையங்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது.”
அருள்பணி:
“உண்மைதான்! இந்திய ஆன்மிகத்தின்படியும் இன்றைய அறிவியலின் கூற்றுப்படியும், ஒரு மனிதரின் மேற்கண்ட ஏழு ஆற்றல் மையங்களும் சிறப்பாகச் செயல்படும்போது மேற்கண்ட ஏழு சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. இச்சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்போது நம் வாழ்வு முழு மனித வாழ்வாக மாற ஆரம்பிக்கிறது.”
அகஸ்டின்:
“ஆச்சரியமாக இருக்கிறது தந்தையே! இந்த ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளின் செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் கூறுங்கள்...”
அருள்பணி:
“ஒவ்வோர் ஆற்றல் மையமாக எடுத்துச் சிந்திக்கலாம். உச்சந்தலை ஆற்றல் மையமானது பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான இணைப்புப் பாலமாகக் கருதப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆற்றல் அபரிமிதமாக நமக்குள் நுழைவது இந்த இடத்தின் வழியாகத்தான். இந்த ஆற்றல் மையம் பீனியல் சுரப்பியோடு தொடர்புடையது. அறிவியல் ஆராய்ச்சிகளின் பின்னணியில் பார்க்கும்போது நம் மனத்தை அமைதிப்படுத்தி, எண்ணங்களைக் குறைத்து மனத்தைத் தளர்வான நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய தன்மை பீனியல் சுரப்பிக்கு உண்டு. தியானத்தின்போது மனத்தின் எண்ணங்களைக் குறைத்து, உடலைத் தளர்வான நிலைக்குக் (relaxed state) கொண்டு செல்வதில்
பீனியல் சுரப்பியின் பங்கு அபரிமிதமானது. நாம் இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு ஏதுவாக மெலாட்டானின் (melatonin) என்ற வேதிப்பொருள் சுரப்பதற்குக் காரணமாக இருப்பதும் இந்தப் பீனியல் சுரப்பியே! இந்த ஆற்றல் மையம் அடைபட்டுக் கிடக்குமென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எப்பொழுதுமே தனித்துவிடப்பட்டு, தனிமையால் துன்புறுவது போன்ற உணர்வு நம்மிடம் இருக்கும்.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, டெகார்த்தே என்ற தத்துவயியலாளர் ஆன்மாவிற்கும், பீனியல் சுரப்பிக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே
முன்வைத்தார். ஆன்மாவும் உடலும் பீனியல் சுரப்பியா(யி)லே ஒருங்கிணைக்கப்படுகின்றன
என்பது அவரது கருத்து.”
மார்த்தா:
“தந்தையே! இந்த மையம் அடைபட்டுக் கிடப்பது எதனால்?”
அருள்பணி:
“ஏராளமான எண்ணங்கள் நம் மனத்தில் இடையறாது ஓடிக்கொண்டிருப்பது முதல் காரணம். மனம் ஏராளமான எண்ணங்களை உருவாக்கி சஞ்சலத்தில் இருக்கும்போது பிரபஞ்சத்தின் ஆற்றலும், கடவுளின் அருளும் நமக்குள் பாயாது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, ‘நான்’ என்ற அகந்தையோடும், ‘எனது’ என்ற பற்றோடும், ‘எனக்கு’ என்ற சுயநலத்தோடும் வாழ்கின்றபோது நம் வாழ்வு முழுக்க முழுக்க தன்னை மையப்படுத்திய வாழ்வாக மாறிவிடுகின்றது. அகந்தையோடு வாழ்கின்ற மனிதர் கடவுளிடமிருந்து அந்நியமாகி விடுகிறார்.”
கிறிஸ்டினா:
“தந்தையே, அடுத்தடுத்த ஆற்றல் மையங்கள் குறித்துக் கூறுங்களேன்?”
அருள்பணி:
“புருவ மத்தியில் உள்ள இரண்டாவது ஆற்றல் மையமானது இந்திய ஆன்மிகத்தில் ‘நெற்றிக்கண்’ என்றும்,
‘மூன்றாம் கண்’ என்றும் அழைக்கப்படுகிறது. வாழ்வைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும்
தெளிவான, சரியான புரிதலைக் கொண்டிருப்பதற்கு இந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் நம் புரிதல் குறைவுபட்ட ஒன்றாக இருக்கும். குறைவுபட்ட புரிதலில் இருந்து வரும் செயல்பாடுகளும், வாழ்வியல் அணுகுமுறைகளும் அரைகுறையாக இருக்கும். இந்த ஆற்றல் மையம் பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்பு உடையது. பிட்யூட்டரி சுரப்பியானது நம் நாளமில்லா சுரப்பு மண்டலத்தில் தலையாயச் சுரப்பியாகக் (master gland) கருதப்படுகிறது. உடலில் நடைபெறும்
ஏறத்தாழ எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிட்யூட்டரி சுரப்பிக்கு உண்டு. இது தமிழில் ‘கவச்சுரப்பி’ என்று
அழைக்கப்படுகிறது. தொண்டைப்பகுதியில் உள்ள ஆற்றல் மையம் நம் தொடர்புகொள்ளும் திறன் (Communi
-cation), கருத்துகளை
வெளிப்படுத்தும் திறன் (expression), உண்மைக்கான தேடல் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த
ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்படும்போது பேச்சில் தெளிவும், தொடர்பு கொள்ளுதலில் உண்மைத்தன்மையும் இருக்கும். இவ்வாற்றல் மையம் தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. தொண்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இச்சுரப்பி உடலின் வளர்ச்சிதை மாற்றம் (metabolic process), உடலின் செரிமானம், மூளைவளர்ச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் இதய ஆற்றல் மையம் அன்பு, மன்னிப்பு, திறந்த மனம், பிறர்மீதான நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய சுரப்பி தைமஸ். மருத்துவயியலின் கருத்துப்படி தைமஸ் சுரப்பியானது உடலிலிருந்து நோயை விரட்டுகின்ற ‘T’ Blood அணுக்களை
உருவாக்குகிறது. இவ்வாறு உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குதலில் இந்த ஆற்றல் மையமும் தைமஸ் சுரப்பியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொப்புள்
பகுதியில் உள்ள ஆற்றல் மையம் உடலின் ஆற்றல் அளவு (energy level), செரிமானமடைந்த உணவை
உள்வாங்கும் திறன், சுய அடையாளம் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையமானது கணையம் சுரப்பியோடு தொடர்புடையது. உடல் நலனைப் பேணுவதில் இந்த ஆற்றல் மையத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. உணவுச் செரிமானம், உணவை ஆற்றலாக மாற்றுதல், உடலில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்திருத்தல் போன்ற பணிகளைத் தொப்புள் ஆற்றல் மையமும் கணையமும் இணைந்து செய்கின்றன. பாலியல் உறுப்போடு தொடர்புடைய ஆற்றல் மையம் படைப்புத்திறன், இன்பம், பாலியல் வேட்கை போன்றவற்றோடு தொடர்புடையது. இவ்வாற்றல் மையத்தின் செயல்பாடானது இந்தப் பகுதியில் உருவாக்கப்படும் டெஸ்ட்ரஜன், ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் சுரப்பிகளோடு தொடர்புடையது.
ஏழாவது
ஆற்றல் மையம் முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் உள்ளது. இது உடலின் அடிப்படைத் தேவைகளான உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, சமநிலைத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய அட்ரினல் சுரப்பியானது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான ‘சண்டையிடுதல் அல்லது சரணடைதல்’
என்ற வழிமுறையை நமக்குள் முன்னெடுக்கிறது.”
அகஸ்டின்: “ஏழு ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகள் குறித்தும் தெளிவைக் கொடுத்ததற்கு நன்றி தந்தையே! இவற்றுக்கும், திருமுழுக்கு அருளடையாளத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”
அருள்பணி: “அடுத்து நாம் சந்திக்கும்போது இது குறித்துப் பேசுவோம்.”
(தொடரும்)