உழவுத் தொழிலில் நற்பலன் கிடைக்க நாற்று, நாற்றங்கால் இரண்டுமே சிறப்பாக இருக்கவேண்டும். இவற்றுள் ஒன்றின் தன்மை மாறினாலும் நிறைபலன் என்பது எட்டாக்கனியே!
ஒவ்வொரு
பள்ளியும் ஒரு நாற்றங்காலே! அங்கு நற்பயிர்கள் நடப்படவும் அல்லது நடப்பட்ட பயிர்கள் யாவும் நன்கு பராமரிக்கப்படவும், நற்பலன் கொடுக்கும் வகையில் அவை யாவும் பண்படுத்தப்படவும் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், எங்கும் எப்போதும் அது நம் எண்ணம்போல் சீராக, சிறப்பாக அமைவதில்லை.
பள்ளிகளில்
நிகழும் அண்மைக்கால நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து வெளிவரும் பொதுவெளி ஊடகச் செய்திகளும் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. இன்றைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
கடை
திறக்கப்பட்டக் கலாச்சாரச் சீரழிவுகளும், கட்டுப்பாடற்றச் சமூகக் கட்டமைப்புகளும் இன்றைய மாணவர் சமூகத்தைப் பெரிதும் சீரழித்துக் கொண்டிருக்கிறதே என்ற குற்றப்பழியுணர்வு நம்மை நாளும் குடைந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர்களின்
பாலியல் தொந்தரவுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மாணவர் சமுதாயமோ, தங்களுக்குள்ளே சந்திக்கும் கட்டுக்கடங்காத பாலியல் பிரச்சினைகளும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.
கடந்த
வாரம், காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் தொந்தரவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர் எனும் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வது?
உலக
அளவில், 13 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் (150 மில்லியன்) சக மாணவர்களால் பாலியல்
தொல்லைக்கு ஆளானதாகவும், இந்தியாவில் 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 28.9 விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் குறிப்பாக, தென்னிந்தியாவில் 8 முதல் 12 வயதுடைய பெண் குழந்தைகளில் 43.3 விழுக்காட்டினரும், 12 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளில் 22.6 விழுக்காட்டினரும் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாகவும், 56.6 விழுக்காடு குழந்தைகளுக்கு ‘தவறுதலான தொடுதல்’
(Bad touch)
வழியாகப் பாலியல் குற்றங்கள் பள்ளியில் நிகழ்ந்துள்ளதாகவும் ‘யுனிசெப்’
(UNICEF - United Nations International Children\'s Emergency Fund)
எனும் நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இராக்கிங்,
சாதிய உணர்வில் குழுக்களாகச் செயல்படுவது, வன்முறைகளில் ஈடுபடுவது, குடிப்பழக்கம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, மாணவர் ஆசிரியர்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஆசிரியை தன் வகுப்பு மாணவனையே அழைத்துக்கொண்டு தலைமறைவாவது, பிறகு திருமணம் செய்துகொள்வது, ஆண் ஆசிரியர்கள் மாணவியர்மீது கொண்ட பாலியல் சீண்டல்கள், அதைத் தொடரும் வழக்குகள், மாணவ-மாணவியரிடையே மலரும் பாலியக் காதல் உணர்வுகள்... என்ற வரிசையில் இன்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாணவப் பருவத்திலேயே, அதுவும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே வயது வரம்பு மிஞ்சி நிகழ்ந்திருக்கும் இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு யார் பொறுப்பாவது? எங்கே போகிறது இந்த மாணவர் சமுதாயம்?
‘இயற்கையின் படைப்பில் பாலுணர்வு மிகுந்தது மனித இனம் மட்டுமே’ என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள். அது தக்கப் பருவ நிலைகளில் வளர்நிலை காணவேண்டும். காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு எழும் பாலுணர்வுகள், அதுவும் மாணவப் பருவத்திலேயே எழுவது உடல்நலத்தின், மனவளர்ச்சியின், அவர்களுடைய உளவியலின் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
‘சீரான பாலுணர்வே மனநலத்தின் அடையாளம்’
என்கின்றது உளவியல் ஆய்வு. இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை ‘மனநோயாளிகள்’ என்று
கூறுவதைவிட வேறென்னவென்று கூறுவது?
இக்குற்றச்
செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளும், வாழ்வியல் சூழல்களும், பொழுதுபோக்குச் செயல்பாடுகளும், வளரும் உறவு முறைகளும் நுண்ணியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
மனம்
போகும் வழியில் கால் போகக்கூடாது என்பதற்காகத்தான் சமூக வாழ்வின் நாகரிகத் தளத்தில் பல கட்டுப்பாடுகளை, அறநெறி வழிமுறைகளை
நம் முன்னோர்கள் வகுத்துத் தந்தனர். அவையே உயர்ந்த ஒழுக்கநெறிகளாக நம்மைப் புடமிடுகின்றன. அன்று
முதல் இன்றுவரை மனித மனத்தில் எழும் பாலுணர்வுகளை நெறிப்படுத்தும் தளமாக அமைவது நம் குடும்பங்களும் பள்ளிக்கூடங்களுமே!
உடல்
சார்ந்த பாலுணர்வைச் சமூகம் சார்ந்த பண்பாட்டுத் தளத்தில் நெறிப்படுத்தி வாழக் கற்றுக்கொள்பவரே நாகரிகம் அறிந்த, ஆளுமை நிறைந்த மனிதர். நமது குழந்தைகளும் நாகரிகம் அறிந்து, ஆளுமை நிறைந்து வளரவே, வாழவே நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், முறையாகப் பண்படுவதற்கு முன்பே, இன்றைய மாணவப் பருவம் முதிர்ச்சியுற்று, முறைதவறிப் பாலியல் சகதியில் சரிந்து விடுகின்றது. வளரிளம் பருவத்தில் பாலுணர்வு மாற்றங்கள் நிகழ்வது இயற்கை; ஆயினும், பாலுணர்வுச் சிந்தனைகளே மாணவப் பருவத்தின் வாழ்வாகிவிடக்கூடாது.
இன்றைய
தலைமுறைக் குழந்தைகளுக்கு ‘புலனடக்கம்’ என்பதன் பொருள் புரிவதில்லை. ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி வாழும் வாழ்க்கைதான் அறம் நிறைந்தது. எதிலும் வரையறை மீறாமல் வாழ்வதற்குப் பெயர்தான் அறம். மாணவப் பருவத்தில் சீரான பாலுணர்வு கொண்டு, மனநலம் பேணப்பட வேண்டும். மாணவப் பருவம் மட்டுமல்ல, வாழ்வே சிறப்பது மனநலம் பொறுத்தே!
விதை
மண்ணுக்குள் மடிவது வளர்நிலை கண்டு நற்பலன் தரவே! விதையை மூடியிருக்கும் மண், விதையை அழுத்துவதற்கன்று; அதனுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கன்று; மாறாக, விதை பக்குவப்படுவதற்கே! சமூக ஒழுங்குகளும் ஒழுக்கநெறிகளும் நம்மைப் பண்படுத்துவதற்கே அன்றி, பாலுணர்வுகளைச் சிதைப்பதற்கல்ல என்ற புரிதல் வேண்டும். ஒழுங்குமுறை என்பது தண்டவாளம் போல, வாழ்க்கைப் பயணம் இனிதாக அமைய அவை அவசியமானதன்றோ!
வணிகமயமாகிப்போன
இன்றைய வாழ்வியல் தளத்தில் யாவும் ‘நுகர்வு’ என்றே நோக்கம் கொண்டதாகிப் போனதாக மனிதன் நினைக்கின்றான். இன்றைய மாணவப் பருவமும் அதற்கு இரையாகி விட்டது. இழிந்த கலாச்சார வெளிச்சத்தை நோக்கிப் படையெடுத்துப் பாழாகும் விட்டில்பூச்சிகளாகிப் போகின்றனர்.
மாணவச்
செல்வங்களே! நம்மை நாமே முழுமையாக உணரும்போதுதான், மற்றவர்களால் சிறிதேனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவோம்! ஒழுக்கநெறி எனும் வேலிகளைத் தாண்டும்போது வெள்ளாடுகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், பின்னொரு நாளில், எங்கே வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும் என்பதை அவை அறிவதில்லை.
மாணவப்
பருவத்தின் ஆற்றலை உணருங்கள்; நாளைய உலகில் அது உங்களை வானளாவ உயர்த்திவிடும். ஆகவே, “மாணவர்களே! உங்கள் மாணவப் பருவத்தை உங்களிடமிருந்து எடுத்து விடாதீர்கள்” எனும்
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் இப்போது இங்கே நம் நினைவுக்கு வருகின்றன!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்