news-details
சிறப்புக்கட்டுரை
சொந்தச் செலவில் சூனியம்!

நமது செயல்களே நமது அழிவுக்குக் காரணமாக இருந்தால், அதனை நமது கிராமங்களில்சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வதுஎன்று கூறுவார்கள். இன்றைய அமெரிக்காவைப் பார்த்தால் அப்படித்தான் கூறத் தோன்றுகிறது.

அமெரிக்கா ஒரு மாபெரும் நாடு. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம். உலகின் மிக சக்தி வாய்ந்த இராணுவம். அதன் அறிவியல் தொழில்நுட்பத்தையும் விஞ்ஞான ஆற்றலையும் தவிர்த்து உலகம் இயங்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு அறிவுசார் சொத்துகளைத் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் நாடு. பண்பட்ட சனநாயக நாடுகளின் பட்டியலில் மூத்த முன்னோடி நாடு. இவ்வாறு அதன் பெருமைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த இப்பெருமைகளையெல்லாம், ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் வேகமாக இழந்து வருகின்றார்கள்.

சனநாயகத் தேர்தல்கள் மூலம் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிரூபித்துக் காட்டுகிறார். ஒரு வீட்டில் பிடித்த தீ ஊரையே அழிப்பதுபோல, அமெரிக்காவைப் பிடித்த இந்தக் காட்டுத் தீ உலகின் அத்தனை நாடுகளின் உயிர்களையும் வாங்குகிறது. ‘டிரம்ப் மனநிலை பிறழ்ந்துவிட்டாரா?’ என்று சந்தேகிக்கும் அளவுக்கு விபரீதமான பல முடிவுகளை வேகமாக எடுத்து வருகிறார். அவரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்தான் என்றாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கின்ற பல நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்தை நிரந்தரமாகப் பாதிக்கும்.

அமெரிக்காவில் நடப்பதைப் பற்றியும், அதன் அதிபர் டிரம்ப்பின் கோமாளித்தனமான நடவடிக்கைகள் பற்றியும், அமெரிக்கரை அடுத்து அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் நாம்தாம். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள்அமெரிக்க டாலருக்குச் சளி பிடித்தால், இந்திய ரூபாய்க்குக் காய்ச்சல் வரும்என்று கூறுவார்கள். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற அணுகுமுறைகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியேற்ற அரசுகள் அனைத்தும் பின்பற்றி வந்ததால், நமது பொருளாதாரக் கட்டுமானங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சார்ந்தே நிற்கின்றன. நமது அந்நியச் செலாவணி முழுவதும் அமெரிக்க டாலர்களிலேயே சேமிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்தியக் குடியேறிகளின் பங்கு மகத்தானது. அமெரிக்க அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற அமெரிக்க நாட்டின் அத்தனை பரிணாமங்களிலும் இந்திய வம்சாவளியினரின் இருப்பும் பங்களிப்பும் வேறு எந்த நாட்டினருக்கும் இல்லை. இந்த உறவுகளில் பிரதமர் மோடி தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்க நினைத்தார். டிரம்ப் கடந்தமுறை அதிபராக இருந்தபோது அவரைத் தனதுதனிப்பட்ட நண்பராகசர்வதேசத் தளத்தில் அடையாளப்படுத்தினார்.

இந்தியா-அமெரிக்கா என்ற இரண்டு சனநாயகங்களின் உறவாக இருந்ததை மோடி - டிரம்ப் ஆகிய இரண்டு தனிப்பட்ட தலைவர்களின் நட்பின் அடிப்படையில் மாற்றியமைத்தார். இந்திய இராஜதந்திர நிபுணர்கள் இதுவரை அறிந்திராத வகையில் ஓர் இந்தியப் பிரதமர், ஓர்  அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளருக்காக அமெரிக்க மண்ணில் வாக்கு கேட்டது அதுவே முதல் முறை. அதற்குக் கைமாறாக டிரம்பும் இந்தியா வந்து பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மோடியைத் தனிப்பட்ட முறையில் புகழ்ந்து தள்ளினார். இந்த அடிப்படையில் இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில், பெரும்பாலும் சனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த இந்திய வம்சாவளி வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகக் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்தனர்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை பா...வின் அயலக அணியைச் சார்ந்தவர்களே முன்னின்று நடத்தினர். வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் கணிசமான தேர்தல் நிதியையும் வழங்கினர். டிரம்ப் அதிபரானால் மோடியைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார் என்றும், இந்தியர்களின் குடியேற்றப் பிரச்சினைகளில் டிரம்ப் தங்களுக்கு மிகவும் சார்பாக இருப்பார் என்ற பிரச்சாரத்தையும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலோர் நம்பினர். பிரதமர் மோடியின் நண்பர்களான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களான அதானியும், அம்பானியும் டிரம்ப்போடு மிகவும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். அவரது பதவியேற்பு விழாவிற்கு டிரம்ப்பின் தனிப்பட்ட விருந்தினர்களாக அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டு, விழா அரங்கின் முன்வரிசையில் இருவரும் அமர்ந்திருந்ததை நாடே பார்த்தது.

டிரம்ப்பின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனது கார்ப்பரேட் குழுமம் அமெரிக்காவில் இருபதாயிரம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் என்று கவுதம் அதானி பகிரங்கமாக அறிவித்தார். இப்படிப் பல முனைகளில் அமெரிக்காவோடு பல நெருக்கங்களை உருவாக்கிக் கொண்டதால் நமது வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்த்துக்கூட நம்மால் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்க முடியவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியா என்றுமே நியாயத்தின் பக்கம்தான் நிற்கும் என்று இந்தியாவின் மேல் இருந்த நம்பகத் தன்மையையும் இழந்து வருகிறோம். இவ்வளவும் நடந்து முடிந்தபிறகு நமது சிரசில் ஏறி வலுவாக அமர்ந்து கொண்டு நமது செவியைக் கடிக்க ஆரம்பித்துள்ளார் டிரம்ப். ‘வலிக்கிறதுஎன்று கூறி அழக் கூட வெட்கப்பட்டு, முக்காடு போட்டு முனங்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

கத்தாரில் நடந்த அரசுமுறை விருந்தின்போதுஆப்பிள்நிறுவனத்தின் அதிபரைப் பார்த்துப் பகிரங் கமாகஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும்என்றும், “இந்தியா வில் உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்களை அமெரிக்காவில் விற்க அனுமதிக்க முடியாதுஎன்றும், “அப்படி விற்றால் 25% அதிகமாகத் தண்டவரி கட்ட வேண்டும்என்றும் எச்சரித்தார். இதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பா... நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான கங்கனா இரனாவத், டிரம்ப் இப்படி அறிவித்ததற்கான காரணம் அவர் சர்வதேச அரங்கில் தன்னைவிட மிகவும் பிரபலமாக இருக்கும் மோடியைப் பார்த்துப் பொறாமைப்பட்டதால்தான் என்றுXதளத்தில் பதிவு செய்தார். டிரம்ப்பின் கோபத்தையும் வெறுப்பையும் எதிர்கொள்ளப் பயந்துபோன பா...வின் தலைவர் நட்டா உடனடியாக அந்தப் பதிவை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், பா...வில் யாரும் டிரம்புக்கு எதிராகப் பேசவோ, பதிவுகள் போடவோ கூடாது என்று தடையுத்தரவு போட்டார்.

திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல, டிரம்புக்கு வாக்களித்த அமெரிக்க இந்திய வாக்காளர்கள் வாய் திறந்துவலிக்கிறதுஎன்று கூறக்கூட வகையற்று நிற்கின்றனர். ஊரை விட்டு, உறவுகளை மறந்து, நாடு விட்டு, நாடு வந்து நான்கு காசு சம்பாதிப்பதற்காக அமெரிக்காவில் கடுமையாக உழைக்கும் இந்தியர்களின் அரை வேட்டியைக்கூட அவிழ்க்க வேண்டும் என்பதில் டிரம்ப் குறியாக இருக்கிறார்.

வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாளாய் சேர்த்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்ப 3.5% புதிய வரி கட்ட வேண்டும் என்று தற்போது ஒரு சட்டம் போட்டுள்ளார். சம்பாதித்தப் பணத்திற்கு ஏற்கெனவே வருமான வரிகட்டிய பின்னர்இது என்ன தண்டம்?’ என்று கேட்கக்கூட இந்திய அரசுக்குத் துணிவில்லை. அமெரிக்காவில் சுமார் 40 இலட்சம் இந்தியர்கள் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி தகவலின்படி ஆண்டொன்றுக்கு 32 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். வரும் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 1.5 பில்லியன் டாலர்களை இந்தியர்கள் வருமான வரி கட்டிய பின்னர் கூடுதலாக அமெரிக்க அரசுக்குக் கட்ட வேண்டும். அங்கே வாழ்கின்ற நம்மவர்கள் தங்களது சேமிப்புகளை இந்தியாவில் எப்படி முதலீடு செய்தாலும், அந்த முதலீட்டிற்கு 3.5% வரி கட்டித் தீர வேண்டும். இதனால் கறுப்புச் சந்தைப் பணப் புழக்கம் அதிகமாகும்.

டிரம்ப்பின் சிறுபிள்ளைத்தனமான தெளிவற்ற நடவடிக்கைகளால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அமெரிக்காவில் சுமார் நான்கு இலட்சம் இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்இவர்களுடைய கல்வியும் எதிர்காலமும் ஒரு பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் பயிலும் பெரும் பல்கலைக் கழகங்களுக்கு அரசு மானியம் வழங்க செயல்படுத்தவே முடியாத பல நிபந்தனைகளை டிரம்ப் அரசு விதித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, அவைகளில் இஸ்ரேல் எதிர்ப்பு, பாலஸ்தீனிய ஆதரவு, பொதுவுடைமை சித்தாந்த ஆதரவு போன்ற பதிவுகள் இருந்தால் அவர்களை உடனடியாகப் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கிட வேண்டும் என்பதே முதல் நிபந்தனை. பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தவிர வேறு எவ்வித போராட்டங்களிலோ, பிரச்சாரங்களிலோ ஈடுபடக்கூடாது. அதனை அனுமதித்தால் பல்கலைக்கழகத்துக்குரிய அரசு மானியம் உள்பட அனைத்துச் சலுகைகளும் உடனடியாக நிறுத்தப்படும். இந்த நிபந்தனையை ஒத்துக்கொண்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அரசு மானியமும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதியும் உண்டு என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் இருக்கின்றது. கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு 400 மில்லியன் டாலர் மானியத்தை நிறுத்தியவுடன் பதறிப்போன பல்கலைக்கழகம் டிரம்பிடம் மண்டியிட்டுச் சரணாகதியடைந்து தங்களது 400 மில்லியன் டாலர் மானியத்தைப் பெற்றுக் கொண்டது. அதைப்போல உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தையும் டிரம்ப் நிர்வாகம் மிரட்டியபோது பணிய மறுத்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 2.2 பில்லியன் டாலர் மானியத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் அனுமதியையும் டிரம்ப் அரசு இரத்து செய்துவிட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் சுமார் 30%  வெளிநாட்டு மாணவர்கள்.

தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 147 நாடுகளைச் சார்ந்த சுமார் 7000 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் ஏறத்தாழ 1000 மாணவர்கள் இந்தியர்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 57,000 டாலர்களும், முதுகலை மாணவர்கள் 77,000 டாலர்களும் கல்விக் கட்டணமாகச் செலுத்துகின்றனர். விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு 20,000 டாலர்கள் கொடுக்கின்றனர். டிரம்பின் இந்தப் புதிய உத்தரவால் இந்த மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும். அல்லது உடனடியாக நாடு திரும்ப வேண்டும். இதனால், பல்கலைக்கழகமே நிலை குலைந்து போகும்ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தற்போது டிரம்ப் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு ஃபெடரல் கோர்ட்டில் இடைக்கால தடையுத்தரவினைப் பெற்றுள்ளது. ஆனாலும், பல வெளிநாட்டு மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றிப் பதற்றமும் அச்சமும் அடைந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சீனா, கனடா, இந்தியா, தென்கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள். வேறு பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் விசா இரத்தாகி நாடு கடத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். இப்படி நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவர்களில் டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசியும் ஒருவர்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களாக 2000 பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் முதல் இருபது பல்கலைக்கழகங்களில் பதினாறு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள். அந்த பதினாறு பல்கலைக்கழகங்களில் முதன்மையானது ஹார்வர்ட் பல்கலைக்கழகம். உலக நாடுகளின் பல மாபெரும் தலைவர்கள், குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், நீதியரசர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். அதன் நிர்வாகக் குழுவில் பல மேனாள் குடியரசுத் தலைவர்கள், மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பெரும் கார்ப்பரேட் அதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். அவ்வளவு சிறப்புமிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கே இவ்வளவு நெருக்கடி என்றால், மற்ற அமெரிக்கக் கல்வி நிலையங்களின் எதிர்காலம் என்னவாகும்?

அமெரிக்க நாட்டின் புகழுக்கும் செல்வாக்கிற்கும் அதன் பொருளாதார பலமும் இராணுவ பலமும் மட்டும் காரணமல்ல! அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஒரு மிகப்பெரிய காரணம். அமெரிக்க முதலாளித்துவ சித்தாந்தங்களில் உடன்படாதவர்கள் கூட அந்தப் பல்கலைக்கழகங்களின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும், ஆசிரியர்களின் திறமைகளையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சுதந்திரத்தையும் பாராட்டத் தயங்கமாட்டார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அப்பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மகத்தானது. இந்திய மாணவர்கள் மட்டும் ஆண்டொன்றுக்கு 9 பில்லியன் டாலரை வழங்குகின்றனர். இப்படிப்பட்ட புகழும் பாரம்பரியமும் உள்ள பல்கலைக்கழகங்களைக் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகப் பிய்த்து எறிகிறார் டிரம்ப்.

அது ஏன்?’ என்ற கேள்வி முக்கியமானது. பல்கலைக்கழகங்கள் இடதுசாரிச் சிந்தனைகளுக்கும் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளுக்குமான பாசறைகளாக விளங்குகின்றன என்பது டிரம்ப் மற்றும் அவரது தீவிரக் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடு. 2021-ஆம் ஆண்டே தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ், ‘பல்கலைக்கழகங்கள் நமது எதிரிகள்என்று குறிப்பிட்டார். கலாச்சார வேறுபாடுகளை மதித்து ஏற்றுக்கொள்ளுதல், எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற விழுமியங்களை மாணவர்கள் மூலமாகச் சமூகத்தில் விதைக்கும் பணியில் பெரும் பங்கு ஆற்றுபவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்பது அவர்களுடைய கருத்து. அவர்களது பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தின் கைகளில் முழுக்கக் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். ‘பெரும்பான்மைவாத அடையாள அரசியலுக்குஆதரவானவர்கள் கைகளில் பல்கலைக்கழகங்கள் இருக்கவேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இன்று நம் நாட்டிலும் இதுதானே நடக்கிறது!

நேற்றைய தினம் டிரம்ப் அரசு மற்றுமொரு கொள்கை முடிவினை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. விசா வேண்டி மனு செய்திருக்கும் மாணவர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளை முழுமையாகத் தணிக்கை செய்த பின்னரே விசா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்வியின்மீது மோகம் கொண்டு அதற்காக என்ன விலையென்றாலும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும். நல்ல திறமையான மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்புக்கான தரமான பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் டிரம்ப்பின் பதவிக் காலத்திற்குப் பின்னர் அமெரிக்கா தன் பல பெருமைகளை இழப்பதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளின் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இழப்பது உறுதி!

பாவம்... அமெரிக்க மக்கள்! அவர்களைவிட பாவம் அமெரிக்க இந்தியக் குடியேறிகள்! சொந்தச் செலவில் தங்களுக்கே சூனியம் வைத்துக் கொண்டார்கள். வேறு என்ன சொல்வது?