உயர் நீதிமன்றங்களின் அதிகார எல்லை வரையறைக்கு உட்பட்டது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நெல்லையைச் சேர்ந்தவர் நீதிகோரி வழக்குப் பதிய வேண்டும்; ஆனால், அவர் சென்னை உயர் நீதிமன்றம் செல்கின்றார். அங்கு அவரது வழக்கு அவருக்குச் சாதகத் தீர்ப்பு வழங்கக்கூடிய அமர்விற்கு ‘அனுதாபம்’ காட்டுகின்ற நீதிபதிக்கு எப்படியோ செல்கிறது. நீதிபதி அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை. பதில் மனுத்தாக்கல் செய்ய, அரசுத் தரப்பிற்குக் கால அவகாசம் தரவில்லை. நீதிபதி தீர்ப்பை மைக்கை அணைத்து விட்டு வாசிக்கிறார். மூத்த வழக்கறிஞர் இதைச் சுட்டிக்காட்ட “தீர்ப்பை இணையத்தில் பதிவிடுகிறோம், பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமை காட்டுகிறார்.
யார்
இந்த நீதிபதி? மூத்த வழக்கறிஞர்களைத் திறந்த நீதிமன்றத்தில் கடுமையாக விமர்சனம் என்ற பெயரில் மிரட்டியதற்காக ‘பார் கவுன்சிலால்’ குற்றம்
சாட்டப்பட்டவர் என்பதே கடந்த கால வரலாறு. மைக்கேல்பட்டி வழக்கில் அவ்வூர் பெயர் பற்றித் தன் தீர்ப்பில் ஆராய்ச்சியை வழங்கியவர். மாவட்டக் காவல்துறை பெண் அதிகாரி ‘அங்கு மதக் கலவரம் நடக்கத் திட்டம்
தீட்டப்படுகிறது’ என
விசாரணை அறிக்கையில் சொல்ல, அவரைக் கடுமையாகக் கண்டித்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மூக்குடைபட்டவர். வயலூர் அர்ச்சகர் நியமனத் தடை வழக்கில், ‘நான் ஒரு ஸ்மார்த்த பிராமணன், நானே ஆலயக் கருவறைக்குள் நுழைய முடியாது’
என வருணம் போதித்தவர்; தான் ஓர் ஆர்.எஸ். எஸ். எனப் பிரகடனப்படுத்தியவர். இவரிடம் எப்படி நாம் நீதியைத் தேடுவது?
தீர்ப்பைப்
பற்றி விமர்சிக்கலாம். உள்நோக்கம் கற்பித்தால், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே அனைவரின் பெரும் பயம். இது நீதிபதிகளுக்குக் கேடயமாகவும், பெரும் பாதுகாப்பாகவும் இருப்பது கவலை தருவதே.
குடியாட்சி
அமைப்பில் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள், நீதிமன்றங்களில் உள்ள நீதி அரசர்கள். ஆனால், பா.ச.க.
ஆட்சியில் நீதிமன்றங்களில் நீதி இல்லை, நீதிக்குத் தண்டனை கிடைக்கிறது. பா.ச.க.
ஆட்சிக்கு வந்தபின் நீதித்துறையைக் காவிமயமாக்கி விட்டது. பூஜை அறையில் இராமர் கோவில் தீர்ப்பு குறித்து பிரார்த்தனை செய்து, தன் மத நம்பிக்கையின் அடிப்படையில்
தீர்ப்பு எழுதுகிறார் சந்திரசூட். அவரோடு அமர்வில் இருந்தவர்களும் ‘ஆமாம் சாமி’ போடுகிறார்கள். சந்திர சூட் பதவி ஓய்வுக்குப் பின்பு டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்கிறார் . அவரோடு இராமர் கோவில் வழக்கில் நீதி வழங்கிய அனைவருமே அரசுப்
பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்.
நீதிபதி
அசோக்குமார் கோயல் பதவி ஓய்வு
பெற்ற 2018, ஜூலை 06 அன்றே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராகப் பதவியேற்கிறார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தேசியச் சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தின் தலைவராக அரசுப் பதவியைப் பிடிக்கிறார். முதலில் அரசிற்கு எதிராகத் துணிந்து தீர்ப்புகளை வழங்கியபின், பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட இரஞ்சன் கோகாய் என்ற இராமர் கோவில் வழக்கு நீதிபதி, மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் சேவைக்குப் பா.ச.க.வால் கொண்டு வரப்படுகிறார். இன்று அவர் மாநிலங்களவைக்கே வராமல் மட்டம் போடுகிறார் என்பதே அண்மைச் செய்தி.
இராமர்
கோவில் வழக்கு அமர்வில் சிறுபான்மைச் சமூக மக்களுக்குக் குரல் கொடுக்க வாய்ப்பிருந்தும், அதை அன்று மறுத்து
நழுவவிட்ட நீதிபதி அப்துல் நசீருக்குப் பா.ச.க.வால் வழங்கப்பட்ட சன்மானம் ஆந்திரப்பிரதேச ஆளுநர் பதவி.
பா.ச.க. தன்
ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகளை வாரிவழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்ற முப்பதிற்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் பதவியில் தொடர்ந்து பதவி சுகம் பெறுகிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
நீதிபதி
அசோக்குமார் கோயல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும், நீதிபதி அருண்மிஸ்ரா மனித உரிமை ஆணையத்திலும், ஹேமன் குப்தா டெல்லியிலும் பதவியைப் பிடித்தனர். நீதிபதி அஜய் மாணிக்ரான் கான்வில்கர் லோக்பால் அமைப்புக்குத் தலைவரானார். நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் வெளிப்படையாகக் கூறினார்: “நான் ஆர்.எஸ். எஸ். அமைப்பிலிருந்து வந்தவன். மீண்டும் ஆர். எஸ்.எஸ்.சுக்கே செல்கிறேன்.” அவரது நீதித்துறைப் பணியை, அவரது தீர்ப்புகளை எவ்வாறு
நோக்குவது?
விந்தையிலும்
விந்தை ஒன்று உண்டு. குஜராத்தைச் சேர்ந்த சாதாரண பெண்
வழக்கறிஞர் பேலா மதுர்யா திரிவேதி குஜராத் சட்டத்துறைச் செயலாளராகிறார். பிறகு உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி அளவு உயர்கிறார். அவரது பணிக்காலத்தில் அரசியல் முக்கியத்துவம்
வாய்ந்த எட்டு வழக்குகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. அவரைவிட 15 மூத்த நீதிபதிகளைப் புறக்கணித்து, இந்தப் பெண் நீதிபதிக்கு முக்கிய வழக்குகள் பகிரப்படுகிறது. அங்கு வழக்கு ஒதுக்குவதற்கான நடைமுறைக் கையேட்டுச் செயல்முறைகளும் நடவடிக்கைகளும், அலுவலக அடிப்படை விதிகளும்
மீறப்பட்டன. இவருக்கு வழங்கப்பட்ட அனைத்தும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளால் தொடுக்கப்பட்டவை அல்லது பா.ச.க.வுக்கு வேண்டிய முக்கியப்
புள்ளிகளுக்கான வழக்குகள். மாநிலக் கட்சிகளால் சனநாயகம் காக்கப்பட போடப்பட்ட வழக்குகள். அனைத்திலும் பா.ச.க.
விரும்பிய தீர்ப்பை அப்பெண் நீதிபதி வழங்கினார். அதைவிட கொடுமை, மூத்த வழக்கறிஞர்களுடன்
அதிகமாகச் சண்டையிட்டார். ‘பா.ச.க.வுக்கு ஆதரவு’ என்ற ஒற்றைக் கொள்கையில் உறுதியாக இருந்தார். இது குறித்து ‘ஆர்ட்டிகள் 14’ மற்றும் ‘கேரவன்’ போன்ற பத்திரிகைகள் கட்டுரைகளை வெளியிட்டன. அவரது பிரிவு உபசார விழாவைப் பார் கவுன்சில் புறக்கணிக்கிறது என்ற அறிவிப்புத் தரப்பட்டது. நீண்ட நெடிய சமாதானத்திற்குப் பிறகு விழாவில் கலந்துகொண்ட பார் கவுன்சில் தலைவர் கபில்சிபல் வஞ்சப் புகழ்ச்சியாகப் பெண் நீதிபதியின் முரண்பாடுகளைப் பட்டியலிட்டது அண்மையில் நடந்த நிகழ்வு.
நீதித்துறையின்
கண்ணியம் மற்றும் வெளிப்படைத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. நீதித்துறையானது குடியாட்சித் தத்துவத்தில் பெரும் தூண். அது அடிப்படை அறத்திற்கு உட்பட்டதாகச் செயலாற்ற வேண்டும். 2025, மே 13-இல் பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா, நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் முனைப்புக் காட்டி, வெற்றியும் கண்டார் என்பது மகிழ்ச்சிக்குரிய பதிவு. அவர் பணி ஓய்வு பெற்றபின், ‘எந்த அரசு பதவியையும் ஏற்கமாட்டேன்’ என
அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சிறுபான்மைச் சமூகம் சார்ந்த பௌத்தரான பி.ஆர். கவாய்
அவர்களும், ‘நானும் ஓய்வுக்குப்பின் அரசுப் பதவி எதையும்
வகிக்கமாட்டேன்’ எனக்
கூறி ‘ஜெய் பீம்’ எனச் சத்திய முழக்கமிட்டார்.
14-வது
சட்டத்துறை ஆணையப் பரிந்துரைப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளுக்குச் செல்வது தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள் அவர்கள் பணிக்காலத்தில் எழுதிய தீர்ப்புகளை ஐயத்திற்கு உள்ளாக்குவர்.
நீதித்துறையின்
மாண்பைக் காக்க நீதிபதிகள் பணி ஓய்விற்குப் பிறகு எந்த அரசியல் பதவியிலும் இருக்கக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். அது சனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுவூட்டும்.