news-details
ஆன்மிகம்
திரு அவையும் ஆலயங்களும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும், அதற்கு முன்னும் திருத்தலங்களைப் பற்றிய திரு அவை ஆசிரியப் படிப்பினைகள் இல்லை. இக்குறையைப் போக்கியவர் திருத்தந்தை 6-ஆம் பவுல்.  திருத்தலங்களின் அதிபர்களுக்கு வழங்கிய தனது வருடாந்திரச் சொற்பொழிவுகளில் திருத்தலங்கள் ‘ஆன்மிக மருத்துவங்கள் (‘Spiritual clinics, 1965) ‘அ (‘Centres of Spiritual Refreshment,1970) என்றும் அவர் கூறியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட திரு அவைச் சட்டத் தொகுப்பில் திருத்தலங்களைப் பற்றி முதன் முதலாக ஐந்து சட்டங்கள் (திச 1230-1234) இடம் பெற்றுள்ளன. அதன்பிறகு 1999, மே 8 தேதியிட்ட ஆவணத்தில் நாடோடிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கான திருத்தந்தை அருள்பணிப் பேரவை திருத்தலங்களைப் பற்றிய விரிவான படிப்பினைகளை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் 2001, டிசம்பர் 17-இல் வெளியிட்ட ‘பொதுமக்கள் பக்தி மற்றும் திருவழிபாடு (Popular piety and the liturgy) என்ற வழிகாட்டி ஆவண இறுதிப் பகுதியில் (எண்: 261-287) திருத்தலங்களின் இயல்பு பற்றிச் சிறப்பாக விளக்கியுள்ளது. மேலும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) 2024, மார்ச் 19 தேதியிட்ட ‘தேசியத் திருத்தலங்கள் நிலையைப் பெறுவதற்கான விதிமுறைகள் (Norms for the designation of national shrines) என்ற ஏட்டில் திருத்தலங்களுக்கான முக்கிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.

இந்நிலையில் பங்கு ஆலயம் அல்லது அதன் கிளைக் கோவில்களுள் ஒன்றை ‘திருத்தலம் என்று தன்னிச்சையாக அறிவித்து, அதன் பெயர் கொண்ட அருள் ஆதரவாளரைக் (patron) குறித்து நவநாள், ஆராதனை, திருப்பலி, அன்னதானம் போன்றவை நடப்பதாக நவீன ஊடகங்களில் விளம்பரம் செய்து ‘பக்த கோடிகளை அழைக்கும் போக்கு சில அருள்பணியாளர்களிடையே அண்மைக்காலமாகப் பரவலாகி வருகிறது.

இவ்வாறு தன்னிச்சையாக ஓர் ஆலயத்தை ‘திருத்தலம் என்று அறிவிக்கலாமா? திருத்தலங்களுக்கும் மற்ற ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் யாவை? போன்ற கேள்விகளை இக் கட்டுரை விளக்குகிறது.

ஆலயங்களின் வகைகள்

சர்ச் (church) என்ற ஆங்கிலச் சொல் கிறித்தவ இறைமக்களின் சமூகமான திரு அவையையும், அது குழுமமாகக் கூடி வழிபடும் ஆலயத்தையும் குறிக்கிறது. ஆலயம் ‘கோயில் அல்லது ‘கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திரு அவையில் ஆலயங்கள் பல வகைப்படும்.

1) பங்கு ஆலயங்கள் (Parish churches)

ஒரு மறைமாவட்டத்தில் நிலையான முறையில் நிறுவப்படும் நம்பிக்கையாளர்களின் ஒரு குறிப்பிட்ட குழுமம் இறைவனை வழிபடும் இடம் பங்கு ஆலயம் ஆகும். இங்கு அருளடையாளங்கள் குறிப்பாக, திருப்பலிக் கொண்டாட்டங்கள் மற்றும் அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இதே நோக்கத்திற்காகப் பங்கில் கிளை (sub stations churches) அல்லது வழிபாட்டுக்கூடங்கள் (oratories) அமைக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆலயத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்படுகிறது. மூவொரு இறைவன், கிறிஸ்து ஆண்டவர் (பிறப்பு, குழந்தைப் பருவம், உருமாற்றம், உயிர்ப்பு, மீட்பு உள்ளிட்ட மறையுண்மைகள்), அன்னை மரியா, திருத்தூதர்கள், புனிதர்கள், வானதூதர்களின் பெயர் ஒன்று அதில் இடம்பெறும்; அப்பெயர் அவ்வாலயத்தின் அருள் ஆதரவாளராகக் கருதப்படும்; அதன் நினைவாக விழாக்களும் எடுக்கப்படும்.

2) சிற்றாலயங்கள் (Chapels)

தனியார் வசதிக்காகத் தலத்திரு அவை மேலதிகாரியின் அனுமதியுடன் இறைவழிபாட்டிற்காக அமைக்கப்படுபவை சிற்றாலயங்கள் ஆகும். அங்குத் திருப்பலிகள் மற்றும் புனிதக் கொண்டாட்டங்களை நிறைவேற்றலாம். ஆயர் இல்லம், அருள்பணியாளர் பயிற்சியகங்கள். அர்ப்பண வாழ்வுக் குழுமங்களின் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் சிற்றாலயங்கள் உள்ளன.

3) பெருங்கோவில் (Basilica)

முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொதுக் கட்டடங்களைக் குறிக்கும் ‘பசிலிக்கா என்ற கிரேக்கச் சொல் காலப்போக்கில் முக்கியக் கிறித்தவப் பெருங்கோவில்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் பெருங்கோவிலாக உயர்த்தப்பட முடியும். அதில் ‘மேஜர் பசிலிக்கா மற்றும் ‘மைனர் பசிலிக்கா என்று இருவகை உள்ளது. மேஜர் பசிலிக்கா என்பது திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. உரோமை நகரில் உள்ள திருத்தூதர் பேதுரு (வத்திக்கான்), திருத்தூதர் யோவான் (இலாத்தரன்), திருத்தூதர் பவுல் (மதில்களுக்கு வெளியே), புனித மரியா மஜோரே ஆகிய நான்கு பெருங்கோவில்கள் மட்டுமே ‘மேஜர் பசிலிக்கா என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அறியப்படுகின்றன. ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை ‘திரு அவையின் இல்லம் (Domus Ecclesiae) என்ற 1989, நவம்பர் 9 தேதியிட்ட ஆவணத்தில் இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளின்படி சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள ஓரியூர் திருத்தலம் அண்மையில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4) பேராலயம் (Cathedral)

ஒரு மறைமாவட்ட ஆயரின் இருக்கை (Cathedra) உள்ள ஆலயம் அந்த மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் அல்லது பேராலயம் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆயர், அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு அருளடையாளங்கள், அவர்களது அடக்கச் சடங்குகள் மற்றும் மறைமாவட்டம் தழுவிய சிறப்புத் திருச்சடங்குகள் நடைபெறுகின்றன.

5) திருத்தலங்கள் (Shrines)

திருத்தலம் என்பது நம்பிக்கையாளர்கள் திரளான எண்ணிக்கையில் திருப்பயணம் செல்கின்ற ஓர் ஆலயம் அல்லது மற்றொரு புனித இடம் ஆகும். அப்புனிதத்திற்குக் குவிமையமாக இருப்பவை அங்குள்ள புனிதரின் திருவுருவம், அருளிக்கம் (relic), உருவ ஓவியம் (icon), காட்சி அனுபவங்கள், புதுமைகள் போன்றவை ஆகும். அவற்றின் மூலம் வாழும் கடவுளின் நினைவு, உடனிருப்பு மற்றும் வரலாற்றில் அவரது இடையீட்டின் குறியீடாக அத்திருத்தலம் பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு பங்கு ஆலயத்திற்கு இருப்பதுபோல் குறிப்பிட்ட இறைமக்களோ அவர்களுக்குரிய அருள்பணிகளை நிறைவேற்றுதலோ திருத்தலத்திற்கு இல்லை. மாறாக, ஆன்ம, உடல், மன ரீதியான புத்துணர்வும் புதுப்பித்தலும் நலமும் நாடும் அனைவருக்கும் உரிய இலக்கு இடமாகத் திருத்தலம் கருதப்படுகிறது.