1. பழைய ஏற்பாடு இஸ்ரயேலின் போராட்டத்திலும் வெற்றியிலும் மற்றும் அதன் மீட்பிலும் கடவுளின் ஆவியாரால் தூண்டப்பட்டுச் செயலாற்றிய சில பெண்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மக்களுடைய வரலாற்றில் அவர்களின் உடனிருப்பானது விளிம்புநிலையிலோ அல்லது செயலற்றதொன்றாகவோ இல்லை; மாறாக, மீட்பு வரலாற்றின் உண்மையான கதாநாயகிகளாகவே தோன்றுகின்றார்கள். இதோ சில குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்:
செங்கடலைக்
கடந்த பிறகு அந்த இறுதி நிகழ்வானது ஒரு விழாக் கொண்டாட்டமாக மாறுவதற்கான முயற்சியை ஒரு பெண்தான் முன்னெடுத்தாள் என்பதைப் புனித நூலானது சுட்டிக்காட்டுகின்றது: “இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம், கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள் பின் சென்றனர். அப்போது மிரியாம், ‘ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்’ என்று
பல்லவியாகப் பாடினாள்”
(விப 15:20-21). ஒரு விழாக் கொண்டாட்ட சூழலில் பெண்ணை முன்னிருத்திக் கூறுவதென்பது பெண்ணினுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை மட்டும் சுட்டிக்காட்டாமல், கடவுளைப் புகழ்வதிலும் அவருக்கு நன்றி செலுத்துவதிலும் அவளுக்கிருந்த அவளின் தனித்திறமையையும் சுட்டிக்காட்டுகின்றது.
பெண்களின் நேர்மறையான
பங்களிப்பு
2. நீதித்தலைவர்களின்
புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இறைவாக்கினரான தெபோராவின் செயலானது இன்னும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. படைத் தளபதியிடமும், அவரின் வீரர்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைப்பதற்கான உத்தரவைத் தந்த பிறகு அவர்களுடனேயே இருந்து யாவேல் என்றழைக்கப்படும் மற்றொரு பெண்ணானவள் அவர்களின் எதிரிகளை வீழ்த்துவாள் என்று முன்னறிவித்து இஸ்ரயேலர்களுடைய படையின் வெற்றியை உறுதி செய்கின்றாள்.
மிகப்பெரும்
அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத் தெபோராவும் யாவேலினுடைய செயலைப் புகழ்ந்து, மிக நீளமானதொரு பாடலைப் பாடுகின்றாள்: “கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறுபெற்றவள்!
கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறுபெற்றவள்!” (நீதி 5:24). புதிய
ஏற்பாட்டில் இந்தப் புகழ்ச்சியானது மரியா எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபொழுது எலிசபெத் மரியாவை வாழ்த்திக்கூறும் அந்தப் பாடலில் எதிரொலிக்கிறது: “பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்...” (லூக் 1:42).
தெபோரா
மற்றும் யாவேல் போன்ற பெண்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதன் வழியாக மக்களின் மீட்பில் பெண்களுடைய குறிப்பிடத்தக்க பங்கானது யோசியா அரசரின் காலத்தில் வாழ்ந்த குல்தா என்ற மற்றோர் இறைவாக்கினரின் வரலாற்றிலும் எடுத்துக்காட்டப்படுகின்றது. இல்க்கியா
என்ற குருவினால் கேள்வி கேட்கப்பட்டு, கடவுளுடைய தண்டனைக்குப் பயந்து அரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்து அவள் இறைவாக்குரைத்தாள். இவ்வாறு குல்தா இரக்கம் மற்றும் அமைதியின் தூதுவராக மாறுகின்றார் (2அர 22:14-20).
3. தேர்ந்தெடுக்கப்பட்ட
மக்களின் வரலாற்றிற்கான நேர்மறையான பங்களிப்பை உயர்த்திப் பேசுகின்ற யூதித்து மற்றும் எஸ்தர் புத்தகமானது மிகக் கொடூரமானதொரு கலாச்சாரப் பின்னணியில் இஸ்ரயேல் மக்களின் வெற்றி மற்றும் மீட்பைப் பெற்றுத்தந்த இரண்டு பெண்களைப் பற்றிப் பேசுகின்றன.
குறிப்பாக,
யூதித்து புத்தகமானது இஸ்ரயேலை வெல்வதற்காக நெபுகத்னேசரால் அனுப்பப்பட்ட மிகப் பயங்கரமானதொரு படையைப் பற்றிப் பேசுகின்றது. பெத்தூலியா நகரைக் கைப்பற்றுவதற்காக எதிரிகள் தயாராக இருந்த நிலையில், எந்தவோர் எதிர்ப்பும் பயனளிக்காது என்றறிந்து, ஒலோபெரினால் வழிநடத்தப்பட்ட அதனுடைய மக்கள் விரக்தியில் அவர்களின் அரசரைச் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக யாருடைய உதவியும் இல்லாத நிலையில், அந்த நகரத்துப் பெரியவர்கள் நகரத்தை எதிரிகளிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்த நிலையில், ஆண்டவரிடமிருந்து வரவிருக்கின்ற மீட்பிற்கான அவளின்
முழுமையான நம்பிக்கையை அறிவித்து அவர்களின் நம்பிக்கையின்மைக்காக யூதித்தால் அவர்கள் கண்டனம் செய்யப்படுகிறார்கள்.
அவளின்
தாழ்ச்சி மிகுந்த செபம் மற்றும் என்றும் கற்புடன் நிலைத்திருப்பதற்கான அவளுடைய எண்ணத்தினால் ஆண்டவரை நோக்கி எழுப்பப்பட்ட மிக நீண்டதொரு விண்ணப்பத் திற்குப் பிறகு ஆண்டவர் மீதான நம்பிக்கையின் அடையாளமாக இருந்த அவள் அகங்காரம், விக்கிரக வணக்கம் மற்றும் ஒழுக்கமற்ற எதிரித்தலைவனாகிய ஒலோபெரினிடம் தனித்துவிடப்பட்ட நிலையில் அவனைத் தாக்குவதற்குமுன் யூதித்து, யாவே கடவுளை நோக்கி இவ்வாறு கூறி செபிக்கின்றாள்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” (யூதி
13:7). பிறகு ஒலோபெரினின் வாளை எடுத்து அவனின் தலையைத் துண்டிக்கின்றாள்.
தாவீது
மற்றும் கோலியாத்திற்கிடையேயான நிகழ்வில் நடந்ததைப் போன்றே இங்கும் ஆண்டவர் பலவீனமான ஒருவர் பலமிக்கவரை வெற்றிகொள்ளச் செய்கின்றார். எவ்வாறாயினும் இந்த நிகழ்விலும் வெற்றியைப் பெற்றுத்தந்தவள் ஒரு பெண்தான். மக்களை ஆள்பவர்களின் கோழைத் தனம் மற்றும் நம்பிக்கையின்மையினால் ஆட்கொள்ளப்படாமல் யூதித்து ஒலோபெரினிடம் சென்று அவனைக் கொன்று தலைமைக் குரு மற்றும் எருசலேம் பெரியவர்களின் நன்றி மற்றும் பாராட்டைப் பெறுகின்றாள்.
எதிரிகளைக்
கொன்ற யூதித்தை நோக்கி இந்த நகரத்துப் பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்தார்கள்: “நீரே எருசலேமின் மேன்மை; நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி; நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே! இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்; இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவை குறித்து கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக!” (யூதி 15:9-10).
4. எஸ்தர்
புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்வுகள் யூதர்களுக்கு மற்றொரு மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நிகழ்ந்தவைகளாகும். பாரசீக அரசில் ஆமான் அரசனின் மேற்பார்வையாளர் யூதர்களை அழித்தொழிக்க ஆணையிடுகின்றான். இந்த ஆபத்தைத் தவிர்க்க சூசான் நகரத்துக் கோட்டையில் வாழ்ந்த மொர்தக்காய் என்பவர், அரசி என்கின்ற பட்டத்தைப் பெற்று அரசருடைய அரண்மனையில் வாழ்ந்து வந்த அவரின் மருமகளான எஸ்தரிடம் செல்கின்றார். நடைமுறையில் இருந்த சட்டத்திற்கு எதிராக மரண தண்டனைக்கான ஆபத்து இருந்தபொழுதும் அழைப்பாணையின்றி அரசனிடம் சென்று அழித்தொழிக்கும் ஆணையை இரத்துச் செய்வதற்கான உத்தரவைப் பெறுகின்றாள். ஆமான் தூக்கிலிடப்பட்டு மொர்தக்காய் ஆட்சிக்கு வந்தபின் யூதர்கள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் தங்கள் எதிரிகளை விடவும் மேன்மையானதொரு நிலையை அடைகின்றார்கள்.
யூதித்தும்
எஸ்தரும் தங்களுடைய மக்களின் மீட்பிற்கான வெற்றியைப் பெறுவதற்காக அவர்களின் வாழ்வை இழக்கவும் துணிகின்றார்கள். இருப்பினும், இந்த இரண்டு தலையீடுகளும்
ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவைகள்; எஸ்தர் தங்களின் எதிரியைக் கொல்லாமலே ‘இடையீட்டாளர்’ என்கின்ற
பங்கைச் செய்து அழிவு பற்றிய பயம் காட்டி அச்சுறுத்தப்பட்ட அந்த மக்களுக்காகப் பரிந்துபேசுகின்றாள்.
மனித மீட்பில்
மரியாவின்
பங்கைத்
தூய
ஆவியார்
வடிவமைக்கின்றார்
5. இத்தகைய
பரிந்துபேசுகின்ற பங்கானது பின்னாளில் முதல் சாமுவேல் புத்தகத்தில் வரும் மற்றொரு பெண்ணான நாபாலின் மனைவி அபிகாயிலுக்கும் கூறப்படுகின்றது. இங்கும் முன்பு போன்று அவளுடைய பரிந்துரை வழியாகவே மீட்பானது அவர்களுக்குக் கிடைத்தது.
நாபாலின்
குடும்பத்தை அழிக்க முடிவெடுத்திருந்த தாவீதை அவள் சந்திக்கச் சென்று, அவளுடைய கணவரின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கின்றாள். இவ்வாறு அவளின் குடும்பத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கின்றாள் (1சாமு 25).
இந்நிகழ்வுகளிலிருந்து
பழைய ஏற்பாட்டு மரபும் குறிப்பாக, கிறிஸ்துவின் வருகையையொட்டிய பழைய ஏற்பாட்டுப் பகுதிகளும் இஸ்ரயேலினுடைய மீட்பில் பெண்களின் தீர்க்கமான செயலை வலியுறுத்துகின்றன.
இவ்வாறு
பழைய ஏற்பாட்டுப் பெண்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் வழியாகத் தூய ஆவியானவர் மனுக்குலம் அனைத்திற்குமான மீட்புப் பணியில் மரியாவின் பணியை என்றுமில்லாத மிகத் துல்லியமான பண்புகளோடு வடிவமைக்கின்றார்.
மூலம்:
John Paul II,
Woman’s indispensable role in salvation history, in ‘L’Osservatore Romano’,
Weekly Edition in English, 3 April 1996, p. 3.