news-details
தலையங்கம்
ஒற்றை இலக்கும் ஓராயிரம் திட்டங்களும்!

உன்னதமான சமூக மாற்றங்களை முன்வைத்து, அதை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் அனைத்தும் இன்று தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் காலநீரோட்டத்தில் கரைந்து செயலற்றுப் போய்விட்டன. கட்சி அரசியலில் இன்று கைம்மாறு கருதாத, சுய இலாபம் தேடாத, தன்னலமற்ற, உயர் மதிப்பீடுகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிப்பது என்பது எளிதான செயலன்று. 

ஒருபுறம், ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் அமரும் பேராசை கொண்டிருப்பதும், அதே நோக்கத்திலேயே கூட்டணியைக் கட்டமைப்பதும் தமிழ்நாடு அரசியலில் இன்று அன்றாடங்காட்சியாகிப் போனது. மறுபுறமோ, பதவி தரும் சுகங்களுக்கு எதையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்ட மலிவான மனிதர்களின் அதிகார வேட்டைக்களமாக மாறி நிற்கிறது இன்றைய தமிழ்நாடு அரசியல் களம். இங்கே தன்னலமற்ற தலைவர்களையும், பொதுநலம் கொண்ட தொண்டர்களையும் காண்பது அரிது. அது கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் கானல் நீராகிப்போனது.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம நீதியும் சம உரிமையும் சம வாய்ப்பும் தொடர்ந்து வழங்கப்படவும், எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகளால் ஒன்றிணைந்திருக்கும் இந்திய நாடு, மாநிலங்களின் தனித்துவத்தைக் காக்கவும், பேணி வளர்க்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும், அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், உருவாக்கப்படும் கொள்கைகளும், திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளும் அகற்றப்படவும் கொண்டிருந்த இலக்குகள் எல்லாம் இன்று கேள்விக்குள்ளாகிப் போயின.

காலமாற்றத்திற்கேற்ப கோலம் மாறும்; கோல மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை மாறும்என்பதுதான் இன்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாகிப் போனது! ஆகவே, ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதே ஒற்றை இலக்காகிப் போனது. அதற்காக எதையும் சமரசம் செய்யும் நிலைக்கு இன்று எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன; கூட்டணி பேரத்திற்குத் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன.

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் அதிவேகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அண்மையில் ஜூன் 9 அன்று மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, “டெல்லியைப் போலவே 2026-இல் தமிழ்நாட்டிலும் பா... - .தி.மு.. கூட்டணி ஆட்சி மலரும்என்றும், “தமிழ்நாட்டில் 2026 சட்ட சபைத் தேர்தல் ஒவ்வொரு பா... தொண்டர்களுக்கும் முக்கியமான களம்என்றும் கூறியதுடன், “நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என் சிந்தனை தமிழ்நாட்டில்தான் இருக்கும்என்றும் தெரிவித்திருக்கிறார்.

பா...வுடன் ஏற்பட்டிருப்பது கூட்டணி மட்டுமே தவிர, கூட்டணி ஆட்சியில்லைஎனவும், “இதுவே கட்சியின் நிலைப்பாடுஎன்றும் திரு. எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தினாலும், “தமிழ்நாட்டில் 2026-இல் .தி.மு.. - பா... கூட்டணி அமையும்என்று அமித்ஷா அறிவித்தது எடப்பாடி உள்ளிட்ட .தி.மு.. மூத்த தலைவர்கள் தொடங்கி, .தி.மு..வின் மாவட்ட நிர்வாகிகள் வரை அக்கட்சியில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அமித்ஷாவிடம் திரு. எடப்பாடி பழனிச் சாமி உறுதி ஏதும் கொடுத்திருப்பாரோ?’ என்று .தி.மு.. மூத்த நிர்வாகிகள் ஐயம் கொள்ளத் தொடங்கினர். பா...வுடனான கூட்டணியைக் கூட ஓரளவிற்கு .தி.மு.. தொண்டர்கள் ஒப்புக்கொண்டாலும், கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே மாட்டார்கள்.

இருப்பினும், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் தி.மு..வை வீழ்த்த முடியும்; பொது எதிரியான தி.மு..வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகப் பங்காளிச் சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படுகிறோம். அதுபோல, தி.மு.. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும்என அழைப்பு விடுத்திருக்கிறார் டி.டி.வி. தினகரன்.

ஆயினும், “அமித்ஷாவின் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதுஎன்றும், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி அவர்கள் எட்டுமுறை தமிழ்நாடு வந்த போதிலும் ஒரு தொகுதியைக் கூட அக்கூட்டணி கைப்பற்றவில்லை; ஆகவே, உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது. அது எந்தவோர் அதிர்வு அலையையும் ஏற்படுத்தாதுஎன்றும், மேலும், “.தி.மு.., பா...வைக் கபளீகரம் செய்து, அந்த இடத்தில் பா...வைக் கொண்டு வருவதுதான் அமித்ஷாவின் ஒற்றை இலக்குஎன்றும் தி.மு.. பொதுச்செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

திரு. ஆர்.எஸ். பாரதியின் கருத்திற்கு எதிர்வினையாற்றிய பா... தேசிய மகளிர் அணித் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், “.தி.மு.. - பா... கூட்டணி ஏற்பட்டுவிட்டது; அதில் பா...வும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் தி.மு..வுக்குப் பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவுதான் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுஎன்கிறார். மேலும், .தி.மு.. - பா... கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருப்பதாகவும், அப்போது தி.மு.. எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதையும்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மண்ணில் குறிப்பாக, இன்றைய சூழலில் எப்படியும் உறுதியாகக் காலூன்றிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பா... கட்சியின் நோக்கத்தை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், “தி.மு.. கூட்டணி என்பது இடதுசாரிச் சிந்தனைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிற ஒரு கூட்டணி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மதச்சார்பின்மை என்கிற கருத்துகளில் உடன்பாடு உள்ளவர்களால் மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இணைய முடியும். மதச்சார்பின்மையை முன்னிறுத்துகிற ஓர் அரசியல் கூட்டணி, இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும்என உறுதிபடக் கூறியுள்ளார்.

இம்மண்ணினுடைய தத்துவம், கோட்பாடு, பொதுநலம், சமூக உறவு, வழிபாடு, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என யாவற்றையும் காவி மயமாக்கத் துடிக்கும் பா... அரசு, எப்படியும் இத்தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்று திட்டம் கொண்டிருக்கிறது. அதற்காகக் கூட்டணி உறவுகள், சமரசப் பேச்சுகள், தொண்டர்கள் சந்திப்பு எனக் களப்பணிகளை முன்னெடுக்கும் பா...வுடன் அவர்களின் ஊடகத் தொழில்நுட்பப் பிரிவு திறம்படப் பணியாற்ற முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த ஊடகத் தொழில்நுட்பப் பணிக்குழு, பா...வின் சாதனைகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை, கொள்கைகளை, தலைவர்களின் பேச்சுகளை விமர்சித்துப் பதிவிடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, எப்படியும் அதிகாரத்தைக் கையில் பெறவேண்டும் என்னும் ஒற்றை நோக்குடன் ஓராயிரம் திட்டங்களோடு தேர்தல் பந்தயத்தில் ஓடத் தயாராகிக் கொண்டிருக்கிறது பா...

அரசியல் கட்சிகளின் தலைமையின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் திட்டம், வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்த முடியாத பணிகளுக்காகக் கிரிமினல் குற்றவாளிகளை அரவணைக்கின்ற திட்டம், முன்னிலையில் இருக்கும் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பல சிறு கட்சிகளை மறைமுகமாக ஆதரிக்கும் இரகசியக் கூட்டணித் திட்டம், மற்ற கட்சித் தலைவர்கள் பகிரும் எல்லாக் கருத்துகளுக்கும் பொதுத்தளங்களிலும் ஊடகத் தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்கின்ற திட்டம்... எனப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், வாக்குச்சீட்டின் வலிமை அறியாமல், தவறான மனிதர்களை ஆட்சி நாற்காலையில் அமரச் செய்து ஏழ்மையையும் வறுமையையும் பொய்மையையும் ஏமாற்றத்தையும் அரவணைத்துக் கொண்ட பாமர மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது நம் அனைவருடைய கடமை.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்