news-details
ஞாயிறு மறையுரை
ஜூன் 29, 2025, புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் (மூன்றாம் ஆண்டு) திப 12:1-11; 2திமொ 4:6-8,17-18; மத் 16:13-19 - மறைப்பணி சீடர்களாகச் செயல்பட!

அனைத்திலும் இறைவனைச் சார்ந்து, எளிமையிலும் தாழ்மையிலும் இறையனுபவம் கொண்டு வாழ்தல் மிகவும் கடினமானது. திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்பிக்கையின் பயணம் என்பது ஒருபோதும் பூங்காவில் நடப்பது அல்ல; மாறாக, சவால் நிறைந்தது. சில வேளைகளில் சிரமமானது.  எத்தகைய சிக்கல் வந்தபோதிலும் இறைநம்பிக்கையில் நிலைத்து நின்று, நற்செய்தியின் அழகை எல்லா இடங்களிலும் கொண்டு சென்றவர்கள் திருத்தூதர்கள். உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எப்படித் தேவைப்படுகிறதோ அதுபோல, திரு அவைக்கும் நற்செய்தி அறிவிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான், “கடவுளின் அன்பையும் நற்செய்தியின் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் திரு அவை வாழ முடியாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று நாம் இயேசுவின் மிகப்பெரும் சீடர்களும், திரு அவையின் இருபெரும் தூண்களுமாகிய புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவர்கள் இருவரும் தங்கள் பலவீனத்தில் இயேசுவின் அழைப்பிற்கு ‘ஆம் என்று கூறி, தங்கள் வாழ்வு முழுவதும் தாழ்மை என்ற பண்பைக் கடைப்பிடித்து, இயேசுவுக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். படகுகளுக்கும் வலைகளுக்கும் இடையே வாழ்ந்த ஒரு மீனவர் பேதுரு. செபக்கூடங்களில் போதித்து வந்த கல்வி கற்ற பரிசேயர் பவுல். இந்தப் புனிதர்களின் வாழ்வு தவறுகளின்றி அமையவில்லை. ஏனெனில், ஒருவர் ‘கிறிஸ்துவைத் தெரியாது என மூன்று முறை மறுதலித்தார். மற்றவர், கிறித்தவர்களைத் துன்புறுத்தினார். கிறித்தவ வாழ்வின் தொடக்கம் நம் தகுதியைப் பார்த்து அமைவதில்லை என்பது இவர்களின் அழைப்பு உணர்த்தும் சிறந்த பாடம். நம் கிறித்தவ நம்பிக்கைப் பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும், அவருக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கும் தேவையான வழிமுறைகளை இவ்விருவரும் நமக்குக் கற்றுத்தருகின்றனர்.

இயேசுவின் தலைமைச் சீடரான புனித பேதுரு வலிமையானவராகவும் உண்மையானவராகவும் தாராள மனம் கொண்டவராகவும் அறியப்படுகிறார். இயேசு இவரை அழைத்தபோது, ‘நான் யோசித்து விட்டுப் பிறகு கூறுகிறேன் என்று அவர் கூறவில்லை; எதிர்வரும் நன்மை-தீமைகள் குறித்துக் கணக்கிடவுமில்லை. மாறாக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு (மத் 4:20) உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார். பேதுரு ஒரு சீடராக, இயேசுவைப் பின்பற்றுபவராக, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பவராக, அனைத்தையும் கற்றுக்கொள்ளக் கூடியவராக இருந்தார்.

இன்றைய நற்செய்தியில், “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத் 16:16) என்று கூறிய புனித பேதுருவின் பதில் இயேசுவைப் பின்பற்றுவதில் அடங்கி இருந்தது. இன்றைய முதல் வாசகத்தில், ஏரோது அரசனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தூதர் பேதுருவை ஆண்டவரின் தூதர் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும் (திப 12:7) என்று கூறுவது ஏரோதின் சிறையிலிருந்து தப்புவதற்குத் தொடக்கமாகவும், உயிர்ப்பின் பேருண்மையில் நாம் ஒவ்வொருவரும் நுழைவதற்கு விடுக்கப்படும் அழைப்பாகவும் அமைகிறது.

நீ என்னைப் பின்தொடர்ந்து வா (யோவா 21:22) என்பதுதான் பேதுருவிடம் இயேசு கூறியதாக நற்செய்திகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள இறுதியான வார்த்தைகள். உயிர்த்தெழுந்தவரை நோக்கி விரைவாகச் செல்ல அவர் கடலில் குதிக்கின்றார் (யோவா 21:7). கைது செய்யப்பட்டு, கசையடிக்கு முன்னும் பின்னும் உயிர்த்த இயேசுவை ஆலயத்தில் துணிவோடு அறிவிக்கின்றார் (திப 3:12-26; 5:25-42). அவர் ஒரு பாறையாகவே இருந்தார். பேதுரு ஒரு வலிமைவாய்ந்த மனிதராக, பாறையாக இருந்தபோதிலும், நம்மைப் போன்று அவரும் ஒரு சாதாரண மனிதர்தான். சிறுமை எனும் பலவீனமும் அடிக்கடி அவரில் வெளிப்பட்டது. சில வேளைகளில் இயேசு என்ன செய்கிறார் என்று அவருக்குப் புரியாமல் இருந்தது (மாற் 8:32-33; யோவா 13:6-9). கெத்சமனியில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோது, அவரது துன்பத்தில் துணையாக இல்லாமல் உறங்கினார் (மத் 26:36-46). இயேசு கைது செய்யப்படுவதை எதிர்கொள்ளும்போது, பேதுருவை அச்சம் முந்திக்கொள்ள, அதனால் அவர் இயேசுவை மறுதலித்தவராய், மனம் வருந்தி அழுதார் (லூக் 22:54-62). சிலுவையின்கீழ் நிற்கக்கூட அவருக்குத் துணிவு இல்லாமல்போனது. ‘Quo Vadis பாரம்பரியத்தின்படி, பேதுரு மரணத்தை எதிர்கொள்ளும்போது தப்பியோட முயற்சித்தார்.

பேதுரு, இயேசுவின் சிலுவைச் சாவுக்குப்பின் அவரது கொள்கைகளுக்குச் சாட்சியாக விளங்குவதை விட்டுவிட்டு, தன்னுடைய பழைய மீன்பிடித் தொழிலுக்கே திரும்பினார் (யோவா 21:1-3). இருப்பினும், உயிர்த்த இயேசு அவரைத் தற்கையளிப்பு நிலைக்கு அழைத்துச் சென்று, பேதுரு எனும் பாறைமீது திரு அவையைக் கட்டியெழுப்ப விரும்பினார். பேதுரு உறுதியானவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் அல்ல; மாறாக, பேதுருமீது, தம் திரு அவையைக் கட்டியெழுப்ப இயேசு விருப்பம் கொண்டதாலேயே. ஆகவேதான், தன் தவறுகளிலும் ஆண்டவரின் வல்லமைமிகு இரக்கத்தைச் சந்தித்த பேதுரு, இயேசுவே தன் வாழ்வின் மையம், அவரின்றி ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது (திப 4:20) என்று முழங்கினார். இயேசுவின் விருப்பத்தை ஏற்றுச் செயல்படுத்தும் பணியில் எந்தத் துன்பம் வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அவர், உரோமை திரும்பி மரணத்தைச் சந்திப்பதற்கான மனவலிமையையும் துணிவையும் பெற்று, மறைச்சாட்சியாகவே சிலுவையில் தன்னுயிரைக் கையளித்தார்.

பவுல், தனது யூதச்சட்டத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர். தன் மதப்பாரம்பரியங்கள்மீது கொண்டிருந்த ஆர்வத்திற்கு அடிமையாக இருந்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தியவர். தனது யூத மதம் மட்டும்தான் உண்மையானது என நம்பியவர். புனித ஸ்தேவானின் மறைச்சாட்சியச் சாவும், அதனைத் தொடர்ந்து தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்ட அனுபவமும் பவுலை உலுக்கின. அவருடைய வாழ்வு மாற்றமடைந்தது. சிலுவையில் தொங்கும் இயேசுவை ஆழ்நிலை அருள்சிந்தனை செய்ததன் வழியாகத் தனது பலவீனத்தை வெல்லும் இறைஅருளைக் கண்டடைந்தார். இறைவனுடனான சந்திப்பே பவுலின் வாழ்க்கையில் நற்செய்தி அறிவித்தலுக்கான பற்றியெரியும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவருடன் சிலுவையில் அறையப்பட்ட புனித பவுல், “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா 2:20) என்றார். 

நற்செய்தி அறிவிப்பிலும் நம்பிக்கையிலும் வளர்ந்த பவுல் தன்னைத் திருத்தூதர்களில் கடையவனாகவும் (1கொரி 15:9), இறைமக்களில் கடையவனாகவும் சுட்டிக்காட்டுகிறார் (எபே 3:8). தாழ்ச்சியின் உச்சிக்கே சென்ற பவுல், “பாவிகளிலே மேலான பாவி (1திமொ 1:15,16) என்று தன்னைக் குறிப்பிடுகிறார். இயேசுவினால் விடுதலை அடைந்த புனித பவுல், எத்தனை பெருந்துன்பங்களின் மத்தியிலும் கடவுள் தன் அருகே இருப்பதை எப்போதும் உணர்கிறார். “நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன் (2திமொ 4:6) என்கிறார். நற்செய்தி அறிவிப்பை ‘நல்லதொரு போராட்டம் (4:7) என்று கூறும் புனித பவுல் தனக்காக வாழாமல், கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்தார். தன் உடல்நலத்தை இழந்தாலும், கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையை அவர் ஒருபோதும் இழக்கவில்லை.

திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் இவர்கள் இருவரின் சாட்சிய வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் பல.

முதலில், நற்செய்தியின்மீது பேரார்வம் கொண்டு, தாழ்ச்சியோடு திரு அவையின் பணிகளில் நாம் ஈடுபடவேண்டும். புனிதத்துவம் என்பது, தன்னை உயர்த்துவதில் அல்ல; மாறாக, தாழ்த்திக்கொள்வதில் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, வெறும் வார்த்தைகளால் அல்ல; அந்த வார்த்தைகளின் கனிகளான நற்செயல்களால் சான்றுபகர வேண்டும்.

இரண்டாவது, நற்செய்திக்கான சான்றுகள், பிறருக்காக நாம் நம்மையே கையளிப்பதாகும். பிற இன மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்த பவுலைப்போல, சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்மீதும் நமது பரிவன்பைக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, வறுமை, சிதைவு, ஓரங்கட்டப்படுதல் போன்றவை வேரூன்றியுள்ள இடங்களில் மனிதம், நீதி, தோழமை, உடன்பிறந்த உணர்வு ஆகியவை நிறைந்த ஓர் அழகான சமூகத்தை உருவாக்க  திரு அவையாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நிறைவாக, கடவுளின் வியத்தகு செயல்களுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாகச் செயல்படுபவர்களே இறைவாக்கினர்களாகச் செயல்பட முடியும். இந்த இரு மாபெரும் புனிதர்களும் தங்கள் தவறுகளை, பலவீனங்களை மறைக்காமல் செயல்பட்டதுபோல், நாமும் நம் குறைகளுடன் இறைவனிடம் வரும்போது, நம் உண்மையான தேவையே இறைவன்தாம் என நாம் உணரும்போது, நம் வழியாகவும் இயேசு அரும்பெரும் செயல்களை ஆற்றுவார். எனவே, நாம் இயேசுவைப் பின்பற்றுவதில் சீடர்களாகவும் நற்செய்தியை அறிவிப்பதில் திருத்தூதர் களாகவும் தொடர்ந்து மறைப்பணியாற்றிட இத்திருத்தூதர்களின் பரிந்துரையை நாடுவோம்.