2014-ஆம் ஆண்டு டிசம்பர். விடுமுறைக் காலமாதலால் திருப்பயணிகள் கூட்டத்தால் வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு வளாகம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 2005-ஆம் ஆண்டு மரித்து, இறைவனில் இணைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் கல்லறையில் மக்கள் வண்ண வண்ண மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்துகையில், திடீரென்று அங்கே ஒரு பரபரப்பான சூழல் தென்பட்டது.
இத்தாலி
நாட்டின் பாதுகாப்புப் படையினரும், வத்திக்கானின் பாதுகாப்புப் படையினரும் மிகவும் எச்சரிக்கையான நிலையில் நிற்க, அங்கு வந்து நின்ற வாகனத்திலிருந்து அரசுக் காவலர்கள் தொடர வெளிப்பட்ட 56 வயது மதிக்கத்தக்க மனிதனைக் கண்டதும் கூட்டம் இன்னும் பரபரப்படைந்தது. வந்தவன் கைகளில் வெள்ளை ரோசாக்களாலான பெரிய மலர்க்கொத்து ஒன்று இருந்தது. இதற்குமுன் இதே புனித பேதுரு வளாகத்துக்கு அவன் வந்திருக்கிறான், இப்படி எல்லாருடைய கவனத்தையும் ஈர்ப்பது போலல்ல. அவன் அன்று அங்கே வந்ததற்கும், இன்றைய வருகைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்புதான் இந்த நிகழ்வின் பின்னணியாகவும் அமைந்துள்ளது.
1981-ஆம் ஆண்டின்
மே மாதத்தின் 13-ஆம் நாள். அமைதியான ஒரு புதன்கிழமை. வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாலை ஐந்து மணிக்குத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் மக்களைச் சந்தித்து ஆசிர் வழங்கும் நாள். தனித்தனியாகவோ, குடும்பம் குடும்பமாகவோ நண்பகலுக்கு முன்பிருந்தே மக்கள் அவரைத் தரிசிக்க அங்கே குழுமிக் கொண்டிருந்தாலும், மாலை மணி எப்போது ஐந்து ஆகும் என மக்கள் வெகு
ஆவலோடு காத்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆங்காங்கே மக்கள் ஒருவர் மற்றவரிடம் நலம் விசாரித்துக்கொண்டும், கலகலப்பாக உரையாடிக் கொண்டும், கையில் கொண்டு வந்திருந்த உணவு வகைகளைச் சிறிது சிறிதாக உட்கொண்டவர்களாய்ப் பசி தீர்த்துக் கொண்டும் இருந்தனர்.
பல்வேறு
நாடுகளிலிருந்து வத்திக்கான் நகரைத் தரிசிக்க வரும் திருப்பயணிகள் பலர் தங்களுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்புப் பற்றியும், தங்கள் இனிய அனுபவங்கள் பற்றியும் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி தத்தம் உறவினர்களுக்கு அனுப்புவது வழக்கம். இதற்காக அஞ்சலகம் தேடிப் போய் கடிதம் வாங்கி எழுதி அனுப்புவது சிரமமானது. அந்த அஞ்சல் அட்டைகளை எழுதிக் கொடுத்துக் கட்டணம் பெற்றுக்கொள்ளும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஓர் ஓரமான இடத்தில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் இந்தப் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஒருவன் வில்பேரி என்னும் போலிப் பெயர் கொண்ட ஆக்கா; மற்றொருவன் பெயர் ஒரல்செலிக். இருவரும் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், செவிகள் மட்டும் கூட்டத்தினரின் ஆரவாரச் சத்தத்தைக் குறிவைத்திருந்தன.
இவ்விருவரில்
துருக்கி நாட்டுக் குடிமகனான மகமத் அலி ஆக்கா 1970-ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த வங்கிக்கொள்ளையை நிகழ்த்தியவன். மேலும், 1979-இல் இடதுசாரிப் பத்திரிகையாளர் அப்டி பெக்கியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிக் காவல்துறையால் தேடப்பட்டு வந்தவன். அவன் தன் உண்மைப் பெயரை முழுக்க மறைத்துவிட்டு வில்பேரி என்ற பெயரில் அந்தப் பெயருக்குரியவனுடைய அங்க அடையாளங்களைத் திருத்தி, போலி பாஸ்போர்ட்டோடு 1980-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இத்தாலிக்குள் நுழைந்து யாருமே தன்மேல் ஐயம் கொள்ளாதபடி நடமாடிக் கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாக ‘ஒரல் செலிக்’ என்ற கூட்டாளி நண்பன் வேறு. இருவருக்கும் இப்போதுதான் தாங்கள் நிறைவேற்ற வேண்டிய செயலுக்கான சரியான நேரம் வாய்த்துள்ளது என்று தகுந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்தனர். திடீரென்று மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் அந்த வளாகத்திலிருந்து கிளம்பிற்று. அக்சாவும் செலிக்கும் எச்சரிக்கையாகி தங்கள் இடத்தைவிட்டு எழுந்தனர். மக்கள் கூட்டத்திற்கிடையில் அமைக்கப்பட்ட சிறப்புப் பாதையில் ஊர்ந்து வந்து கொண்டிருந்த முட்டை வடிவத்தில் அமைந்திருந்த ஜீப்பில் நின்றிருந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன் இரு கரங்களையும் விரித்துப் புன்னகைத்தபடி மக்களுக்கு நேரடித் தரிசனம் அளிக்கப் புறப்பட்டு விட் டார். மாலை சரியாக 5 மணி 19 நிமிடங்களில் வாகனம் பேராலயத்தின் தென்மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட, திருத்தந்தையுடன் கரம் குலுக்க மக்களின் கரங்களும், புகைப்படம் எடுக்க காமிராக்களும், அவரை வாழ்த்த சிலுவைகளும் நீண்டன. இந்தக் கூட்டத்தில்தான் ஆக்காவின் கரமும் திடீரென கைத்துப்பாக்கியோடு நீண்டது. அடுத்த வினாடி இரண்டு குண்டுகள் திருத்தந்தையின் அடிவயிற்றிலும், இடது கையில் ஒரு குண்டும், வலது தோள்பட்டையில் ஒரு குண்டும் என மொத்தம் நான்கு
குண்டுகள் சரமாரியாகப் பாய, திருத்தந்தை தான் நின்ற இடத்திலிருந்து சரிந்தார்.
அவன்
அடுத்துச் சுடும்முன் வத்திக்கானின் பாதுகாவலர் கேமிலோசிபின் அவன் கரங்களை எட்டிப்பிடித்தார். அவன் மீண்டும் சுட்டுவிடக் கூடாது எனவும், அவன் தப்பிவிடக்கூடாது எனவும் பாதுகாவலர் அருகில் நின்றிருந்த அருள்சகோதரி ஒருவரும் மற்றும் பலரும் அவனைத் தப்பவிடாமல் பிடித்தனர். ஆனால், இந்தக் களேபரத்தில் உடன் வந்திருந்த செலிக் அங்கிருந்து நழுவித் தப்பி விட்டான்.
தன்
உடலில் மூன்று பங்கு இரத்தம் வெளியேறிவிட்ட நிலையில் திருத்தந்தையின் உயிருக்கு 48 மணி நேரம் கெடு வைக்கப்பட்டது. உலகத் தலைவர்களின் கண்டனமும் அனுதாபமும் உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் எழுந்தன. ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் திருத்தந்தை ஆபத்து நீங்கியவரானார். மருத்துவமனைப் படுக்கையிலிருந்த திருத்தந்தை “அன்புமிக்க சகோதர சகோதரிகளே! எனக்கேற்பட்ட இக்கட்டு வேளையில் நீங்கள் என்னை மறக்காது என்னோடு இணைந்திருந்ததற்காகவும், உங்கள் அனைவருடைய ஆழ்ந்த அனுதாபத்திற்காகவும், உருக்கமான செபங்களுக்காகவும் மனப்பூர்வமாக நன்றி செலுத்துகிறேன். குண்டு பாய்ந்து என்னோடு காயம்பட்ட இருவரையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்” என்று
நன்றிகூறிய வேளையில் மற்றொரு செய்தியையும் மறவாமல் அறிவித்தார். “என்னைச் சுட்ட அந்த என் சகோதரனுக்காகச் செபிக்கிறேன். நான் அவனை என் முழு மனத்தோடு மன்னித்துவிட்டேன். இறைவனும் குருவுமான இயேசுவோடு இணைந்து என் வேதனைகளைத் திரு அவைக்காகவும், உலக மக்களுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன்” என்ற
அவர்தம் அறிவிப்பால் அவரின் மன்னிக்கும் மனத்தின் மாண்பைக் கண்டு உலகமே நெகிழ்ந்தது.
கைது
செய்யப்பட்ட ஆக்காவுக்கு இத்தாலிய நீதிமன்றம் அவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஆயுள் தண்டனை வழங்கிற்று. திருத்தந்தை தான் சொற்களால் வெளிப்படுத்திய தன் மன்னிப்பை 1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இத்தாலிய சிறைச்சாலையில் ஆக்காவைத் தனிமையில் சந்தித்து முழுமனத்தோடு அவனுக்கு வழங்கினார். இறுதியில் அவனை ஆசிர்வதித்த திருத்தந்தையின் கரத்தில் அணிந்திருந்த மோதிரத்தை முத்தமிட்டபோது அவன் மனம் இளகியிருந்தான். 2000-ஆம் ஆண்டு திருத்தந்தையின் வேண்டுகோள்படி அவன் சொந்த நாடான துருக்கியின் வசம் ஒப்படைக்கப்பட்டான்.
தன்னைச்
சுட்டுக் கொல்லத் துணிந்த ஆக்காவின் குடும்பத்தின்மீது அளவற்ற பாசம் வைத்திருந்த திருத்தந்தை 1987-ஆம் ஆண்டில் ஆக்காவின் தாயாரையும், 1991-இல் அவனுடைய சகோதரரையும் சந்தித்துப் பேசினார். 2005-ஆம் ஆண்டில் திருத்தந்தை நோயுற்றிருக்கையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்திச் செய்தி அனுப்பினான் ஆக்கா. மன்னிப்பின் சிகரமாகவும், மனிதநேயத்தின் மகுடமாகவும் விளங்கிய திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் உடலில் பற்பல போராட்டங்களுக்குப் பின்னர் 2005, ஏப்ரல் மாதம் தன் இன்னுயிரை நீத்தார். உலகம் ஒரு மாமனிதரை இழந்தது, திரு அவை ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்தது.
29 ஆண்டுகள்
சிறைவாசம் அனுபவித்து 2010-ஆம் ஆண்டில் விடுதலையானான் ஆக்கா. நான்கு ஆண்டுகள் கழித்து 2014-ஆம் ஆண்டில் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்த ஆசைப்பட்ட அவன் இப்போது சட்ட விரோதமாக இத்தாலி நாட்டுக்குள் நுழைகையில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டான். பலத்த சோதனைகளுக்குப் பிறகே அவன் வந்த நோக்கத்துக்குக் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அதன் பொருட்டே இப்போது கையில் வெள்ளைநிற ரோஜாக்கள் அடங்கிய மலர்க்கொத்தோடு திருத்தந்தையின் கல்லறையில் அனுமதிக்கப்பட்டான். மலர்க்கொத்தினைத் திருத்தந்தையின் கல்லறைமீது வைத்து அஞ்சலி செலுத்திய அவன் முகம் அமைதியை வெளிப்படுத்தியது. திருத்தந்தையின் ஆன்ம சாந்திக்காக மௌனம் காத்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.
‘ஆக்கா உண்மையிலேயே மனம் திருந்தி விட்டானா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் சார்பாக வத்திக்கானின் செய்தித்தொடர்பாளர் இப்படித்தான் கூறினார்: “திருத்தந்தை புனித ஜான்பாலின் கல்லறையில் அவன் மலர்களை வைத்துச்சென்றதே போதுமானது.”