தமிழர் வாழ்வும் வாழ்வியலும் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. மரபார்ந்த நம் மண்ணின் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன. காலங்காலமாக நம் மூதாதையர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கட்டிக்காக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அரசியல் அரங்கேற்றத்தால் களவாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தகுந்த தருணம் இதுவே!
பொய்மையும்
போலித்தனமும் நிறைந்த மனிதர்களே புன்னகை முகம் போர்த்தி, அதிகார ஆளுமைகளாய் நம் சமூக வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். உண்மை உறங்காதெனினும், உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்மையை உலாவ விடுகின்றனர். பொய்மையை
மீண்டும் மீண்டும் கூறும்போது, அது உண்மையாகிவிடும் என்ற தவறான எண்ணம் அவர்களின் கருத்தியலாகிப் போனது. ஆகவே, சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் சந்தர்ப்பவாதிகளின் சாகசங்களையே நம்மால் காணமுடிகிறது.
‘பண்பற்றவனாயினும் பணம் படைத்தவன் வார்த்தையே வேதமாகிப் போகிறது’ என்னும் கூற்று பல வேளைகளில் இங்கு,
இன்று உண்மையாகிப் போகிறது. அரசியல் என்னும் நாடக மேடையில் கற்றறிந்தவர்போல் சிலர் இருந்தாலும், அவர்களின் கடைச்சரக்கு மிகவும் மலிவானதாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? இவர்கள் ஆளுகின்றபோது நாம் வாழ்கின்றோம் என்று அங்கலாய்ப்பதைத் தவிர!
ஆயினும்,
உண்மையை நாம் உரக்கக் கூறவேண்டும். பொய்யாமொழி, தமிழ்மறை, உலகப் பொதுமறை எனும் சிறப்புக் கொண்ட திருக்குறள் ஒரு தொன்மையான தமிழ்மொழி அற இலக்கியம் என்பது
உலகறிந்த பேருண்மை.
அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புகளைக் கொண்ட மானுட வாழ்வியல் நூல் அது! மாந்தர்தம் அக வாழ்வில் ச(சு)மூகமாகக் கூடி
வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கும் வாழ்வியல் நூலிது.
வாய்மை,
கருணை, அன்பு, பொறுமை, சுய கட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, நலம், ஒழுக்கவியல், பரத்தமையோடு கூடாமை, கல்லாமை, மது உள்ளிட்ட போதைப்பொருள்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், நட்பு, கூடாநட்பு, கூடா ஒழுக்கங்களை விலக்குதல், தனிநபர் ஒழுக்கம், ஆட்சியர் ஒழுக்கம், அமைச்சர்களின் பண்பு, சமூகநீதி, அரண், போர், கொடியவருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற அரசியல் சமூகக் கருப்பொருளை உள்ளடக்கிய அறநெறிகளை விளக்குவதால், “அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது” என்று ‘இந்திய இலக்கியங்களின் கருத்துக் களஞ்சியம்’
என்னும் நூலில் குறிப்பிடுகிறார் மோகன்லால் எனும் இலக்கிய ஆய்வாளர்.
மதச்சார்பற்ற
தன்மையினாலும், அனைவருக்குமான பொதுஅறங்களைக் கூறுவதாலும் அனைத்து மக்களாலும் பெரிதும் போற்றப்படும் உன்னத இலக்கியமாகத் திருக்குறள் பார்க்கப்படுகிறது. எல்லா நூல்களிலும் காணப்படும் அனைத்துச் சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் பொதுப்படையாகத் திருவள்ளுவர் வழங்கி இருப்பதால் பரிமேலழகர், “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து, எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல்
இவர்க்கு இயல்பு” என்று வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்.
மேலும்,
திருக்குறளின் மேன்மையைக் குறிப்பிடுகையில் “சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து, அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைபட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது” என்கிறார்
‘உலகத் தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் பேராசிரியர் தமிழண்ணல்.
வள்ளுவர்
வழங்கிய திருக்குறள் வாழ்வியல் அறம் பேசும் ஓர் இலக்கண நூல். அறம் அனைவருக்கும் பொதுவானது என்ற சிந்தனையில் அறத்தை மையமாக வைத்தே இந்நூல் இயற்றப்பட்டதால் திருக்குறள் ‘அறம்’ என்ற பெயராலும் வழங்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள். ஆகவேதான்,
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, “அறவாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான்; வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவை” என்றும்,
“குறள் தமிழ்மொழிக்கு ஓங்கி நிற்கும் ஒரு புகழாரம்”
என்று ஆங்கிலிக்க அருள்பணியாளர் ஜான் இலாசரஸ் என்பவரும், “உலகின் அனைத்துத் தலைசிறந்த ஆராய்ச்சிச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே திருக்குறள்” என்று
அமெரிக்கக் கிறித்தவ அருள்பணியாளர் இம்மான்ஸ் இ. வைட் என்பவரும்
புகழாரம் சூட்டுகின்றனர். “தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்” என்று வர்ணிக்கிறார் பிரெஞ்சு மொழியில் இதனை மொழிபெயர்த்த இ.எஸ். ஏரியல்.
தமிழரின்
இலக்கிய அடையாளமாய், வாழ்வியல் அறம் பேசும் பண்பாட்டுக் களஞ்சியமாய், மானுடச் சமூகத்தின் பொதுமறை பேசும் இலக்கண நூலாய் சிறப்புப் பெற்றிருக்கும் திருக்குறளைச் சனாதனத் தர்மத்தின் வழியில் அடையாளப்படுத்த முயல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி. அண்மையில் சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய்ஞானம்’
என்னும் நூலைத் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின்
பேச்சை அப்படியே மேற்கோள்காட்ட விழைகிறேன்: “உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும்
இராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும் துறவிகளாலும் சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால் உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் ஒன்றுதான்; அது சனாதன தர்மம் மட்டும்தான்! பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; தர்மம் அழிந்தால் நாடு அழிந்து விடும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற எண்ணம் எல்லார் மனத்திலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோவில்கள். அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீகத் தேசமாக ஒளிரும். திருக்குறள் ஓர் ஆன்மிகப் புத்தகம்; சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரித்துப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்” (‘தி
இந்து தமிழ் திசை’,
பக். 10) என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.
எப்போதும்
முரண்பட்ட கருத்துகளையே விதைத்துவரும் ஆளுநரின் இப்பேச்சு, இன்று முரண்பாடுகளின் உச்சநிலையை எட்டியிருக்கிறது. நாட்டின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்;
அனைத்து மதங்களின் தர்மமும் ‘சனாதன தர்மம்’ ஒன்றையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பேருண்மை இந்திய ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு அடிப்படையில் மலர்ந்ததாக அல்லாமல் கோவில்களே இத்தகைய உணர்வைத் தருவதாகப் பிதற்றியிருக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என இந்துத்துவா சிந்தனைகளைச்
செலுத்தித் திருவள்ளுவரை ஓர் இந்துத் துறவியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பொதுவெளியில்,
மேடை விழாக்களில் பேசுவதற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் அவருக்கு இத்தகைய சிந்தனை எதார்த்தமாக எழுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆயினும், இத்தகைய மேடைப்பேச்சுகள் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திரிபாகவும் திருடாகவுமே அனைவராலும் பார்க்கப்படும். ஆகவே, இத்தகைய செயல்பாடுகளையும் முரண்பாடுகள் கொண்ட பேச்சுகளையும் ஆளுநர் அவர்கள் தவிர்ப்பது நல்லது.
தமிழ்
சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆய்வாளர்கள் என யாவரும் அவ்வப்போது
ஆளுநரின் முரண்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் அது ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’
இருக்கிறது.
ஆளுநர்
மட்டுமல்ல, தமிழர் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, இலக்கிய வளமையைத் திரித்துப் பேசுவதும் மறுத்துக் கூறுவதும் அன்றாடச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் பலருக்கு இத்தகைய எச்சரிக்கையும் கண்டனமும் அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்று நாம் எண்ணினாலும், அது பல வேளைகளில் “கேட்கச் செவியுள்
ளோர் கேட்கட்டும்” என்றே
நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டியதாக அமைகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்