ஒரு பூதம் இரத்தவெள்ளத்தில் மிதக்கிறது. வன்முறைகள்வழி வலுத்த உயிர்ப்பலிகள் கேட்கிறது. அது பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலும் உருமாறுகிறது. மதப்பயங்கரவாதம், கருத்தியல் பயங்கரவாதம், அரசியல் பயங்கரவாதம் என்பவை வடிவுமாறி அரசப் பயங்கரவாதமாக உச்சம் பெறுகிறது. இதன் உள்ளடக்கம் மதவாத, தேசியவாத, இனவாத, மொழிவாத காவி அரசப் பயங்கரவாதமாகும்.
சுதந்திர
இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசவிரோத அமைப்பென மூன்று முறை தடை செய்யப்பட்டது. அதன் அரசியல் பிரிவான பா.ச.க.
ஆட்சிக்கு வந்தபின் அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கின்றனர். இந்திய வரலாற்றில் காந்தியைக் கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எனக் கூறப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு குஜராத் மாநிலம் எப்பொழுதுமே சோதனைக்களம்தான். 2001-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பா.ச.க.
ஆட்சியைப் பிடிக்கிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நரேந்திர மோடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுகிறார். அவர் ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே குஜராத்தில் முதல்வராகத் தொடர முடியும். செல்வாக்கு
மிக்க பட்டேல் சமூக மக்கள், மோடியின் வெற்றியைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். மோடியின் வெற்றி கேள்விக்குறியான பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காவி அரசப் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கிறது.
கரசேவகர்கள்
பயணித்த இரயில் பெட்டிகள் கோத்ரா எனும் இடத்தில் தீ வைக்கப்படுகிறது. தீ வைத்தவர்கள்
இசுலாமியர்கள் என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது. காவல்துறை துணையோடு மத வெறியர்கள் இசுலாமியர்களைத்
தாக்கத் தொடங்குகிறார்கள். 10,000 பிணங்களின் மேல் மோடி வெற்றி பெறுகிறார்.
அரசப்
பயங்கரவாதம் என்பது மாநில அரசால் சொந்த மக்கள்மீதே கட்டவிழ்த்துவிடும் தீவிரவாத நடவடிக்கையாகும். அங்கு மக்கள் வாழ்வாதாரங்களை, வீடுகளை, உடைமைகளை இழக்கிறார்கள். அன்றைய பிரதமர் வாஜ்பாய் முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களைச் சந்திக்கிறார். மக்கள் கண்ணீரோடு நடந்த உண்மைகளைக் கூறுகிறார்கள். வாஜ்பாய் கோத்ரா சம்பவத்திற்கு வெட்கித் தலைகுனிவதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் வாஜ்பாய் ‘தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர்’ என வர்ணிக்கப்பட்டார். கோத்ரா சம்பவம்
குறித்து இரானா அயூப் என்பவர் எழுதிய ‘குஜராத் கோப்புகள்’
என்ற புத்தகம் நடந்த உண்மையை, காவிப் பயங்கரவாதத்தை வெளிக்கொணர்கிறது. குஜராத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி என பா.ச.க.வின் நச்சுக்
கரங்கள் விரிகின்றன. அரசப் பயங்கரவாதம் தொடர்கின்றது.
பா.ச.க.வில்
ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்கள் “மோடியைவிட உ.பி. முதல்வர்
யோகி பிரதமராக வந்திருந்தால் சிறப்பாக இருக்கும்”
எனக் கனவு காண்கிறார்கள். மெல்லக் காரணம் கேட்டால் ‘புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத், அரசை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் என யாரை அடையாளம்
காண்கிறாரோ, அவர் வீட்டிற்கு அடுத்தநாள் புல்டோசர் அனுப்புவார், வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்படும். அதில் சிறுபான்மை இசுலாமியர்களே அவரது குறி என்பதும் கண்கூடு. 2024, நவம்பரில் உச்ச நீதிமன்றம் யோகியின் உத்தரப்பிரதேச அரசிற்குக் கண்டனம் தெரிவித்து, சட்டத்தின் ஆட்சி நடத்திட உத்தரவிட்டது. புல்டோசர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
உத்தரப்பிரதேச
அரசியலுக்கு முற்றிலும் மாறுபட்டது மணிப்பூர். அங்குக் கலவரக்காரர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பாய் நின்றதும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டபோது வேடிக்கைப் பார்த்ததும் விழிகாண் பதிவுகள். வன்முறைக் கும்பல்கள் வைத்திருந்த ஆயுதங்கள் எவ்வாறு? எவ்வழி வந்தது? என்ற கேள்விகளும் உண்டு. மணிப்பூரில் அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்ததும், பிரதமர் நேரில் செல்லத் தயங்குவதும் ஆயிரமாயிரம் ஐயங்களை எழுப்புகிறது. 2020-இல் தில்லியின் வடக்குப் பகுதிகளில் கலவரம் வெடிக்கிறது. இசுலாமிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் விளைவு 2024-இல் தில்லியின் ஆட்சியைப் பா.ச.க.
கைப்பற்றுகிறது.
‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கேற்ப ‘தேர்தல் வரும் பின்னே, பல கலவரங்கள் எழும்
முன்னே’ என்பது
பா.ச.க.வின்
தந்திரமாக இருக்கக்கூடுமோ என்பது சாமானியர்களுக்குச் சந்தேகமாக எழுகிறது. 2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இந்திய இராணுவ வாகனங்கள்மீது நடைபெற்ற புல்வாமா தற்கொலை படைத் தாக்குதலை பா.ச.க. தேர்தல்
பிரச்சாரமாக்கி வாக்குச் சேகரித்தது. இது குறித்த உண்மை நிகழ்வுகளை அம்மாநில ஆளுநரே பின்னாள்களில் வெளிக்கொணர்ந்தார். அவர் “2019 மக்களவைத் தேர்தல்கள், இறந்த நமது வீரர்களின் உடல்மீது நடத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அன்றைய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டியிருக்கும்” என்றார்.
நடைபெறவுள்ள பீகார் தேர்தலை முன்னிட்டே பஹல்காம் சம்பவங்கள் என்ற விமர்சனங்களும் உண்டு. இவ்விரு சம்பவங்களிலும் எழுப்பப்படும் விடைதெரியா வினாக்களே இதற்கான முழுச்சான்றாகும். பா.ச.க.வின் அரசியல் பார்வை கலவரங்களில், பயங்கரவாதங்களில் வாக்குப் பெறுவது என்பதே அடிப்படை நோக்கமாகும்.
தமிழ்நாட்டிலும்
பா.ச.க. தன்
தடம்பதிக்கக் கலவரங்களைத் தூண்டுகிறது. மைக்கேல்பட்டியில் மதமாற்றம் என அண்ணாமலை முதல்
அவரது தொண்டர்கள் வரை குதித்தார்கள். திருவண்ணாமலையில் இராணுவ வீரரும் அவர் மனைவியும் மதக்கலவரத்தைத் தூண்ட பேசிய பேச்சுகள், குரல் பதிவுகள் வெட்ட வெளிச்சமாகியது. குழாயடிச் சண்டையை மேடை போட்டு ‘துப்பாக்கி வழங்குவேன்’ எனக்
குதித்த முன்னாள் தென்காசி இராணுவ வீரர், மன்னிப்புக் கேட்டு மன்றாடிக் கதறி அழுததும் நடந்தது. ஒவ்வொரு பெரிய வழிபாட்டுத் தலங்களிலும், அவினாசி, சென்னிமலை என பா.ச.க. போட்ட உரிமை
மீட்புக் கபடத்தன நாடகங்களும்
புஸ்வாணமாகியது.
மதுரை
திருப்பரங்குன்றத்தில்
‘மலை எங்களது’ என்ற வெற்றுவாதத்தை உயர் நீதிமன்றம் பொட்டில் அடித்து நிறுத்தியது. “திருப்பரங்குன்ற மக்கள் சகோதர-சகோதரிகளாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்தப் பிரிவினையும் இல்லை. அது சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி இல்லை” என
ஆணி அடித்துவிட்டது. மதுரை ஆதினம் பா.ச.க.
ஆதரவு பேச்சிலிருந்து, ஒரு படி மேலே சென்று ‘எனது உயிருக்கு ஆபத்து’ எனப் பரபரப்புக் கூட்டினார். சாதாரண கார் விபத்தைத் தன்னைக் கொல்ல சதி என்றார். தமிழ்நாடு காவல்துறை விபத்துக் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டது. ஆதினம் அமைதியானார். அதில் அதிக வேகமாகச் சென்றது ஆதினத்தின் கார் என அடையாளம் காணப்பட்டது.
இதுபோன்ற
பல குற்றச்சாட்டுகள் இனி அதிகமாகலாம். தமிழ்நாடு அரசு தன் புலனாய்வு அமைப்பு கள்வழி இவர்களைக் கண்காணிக்க வேண்டும். பொது அமைதிக்கு உத்தரவாதம் தர வேண்டும்.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால் பா.ச.க.
எந்த நேரத்திலும் புதிய வழியில் மதக்கலவரங்களை முன்னெடுக்கும் என்பது எச்சரிக்கை கூடிய அறிவிப்பு. சிறுபான்மை மக்கள் விழிப்பாக இருப்பதும், மத, இனக் கலவரங்களை அடையாளம்
காண்பதும், காவல் மற்றும் நீதிமன்றங்கள் வழி நியாயம் பெறுவதும் காலக் கட்டாயமாகும்.