“பாகிஸ்தானின் கற்பனைக்கு எட்டா வகையில் சரியான தண்டனையை வழங்கியுள்ளோம். இந்தியப் பெண்களின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூரை (திலகம்) அழித்தவர்களைத் தவிடு பொடியாக்கியுள்ளோம். பாரதத்தின் சேவகனாய் உங்கள் முன் நிற்கும் மோடி எனும் நான் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறேன். என் உள்ளம் குளிர்ந்துள்ளது. ஆனால், என் குருதியோ கொதிக்கிறது. இப்போது என் நரம்புகளில் ஓடுவது குருதியல்ல; தாய்மார்களின் திலகம். உலக நாடுகளும் நம் நாட்டின் எதிரிகளும் நம் பெண்களின் சிந்தூர்ப்பொடி, பீரங்கிப் பொடியாக மாறுகையில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பர்.”
‘பாகிஸ்தானுக்குச் சரியான பதிலடி கொடுத்த இந்தியா’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழில் (23.05.2025) வெளிவந்த பிரதமர் மோடியின் உரையின் ஒரு பகுதி; இது இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் அவர் ஆற்றிய உரை.
மோடியின்
வீரவுரை வெளியான நாளிதழின் ஒரு பக்கத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் திரு. செயராம் இரமேஷ் அவர்களின் எதிர்வினையையும் இங்குக் குறிப்பிடல் பொருத்தமாக இருக்கலாம். “இராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் ஆற்றிய உரை, திரைப்படங்களில் வரும் வெற்று வசனங்கள் (Filmi Dialogues). மோடியின்
உரையை வெறும் வீர வசனம் என்றும், சினிமாத்தனம் என்றும் குடிமக்களில் எவரும் எளிதில் விமர்சித்து விட முடியாது என்பதை அனைவரும் அறிவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல்
22-ஆம் நாள் பகல்காமில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடுமையானது; கண்டனத்திற்குரியது; இக்கோரத்தனமான வன்முறையை நடத்திய வன்முறையாளர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. தாக்குதலுக்குள்ளான நாடும், அதன் குடிமக்களும் துயரம் மட்டும் அடைவதில்லை. இவர்களின் சினமும் பழிதீர்க்கும் எண்ணமும் இயல்பானவை. கொல்லப்பட்ட மக்களின் உணர்வோடு ஒன்றிவிட்டதாகக் கருதப்படும் இந்தியப் பிரதமரின் கோப உரையில் நியாயம் இருக்கலாம்; ஆனால், இவ்வுரையைச் சினிமாத்தனமானது என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சி செயலாளரின் கருத்தை வெற்றுக் கருத்தாகக் கொள்ளமுடியுமா?
பகல்காமில்
நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின்போது, தனது அயல்நாட்டுப் பயணத்தைப் பாதியில் நிறுத்தித் தாயகம் திரும்பிய பிரதமர், தாக்குதலின் பின்விளைவை விவாதிக்கக்கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிரதமர், பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கும் இவர் ஆற்றிய உரையின்போது, எதிரிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவின் எதிர்ப்பு நடவடிக்கை இருக்கும் என்று பேசினார். தாக்குதலுக்கு உள்ளான நாட்டின் பிரதமர் காயப்பட்டுப் போவதில் வியப்பில்லை. ஆனால், செயராம் அவர்களின் கேள்விகளுக்கும் பிரதமர் பதில்தர கடமைப்பட்டுள்ளார்.
மோடி
அவர்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்ட கேட்டுக்கொண்ட நிலையில், மோடி அரசு மறுத்தது ஏன்? தானாகத் தன் கட்சியினரிடம் பேசும் மோடி, எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டத்தில் பங்கேற்க ஏன் மறுக்கிறார்? அது மட்டுமல்ல, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மோடி ஏன் மறுக்கிறார்?
பாகிஸ்தான்-இந்தியாவில் எழுந்த போர்ப் பதற்றத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீடு செய்து போர் நிறுத்தத்திற்கு உதவியதாகக் கூறிய கூற்றின் உண்மை நிலை பற்றி மோடி இதுவரை எதுவுமே பேசவில்லையே! ஏன்?
சனநாயக
அரசிற்கான தலையாய கடமைகளில் மக்களுக்குப் பதில் கூறவேண்டிய கடமையும் அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையும் உண்டு என்பர். அமெரிக்க அதிபரின் தலையீடு பற்றி இந்திய வெளியுறவுத் துறையும், பிரதமர் மோடியும் கருத்துரைக்கவில்லையே, ஏன்? அரசின் மௌனம் குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், தேசத்தையே அவமதிக்கும் செயலாகவும் தேசத் துரோகமாகவும் சித்தரிக்கப்படுகையில், பொதுவெளி விமர்சனங்களே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
சனநாயகம் தரும் பேச்சுரிமை, கருத்துரிமை, ஏன் நடைபெற வேண்டிய சமூக உரையாடல்களே இல்லை எனும் நிலை!
தீவிரவாதிகள்
நடத்திய கோர வன்முறைக்கு இந்தியா காட்டிய எதிர்வினையை எவரும் எதிர்க்கவில்லை; தீவிரவாதம் என்பது மிகப்பெரிய வன்முறை வடிவம் என்பதனையும், வன்முறை வன்முறையைத்தான் பிறப்பிக்கும் என்ற சிந்தனையில் நம்பிக்கையுடைய நாம், ஒரு நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் வகையில் நடத்தப்பெறும் அத்துமீறல்களை நாட்டுப்பற்று மிக்க எவரும் கேள்விக்குள்ளாக்காமலிருத்தல்
சரியன்று என்பதனை ஏற்றுக்கொள்வோம்.
ஆயினும்,
இரு நாடுகளிடையே நிலவிய போர்ச் சூழல் இருவேறு அரசுகளுக்கிடையிலான மோதலாக மட்டும் சித்தரித்தல் எப்போதும் சரியான பார்வையாக இருக்கமுடியாது. மேலும், போர் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும், மக்கள் சந்திக்கும் அழிவு பற்றியும் எவரும் கவலைப்படுவதில்லை. இந்தியா-பாகிஸ்தான் போர்ப்பதற்றத்தின்போதும், சிந்தூர் ஆப்ரேஷனின்போதும் பாகிஸ்தானின் எத்தனை தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கப்பட்டன? என்றும், எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்று அறிவிப்பதிலும் பெருமைகொள்ளும் இந்திய அரசு, பதிலடியாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் மக்கள் வாழும் பகுதியில் நடத்திய தாக்குதலையும், இத்தாக்குதலில் சந்தித்த இழப்புகளையும் உரத்துச் சொல்வதில்லை.
உருவாக்கப்பட்ட
இப்போர்ச்சூழலில், புத்தர் தோன்றிய இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் ‘போர் வேண்டாம்’
என்ற குரல் எழவே இல்லை. இந்தியாவில் போர்க்குரலை, பாகிஸ்தான் மீதான பதிலடியை ஆதரிப்போர்தான் அதிகம். மக்கள் விரும்புகின்றனரோ என்னவோ, இந்திய அரசு முன்னெடுக்கும் போரை ஆதரித்தாக வேண்டிய கட்டாயம். துளியளவு எதிர்க்குரல் அல்லது விமர்சனம் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆள்வோர் நடவடிக்கை உள்ளது. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பொதுவெளிகள், குடிமைச் சமூகங்களில் எங்கும் ஒரே அமைதி; போருக்கு எதிரான குரல்கூட வேண்டாம்; கண்முன்னே நடக்கும் போர் நிகழ்வுகளை விமர்சிக்கும் சனநாயக உரிமைக்குக்கூட இடமில்லை.
அசோகா
பல்கலைக்கழகப் பேராசிரியரின் கருத்துரிமை பறிக்கப்பட்டு சிறையிலுள்ளார். சமூக வலைத்தளங்களில் பலர் குறிவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அமெரிக்க அதிபரின் மத்தியஸ்தத்தைக் கேள்விக்குள்ளாக்கிய இராகுல் காந்தி பொறுப்பற்றவராக, பாகிஸ்தானின் நண்பராகச் சித்தரிக்கப்படுகிறார். ‘சிந்தூர் ஆப்ரேஷன் போது, இந்தியா இழந்த போர் விமானங்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்ட காங்கிரஸ் தலைவரின் நியாயமான கேள்விக்குப் பதில் இல்லை.
மானுடத்தின்
அமைதியை விரும்பும் மனிதர் எவரும் போரை அனுமதிக்கமாட்டார்; விரும்பவும் மாட்டார் என்பதே பொதுவிதியாயிருக்க, போரை மறுப்போரை, வேண்டாம் என்போரை வெறுப்போடு பார்க்கவும் பகைக்கவும் வேண்டிய நிலை ஏன்? இங்குப் போரை வேண்டாம் என்போர் தேசநலனை அடகுவைப்போராகச் சித்தரிக்கப்படுகின்றனர்; சிறைவைக்கப்படுகின்றனர். ஐதராபாத்தைச் சார்ந்த மென்பொறியாளரான இளம்பெண் இவ்வாறு கூறியதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வந்த செய்தி இது. “போருக்கான உச்சம் நிறுத்தப்பெற வேண்டும்’
என்று கூறியதாலேயே அவரை மணமுடிக்க மறுத்தேன். இப்பேச்சு அம்மனிதனின் குணத்தில் வெளிப்படும் பலவீனத்தையே காட்டுகிறது.” இப்பெண்ணின் பெயர் ரீட்டா சின்ஹா (‘தி இந்து’ - ஞாயிறு மலர் மே. 18, 2025). உருவாக்கப்பட்டுள்ள போர்ச்சூழல் இரத்த வெறியையும், சண்டைக்கான உணர்வையும் கட்டாயப்படுத்தி விடுவதால் பகுத்தறிவு மழுங்கடிக்கப்படுகிறது.
மக்கள்
இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருந்ததி துரு அவர்களின் இன்றைய போர்ச்சூழல் உருவாக்கியுள்ள நிலை முக்கியமாகும். இவர் ஏற்கெனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளின் போக்கினையும், பொக்ரான் அணுகுண்டு பரிசோதனைக்குப்பின் இருநாட்டு மக்களையும் ஒருங்கிணைத்து உரையாடலுக்கு ஏற்பாடு செய்து வெற்றிகண்டவர், \"பகல்காமில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலின்போது இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி நமது பொதுவெளியில் விவாதப் பொருளாகாதது வியப்பளிக்கிறது என்றும், இன்று உரையாடலுக்கான வெளி (Space) சுருங்கி
வருதலைக் கவலையோடு வெளிப்படுத்துகிறார். இன்றும் உரையாடலுக்கான வாய்ப்பு இருநாடுகளிலும் உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் எவரேனும் உறவு பற்றியும், உரையாடல் பற்றியும் பரிந்துரைத்தால் உயிரோடு கொல்லப்படுவர் என்றும் எச்சரிக்கை செய்கிறார். தலைநகரில் செயல்படும் தெற்காசிய ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் இரவி நாயர் அவர்களின் கூற்றும் இங்குக் கவனிக்க வேண்டுவதாகும்: “போருக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைக் கட்டமைத்த நிலையிலும், இப்போக்கை எதிர்க்கும் துணிவு என்பது கோழைத்தனமல்ல; அமைதிக்கான நிலைப்பாட்டிற்கு நெஞ்சில் உரம் தேவை. இதுதான் நம் மக்களின் முதன்மைத் தெரிவாக (Choice) இருக்கவேண்டும்” (‘தி
இந்து’18-05-2025). இன்று
எழுப்பப்பட்டு வரும் போருக்கான உச்சக் குரலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
பாகிஸ்தான்
தூண்டுதலில் தீவிரவாதிகள் நடத்திய வன்முறையில் இந்தியப் பயணிகள் உயிர் துறந்த நிலையில், இறந்தோரில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் இஸ்லாமியர் அல்லாத ஆண்கள். இந்திய அரசியல் குறிப்பிட்ட மதத்தினரை எதிரிகளாகக் கட்டமைத்து வரப்பட்ட நிலையில், வன்முறையாளர்கள் இசுலாமியத் தீவிரவாதிகளாகவே இருக்க, இவர்கள் இசுலாத்தின் பாகிஸ்தான் அரசால் தூண்டப்பட்ட தீவிரவாதிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற திட்டவட்ட வாதமும் வெற்றி பெறுகிறது.
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது “இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் இந்துப் பெண்களின் தாலிகள் பறிபோய்விடும்” என்ற
பிரச்சாரத்தை மேற்கொண்டவர் பிரதமர் மோடி. ஆனால், தற்போது வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பது பா.ச.க.
இத்தகைய தாக்குதலின் பின்னணியில் ஆண்கள் மட்டுமே உயிரிழக்க, அவர்கள் மனைவியர் சிந்தூரை இழந்து நிற்பதாகக் கூறி ‘ஆப்ரேசன் சிந்தூர்’
நடத்துவதன் பின்னணியைப் புரிந்துகொள்வதில் சாமானியருக்குக் குழப்பம் நீடிக்கிறது. கொல்லப்பட்ட ஆண்களின் இணையர் அனைவரும் சிந்தூரை இழக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கம் பயங்கரவாதிகளுக்கு எழவேண்டிய நோக்கத்தின் அவசியமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மேலும்,
இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஓர் அடையாளமாகக் கருதப்படும் சிந்தூரைக் கையிலெடுத்து, அது அரசியல் கருவியாக்கப்படுவதன் சூழ்ச்சியையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியமாகிறது. தேவிகா எனும் கல்வியாளர் சிந்தூரின் நோக்கம் பற்றிப் பேசுகிறபோது “ஆப்ரேசன் சிந்தூரின்போது மக்கள் மனத்தில் ஆழமான கோபத்தை உருவாக்கியதோடு மற்றொரு கோணத்தில் பார்க்கின்றபோது, பெண்கள் என்றுமே ஆண்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் என்ற கருத்தையும், நியாயப்படுத்தவே உதவுகிறது.” கணவரைக் கொல்லுதல் என்பது மனைவியின் காப்பாளரைக் கொல்லுதல் என்று அர்த்தமாகும். எப்போதுமே அடையாளத்தை வைத்து அரசியல் செய்யும் வல்லமை மிக்க இன்றைய அரசு, சிந்தூர் எனும் அடையாளத்தைக் கையில் எடுத்து உணர்ச்சிகளில் அரசியல் செய்வதில் வியப்பொன்றுமில்லை.
பாகிஸ்தான்
என்னும் பகை நாடு, எல்லை தாண்டி தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வன்முறை யில் ஈடுபடுமானால் எதிர்க்க வேண்டுவதும், ஒடுக்க வேண்டுவதும் அவசியமே. ஆனால், இன்றைய ஒன்றிய அரசின் முஸ்லிம் எதிர்ப்புப் பாகிஸ்தான் எதிர்ப்பின் ஓர் அம்சமாக மாறிவிடக்கூடாது. இந்தியாவின் சிவில் உரிமைக் காப்பமைப்பின் அண்மை அறிக்கையின்படி, பகல்காம் தாக்குதலுக்குப் பின்பு ஏப்ரல் 22-லிருந்து மே மாதம் எட்டாம்
நாள் வரை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை 184 எனவும், இவ்வெண்ணிக்கையுள் 106 தாக்குதல்கள் பகல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையென்றே அறிக்கை கூறுகிறது.
பகல்காமில்
தீவிரவாதத்திற்கு இரையானவர்கள் நம் கவனத்துக்குரியவர்கள். இந்நிகழ்வு எப்போதும் நடக்கக்கூடாது என்பதும் நம் கருத்தே எனினும், இரு தேசங்களிடையே எழும் பூசல்களுக்கும் பகைக்கும் வன்மத்திற்கும் போர் மூலமே பதில்
தேட முடியும் என்று கட்டமைக்கப்படும் கருத்தியலையும், அதன் பாரதூர விளைவுகளையும் உரியவர்க்கு எடுத்துச்செல்லும் பணியைச் செய்யப் போவது யார்?