news-details
சிறப்புக்கட்டுரை
இதயத்தின் மொழி பேசு!

இதயத்தின் மொழிகள் புரிந்துவிட்டால் மனிதருக்கு மொழிகள் தேவையில்லை. மனிதர்கள் வாய் வழியாக எத்தனையோ பேசி மகிழ்கின்றனர். இருந்தாலும், இதயம் கூறுவது என்ன? என்பது வாய்வழிச் செய்தியாய் வெளிவருவதில்லை. மனத்தில் எத்தனையோ வஞ்சகம், பொறாமைக் குணங்கள் மறைந்திருக்கின்றன. இதயத்தின் மொழி புரிந்தால் மட்டுமே மனிதம் தழைக்கும். இதயத்திற்கு என என்ன தனிமொழி இருக்கிறது? இதயத்தின் மொழி அன்பு மட்டுமே. இந்த அன்பின் மொழி பேசும் மனநிலையில் உட்புகுவோம்.

தாய் மகனை நோக்கிமகனே, நீ படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும்என்று எப்போதும் அறிவுரை கூறுவார். மகனோ படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தான். தாய்க்கு இது தெரியாது. தாய்க்காகப் படித்தான். அவனுடைய திறமைகளை வளர்க்க எண்ணும்போதெல்லாம் தாய், ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்எனத் திட்டினார். மகனும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினான். பாவம், தான் படும்பாட்டைத் தன் மகனும் படக்கூடாது என எண்ணினார் தாய். இது மகனுக்குப் புரியவில்லை. நன்கு படித்தான். முதல் மாணவனாகத் திகழ்ந்தான். நல்ல வேலைக்குச் சென்றான். தாயைத் தனிமையில் விட்டுவிட்டான். தாயைக் குடைச்சல் கொடுக்கும் நபராகப் பார்க்க ஆரம்பித்தான். தாய் அன்பிற்காக ஏங்கினார். மகனைக் காணத் தவித்தார். ஆனால், அவனோ தாயிடம் தேவைக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் வேலையிலேயே கவனமாக இருந்தான். தாய்க்குப் புரிந்தது. மகனை மரக்கட்டையாய் வளர்த்ததை நினைத்து வருந்தினார். மகன் தாயின் அன்பைப் புரிந்துகொள்ளவில்லை. தாய் மகனின் ஆசைகளைப் புரிந்துகொள்ளவில்லை.

இதயத்தின் மொழிகள் சரியாகப் புரியப்படவில்லை என்றால், உறவுகளில் சிக்கல் உண்டாகும். உலகில் எல்லாருக்கும் இதயத்தைப் புரிந்து பழகும் தன்மை வந்துவிட்டால், எவ்வளவோ சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். தலைவர்கள் தொண்டர்களாக இருக்க வேண்டும் என்னும் ஆசை நிறைவேறினால், மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். ஆசிரியர்கள் நல்ல பெற்றோராகத் திகழவேண்டும் என்னும் மாணவர்களின் ஆசை நிறைவேறினால், சமூக அக்கறையுள்ள மனிதர்கள் உருவாவார்கள். பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் புரிந்துகொண்டால் உலகமே அன்பென்னும் இதயத்தின் மொழியைப் பேச ஆரம்பிக்கும். அன்பே அனைத்துமானால் காவலுக்கும் கண்டிக்கவும் யாரும் தேவையில்லை.

அன்பு இன்று வெளிவேடங்களால் நம்பப்படுகிறது. அன்பின் மொழி இதயம் சார்ந்தது. வெளிவேடங்கள் இடம், பொருள், வசதி ஆகியவற்றைப் பார்த்து வரும் அன்பு ஆகும். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அன்பை யாரும் அழிக்க முடியாது. அன்பு வெளிக்காட்டப்படும் விதம் வெவ்வேறு வழிகளில் அமைந்தாலும், அன்பு உண்மையானது. அதனைப் புரியாதவருக்கு இதயத்தின் மொழி புரியவில்லை என்பது பொருளாகும். இதயம் பேசும் மொழிக்குப் பெரும் சத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உண்டாக்கும் பாதிப்பு என்பது ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு பாதிப்பைவிட அதிகமாக இருக்கும். அன்பில் தோல்விக்கு இடமே இல்லை. அன்பு தோல்வியில் தற்கொலை செய்வது என்பது கோழைத்தனம். ஆம், தற்கொலைக்குத் தைரியம் வேண்டும். எனினும், அது பெரிய கோழைத்தனம். முதலில் தற்கொலை தன்மீது கொண்டுள்ள அன்பைக் கொலை செய்கிறது. பின்னர் நம்மீது அன்பு கொண்டுள்ளவர்களின் உள்ளத்தைச் சாகடிக்கிறது. “தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்எனும் இயேசுவின் அன்புக் கட்டளை இங்குப் பொருந்தும்.

அன்பு ஒரு தீ போன்றது. தீ எப்படித் தன்னில் விழும் அனைத்தையும் எரித்து ஒரே சாம்பல் ஆக்குகிறதோ அதுபோல அன்புத் தீ தன்னில் விழும் அனைவரையும் ஒன்றென இணைக்கிறது. இது இதயத்தில் இடைவிடாமல் எரிந்து பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதைப் புரியாமல் ஏதேதோ காரணங்களால் இதயத்திற்குப் புறம்பாகச் செயல்படும் சூழல் உருவாகிவிடுகிறது. நாமும் சூழ்நிலைக் கைதியாக மாறிவிடுகிறோம். இதயத்தின் மொழிகளைப் புரிந்து செயல்படுவோம். மனிதரின் இதய மொழிகளை மதித்திடுவோம். மனிதத்தை வளர்த்திட முன்வருவோம்.…