news-details
ஞாயிறு மறையுரை
ஜூன் 22, 2025, கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் (மூன்றாம் ஆண்டு) தொநூ 14:18-20; 1கொரி 11:23-26; லூக் 9:11-17 - இயேசுவின் உயிரில் கலந்த உறவாக...!

மிகுந்த அறிவும் நிறைந்த ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கொண்ட அந்தத் தெய்வக் குழந்தை 03-05-1991 அன்று தம்பதியர் ஆன்றோனியோ - ஆண்ட்ரியா குட்டி ஆகியோருக்கு இலண்டனில் பிறந்தது. அக்குழந்தையும் அதன் பெற்றோரும் இத்தாலியின் மிலான் நகருக்குப் புலம்பெயர்ந்தனர். வடக்கு இத்தாலியின் மிலான் நகரில் தனது பள்ளிப்பருவத்தையும் இளமைப் பருவத்தையும் அனுபவித்த அந்தச் சிறுவன் கால்பந்து, வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தான். எப்போதும் புன்னகையுடன் காணப்படும் அந்தச் சிறுவன் தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் மகிழ்வித்து வாழ்ந்தான். அந்தச் சிறுவனுக்கு 11 வயது நடந்தபோது, வரலாற்றில் நடைபெற்றுள்ள திருநற்கருணை புதுமைகள் பற்றி ஆராயத் தொடங்கினான். தனது இந்த ஆர்வத்தை, பக்தியை எல்லாரும் அறிந்துகொள்ளும் பொருட்டுக் கணினியில் தானே ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கி, அதில் உலகின் பல்வேறு இடங்களிலும் நற்கருணை வழியாக நடைபெற்ற அனைத்து அற்புதங்களையும் பதிவிட்டான். உலக அளவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பங்குத்தளங்களைப் பார்ப்பதற்கு அச்சிறுவன் உதவினான்.

தன் வாழ்வில் மூன்று முறைகள் மட்டுமே திருப்பலியில் பங்குகொண்டிருந்த அச்சிறுவனின் தாய், தனது மகன் இயேசுவின்மீது கொண்டிருந்த பேரன்பினால் மனமாற்றம் அடைந்து, தினமும் நற்கருணை பெற ஆரம்பித்தார். நற்கருணைமீது அளவற்ற பக்தி கொண்டிருந்த தனது மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டும் என்ற ஆர்வத்தால், இறையியல் படிப்பையும் தொடர்ந்தார். பங்குப் பணிகளிலும் ஆலயப் பணிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்த அந்தச் சிறுவன் 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று எலும்புமஜ்ஜை இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்தான். அந்தச் சிறுவன்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2018, ஜூலை 5-ஆம் நாள் இறைஊழியராகவும், 2020, அக்டோபர் 10 அன்று அசிசி நகரில் அருளாளராகவும் உயர்த்தப்பட்ட அருளாளர் கார்லோ அகுதீஸ். மில்லென்னியத் தலைமுறையைச் சார்ந்த இந்தச் சிறுவன் இந்த நூற்றாண்டின் இளம் புனிதராக விரைவில் உயர்த்தப்பட இருக்கின்றார்.

நற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் உடனிருப்புதான் நம் வாழ்வை வளமாக்கும்என்பார் புனித பெர்னாந்து. நற்கருணையே கிறிஸ்துவின் உயிரளிக்கும் உடனிருப்பு; அவரது உயரிய அன்பின் வெளிப்பாடு; நம் ஆன்ம உணவு; திரு அவையை ஒன்றிக்கும் வழிபாடு; ஒப்புயர்வற்ற அருளடையாளம். இறை உறவில் நாம் ஆழப்படவும், ஆழமான பொருள்கொண்ட கிறித்தவ வாழ்வியலில் நிலைபெறவும் அன்றாடம் நமக்கு வழிகாட்டுகிறது நற்கருணை. நற்கருணை இயேசுவைச் சந்திக்க அழைக்கிறது; அவரது இறையாற்றலைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறது; நாம் திறம்பட மானுட விடுதலைப் பணியாற்ற உறுதி தருகிறது. சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நற்கருணை அன்பின் அருளடையாளம்; நற்செயல்களின் உறைவிடம்.” இந்த நற்கருணையே நமது வாழ்வின் அடித்தளம்; மையம்; ஊற்று; உச்சம்... எல்லாம் (திருவழிபாடு, எண். 10).

இன்று நமது வாழ்வின் அடித்தளமாக விளங்கும் தூய்மைமிகு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பெருவிழாவானது 1246-ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பனால் திரு அவை முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. ‘இயேசுவின் உயிரில் கலந்த உறவாகவாழ நம்மை அழைக்கும் நற்கருணைஉணவு - உறவு - உயர்வுஎனும் மூன்று படிநிலைகளில் நம் வாழ்வியல் கூறுகளாகப் பரிணமிக்கின்றன.

மனிதன் உயிர்வாழ மிகவும் தேவையான அடிப்படைக் கூறுகளில் ஒன்று உணவு. இந்த உணவைத் தாயின் கருவிலிருந்தே நாம் ஒவ்வொருவரும் உண்ணப் பழகிவிட்டோம். ஒரு தாய் உண்ணும் அனைத்து உணவுகளும் தாயின் இரத்தத்தோடு கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரத்தநாளங்கள் வழியாக உணவாக மாறுகின்றன. இத்தகைய அடிப்படைத் தேவையான உணவை அடையாளமாக எடுத்துக்கொண்டார் இயேசு. இந்த எளிய வடிவமான அப்பத்தையும் இரசத்தையும் நாம் தினமும் உணவாக உண்ணும்போது, அவர் நம் உடலாகவே மாறி, நம் உயிருக்குள் ஒன்றாகி, இணைபிரியாமல் நாள்தோறும் நம்முள் வாழ்கிறார். எனவே, கண்ணுக்கெட்டாத கடவுளை நம் கண்ணெதிரில் உணரச்செய்வது இந்த நற்கருணை உணவே. நாம் உட்கொள்ளும் நற்கருணை உணவு உறவின் அடையாளமாக அமைகிறது. எனவேதான், தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு கூறுகிறார்: “நற்கருணையின்றிக் கிறித்தவ உறவுகள் இல்லை.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நற்கருணை எவ்வாறு உறவை வளர்க்கும் தெய்வீக உணவு என்பதை விளக்குகிறார் தூய பவுல். பவுலின் காலத்தில் கிறித்தவர்கள் திருவிருந்துக் கொண்டாட்டத்திற்கு வசதியுடைய கிறித்தவர்களின் பெரிய வீடுகளில் கூடிவந்தனர். ஏனெனில், அப்போது கோவில்கள் எங்கும் கட்டப்படவில்லை. எனவே, வழிபாட்டிற்காக வீடுகளில் கூடிவந்த நம்பிக்கையாளர்கள் எல்லாரும் சேர்ந்து வரும்வரை திருப்பாடல்கள் பாடி, பின்பு உணவுகளைப் பிறரோடு பகிர்ந்து உணவருந்திய பின், அப்பத்தையும் இரசத்தையும் அர்ச்சித்துத் திருவிருந்து கொண்டாடினர்.

இயேசு அப்பத்தைக் கையில் எடுத்தது அவர் மட்டும் உண்பதற்காக அல்ல; மாறாக, அதைப் பிட்டு எல்லாருக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காகவே என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், சில நேரங்களில் அடிமைநிலையில் இருந்த கிறித்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்துசேர இயலாமல் போகவே, காத்திருக்க மனமில்லா வசதி படைத்தோர் உணவை யாரோடும் பகிர்ந்துகொள்ளாது தனித்தனியே உண்ண ஆரம்பித்தனர். இதனால், ஏழையர் பலர் பசியோடு திருவிருந்தில் பங்குகொண்டனர். இந்தப் பின்னணியில்தான் பவுல், இயேசு தாம் துன்புறுத்தப்படுவதற்கு முந்தின நாள் இரவு நற்கருணை ஏற்படுத்திய நிகழ்வை இங்குக் குறிப்பிடுகிறார்.

நாம் ஒன்றாகக் கூடும்போது நாம் அனைவரும் இயேசுவின் ஒரே உடல் என்ற உணர்வில் பிளவுகளையும் பிரிவுகளையும் அகற்றி, ஒரே மனமும் நோக்கமும் கொண்டிருப்பதும், அர்ச்சிக்கப்பட்ட அப்பத்திலும் இரசத்திலும் ஆண்டவரின் உண்மைப் பிரசன்னத்தை உணர்வதும் அவசியம் என வலியுறுத்துகிறார் (1கொரி 11:17-34). “நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் (12:27) எனும் புனித பவுலின் கூற்றைப் பற்றிப் பேசிய புனித அகுஸ்தின், “ஒற்றுமையின் மறைபொருளான கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளும் யாவரும் அது போதிக்கும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் காத்துக்கொள்ளவில்லையெனில் அந்த மறையுடலுக்கு எதிர்ச்சான்று பகர்கிறார்என்கிறார். எனவே, நற்கருணை உட்கொள்ளும் நாம் சகோதர அன்பில் நிலைத்திருந்து உறவை வளர்ப்பது இன்றியமையாததாகிறது. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும்நற்கருணை அன்புறவை வளர்க்கும் திருவிருந்துஎன்ற உண்மையை ஆழமாக எடுத்துரைக்கின்றது (திருச்சபை எண். 7).  “மனிதகுலத்தில் அனைவரையும் ஒருவரோடு ஒருவர் இணைக்கும் சங்கிலித் தொடர் நற்கருணைஎனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ், நற்கருணை வழியே, இயேசு நம்மை நெருங்கிவரும் வேளையில், நாம் அடுத்தவரை விட்டு விலகிச் செல்லாமல் வாழவேண்டும் என்கிறார் (மறையுரை, 14.06.2020).

நிறைவாக, இயேசுவின் திருவுடலை உண்ணும் நாம் திருநற்கருணையாக மாறுவதற்கு அழைக்கப்படுகிறோம். புனித பெரிய லியோ கூறுவதுபோலகிறிஸ்துவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் பங்குபெறுவது என்பது, நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே நம்மை மாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை.” ஆகவேதான், தூய பவுல், “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலா 2:20) என்கிறார். எனவே, நாம் சுயநலத்தைக் கடந்து அன்பை நோக்கித் திறந்த மனம் கொள்ளும்போது, உடன்பிறந்த உறவுக்கான பிணைப்பை வளர்க்கும்போது, நம் சகோதரர்-சகோதரிகளின் துன்ப துயரங்களில் பங்குகொள்ளும்போது, நம் உணவையும் வளங்களையும் தேவையில் இருப்போருடன் பகிர்ந்துகொள்ளும்போது, நாமும் இயேசுவைப்போல நம் வாழ்வின் அப்பத்தைப் பிடுகிறோம். இயேசுவை உட்கொள்வதால் நாம் இயேசுவாகவே மாறுகிறோம்; நமது வாழ்வு உன்னதமாகிறது; மேன்மையடைகிறது; உயர்வடைகிறது.

புனித மாக்சிமிலியன் கோல்பே உரைப்பதுபோல, “தேவதைகள் மனிதரைப் பார்த்துப் பொறாமைப்பட முடிந்தால், அவர்கள் ஒரு காரணத்திற்காக மட்டுமே பொறாமைப்படுவார்கள்; நற்கருணைக்காக.” ஆம், நற்கருணை அத்தகைய மகத்துவம் கொண்ட மறைபொருள்எனவே, இனி நமக்கென்று வாழாமல், கிறிஸ்துவின் வழியில் நமது வாழ்வைப் பிறருக்கு ஒரு கொடையாக வழங்குவோம் (உரோ 14:7). தம் உடலின் ஒவ்வோர் அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மற்றவர்களுக்காகப் பிடப்பட்ட அப்பமாக மாறுவோம்; நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மையே நாம் காணிக்கையாக அர்ப்பணிப்போம். நம்மிடம் என்ன இருக்கிறதோ மற்றும் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். நாள்தோறும் நம் இதயம் நுழையும் இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும் நம் உயிரில் கலந்து, அவரது உயிரிலும் உறவிலும் நம்மை நிலைநிறுத்தட்டும்.