இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே,
• உலக மாந்தர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதையும், நமக்குள் சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்த உறவும் ஒன்றிப்பும் தேவை என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனவே, மாண்பு, சமத்துவம், அன்பு, நீதி, பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதகுலத்தின் ஒன்றிப்பை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
• அண்மையில் இறைவனில் இணைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021-இல் தொடங்கிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் வழியாகவும் யூபிலி 2025 கொண்டாட்டத்தின் மூலமாகவும் உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் ‘கூட்டியக்கத் திரு அவை’ என்ற ஒப்பற்ற சிந்தனையை நமக்குத் தந்து சென்றிருக்கிறார்.
நற்செய்திப் பார்வை
• உலகப் படைப்பின்போது கடவுள் இவ்வுலகைப் பேணிக்காக்க மனிதரை ஒரு சமூகமாகப் படைத்தார்
என்பதையும், மோசே வழியாக ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு அவர்களை இறைமக்களின் கூட்டமாக ஒருங்கிணைத்தார் என்பதையும் தொடக்க நூலிலும் விடுதலைப் பயண நூலிலும் நாம் வாசிக்கிறோம்.
• இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது தாம் தனியாளாக அல்ல; தந்தையுடனும் தூய ஆவியாருடனும் இணைந்தே செயல்படுவதை மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். இதிலிருந்து ‘மூவொரு இறைவன் ஒரு கூட்டியக்கமாகச் செயல்படுகின்றார்’ என்பதை
நாம் உணர்ந்து கொள்கிறோம் (யோவா 14).
• தாம் தேர்ந்துகொண்ட சீடர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இறைமகன் இயேசு மன்றாடுகிறார் (யோவா 17:21).
• லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை ஒரு திருப்பயணியாகக் காட்டுகிறார் (9:5). இயேசுவும் தம்மை ‘வழியும் உண்மையும் வாழ்வும்’
என்று உருவகப்படுத்துகிறார் (யோவா 14:6). எனவே, திருப்பயணியாக இருக்கும் திரு அவையும் ஒரு திருப்பயணத் திரு அவையாக உலக மக்களுக்கு நிறைவாழ்வு அளிக்கக் (யோவா 10:10) கடமைப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான்
சங்கம்
• தொடக்கம் முதலே திரு அவை ஒரு கூட்டியக்கமாகச் செயல்பட்டது என்பதற்கான சான்றுகளைத் திருத்தூதர் பணிகள் நூலின் 1,2,4,6,15-ஆம் அதிகாரங்களில் காண்கிறோம். காலப்போக்கில் திரு அவையில் ‘திருநிலையினர் மையம்’ என்பது உருவாகி நீண்ட காலம் நிலைத்தது. 20-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-65) ‘உலகோடு உறவாடும் திரு அவை’ என்ற ஒரு மாற்றுச்சிந்தனையை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
• “துன்புறும் எளியவரின்
ஏக்கமும் கவலையுமே திரு அவையின் ஏக்கமும் கவலையுமாகும். கிறிஸ்துவின்
பெயரைக் கூவியழைக்கும் அனைவரையும் மட்டுமின்றி, உலக மாந்தர் எல்லாரையும் அழைத்துப் பேச (திரு அவை) தயங்காது முன்வருகிறது” (இன்றைய
உலகில் திரு அவை எண் 1 மற்றும் 2) என்று சங்கம் தன் பார்வையைத் தெளிவுபடுத்தியது.
• ஒவ்வொரு மனிதரும் தமக்கு அடுத்திருப்பவரைத் தம் ‘மறு உருவாக’ கருதி மதிப்பளிக்க வேண்டும் என்பது இன்றைய உலகில் திரு அவை ஏட்டின் எண் 23 முதல் 32 வரை இழையோடும் மிகவும் அடிப்படையான வழிகாட்டுதல் ஆகும். 1983-இல் வெளிவந்த திரு அவைச் சட்டத் தொகுப்பும் ‘இறைமக்களுக்கு இடையே சம மாண்பும் மதிப்பும்
உண்டு’ (எண்
208) என்பதை நிறுவியது.
ஆயர் மாமன்றம்
• திருத்தந்தை பிரான்சிஸ் 2021, அக்டோபர் 17 அன்று உலக ஆயர்கள் மாமன்றத்தைத் தொடங்கி வைத்தார். திரு அவை ஓர் இயக்கமாகச் செயல்பட ‘ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்பு’
என்ற இலக்கை நிர்ணயித்தார். 2024-இல் நிறைவுபெற்ற ஆயர்கள் மாமன்றம் ‘கூட்டியக்கத் திரு
அவை’ என்ற ஆய்வுப்பொருளை அலசி ஆராய்ந்தது.
• இந்த ஆயர்கள் மாமன்றம் இதுவரை நடைபெற்ற மாமன்றங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. ஏனென்றால், இந்த மாமன்றத்தில் கருத்துகள் அனைத்தும் கீழிருந்து மேல்நோக்கிச் சென்றன. அதுவும் தயாரிப்புக் கலந்துரையாடல்களில் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் முக்கியத்துவம் பெற்று முன்னிறுத்தப்பட்டது.
யூபிலி 2025
• 1300-களில் 100 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என்றிருந்த யூபிலிக் கொண்டாட்டம், 1470-இல் திருத்தந்தை 2-ஆம் பவுல் காலத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை என நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.
• இந்த யூபிலி ஆண்டுக்காக (2025) ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
இலக்குச் சிந்தனையில் “எதிர்நோக்கு ஏமாற்றம் தராது”
(உரோ 5:9) என்ற ஓர் அறிவிப்பு ஆணை மடலைத் திருத்தந்தை பிரான்சிஸ் 2024, மே 9-இல் வெளியிட்டார்.
• அதில் ‘ஒன்றிணைத்து - நற்செய்திப் பணியாற்றி - பங்களித்து - கூட்டொருங்கியக்கப் பயணம்’ மேற்கொள்ள
நம் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ‘உள்வாங்கி, நிகழும் தருணத்தில் வாழ்ந்து, வருங்காலத்தை நிர்ணயிக்க’ நம்மைத்
தூண்டுகிறார்.
• எதிர்நோக்கின் அடையாளங்கள் ‘இணைந்து பயணிக்கும் திரு அவை’ என்பதை மையப்படுத்தி, எதிர்நோக்கின் அடையாளங்களைத் திருத்தந்தை வரையறை செய்துள்ளார்.
• குழந்தைகள் (எண்-9), கைதிகள் (10), நோயுற்றோர் (11), இளையோர் (12), புலம்பெயர்ந்தோர் (13), முதியோர் (14), வறியோர் (15) போன்ற அனைவருமே எதிர்நோக்கின் அடையாளங்கள் என்று தனது அறிவிப்பு ஆணை மடலில் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
• அத்துடன் அன்பிலும் (3), குடும்பங்களிலும் (4), காலத்தின் அறிகுறிகளிலும் (7), மன்னிப்பு மற்றும் ஒப்புரவு அடையாளத்திலும் (10), பசியிலும் (16), வளங்கள் அனைவருக்கும் உரியன என்பதிலும், எதிர்நோக்கைக் கண்டுணரவும், செல்வச் செழிப்புள்ள நாடுகள் ஏழை நாடுகளின் கடன்களை மன்னிக்கவும், போர்ச் சீரழிவுகளை ஒழிக்கவும் திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.
நிறைவாக...
• “எதிர்நோக்கின் மேன்மையான
சான்றாகக் கடவுளின் அன்னை திகழ்கிறார். எதிர்நோக்கையும், கடவுள்மீது கொண்டிருந்த பற்றுறுதியையும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை. ஆழ்துயரில் மரியா நம் அன்னையாகவும், எதிர்நோக்கின் அன்னையாகவும் மாறுகிறார்” என்று
திருத்தந்தை தனது மடலில் (எண்-24) நமக்கான நம்பிக்கையை அடையாளம் காட்டுகிறார்.
• நமது கூட்டியக்கப் பயணித்தலின் அடித்தளமாக இறைவார்த்தையும், அடிநாதமாக நற்கருணையும் இருக்கின்றன. இவை நம் நம்பிக்கைப் பாதையை ஒளிர்வித்து, நம்மைக் கிறிஸ்துவின் ஒரே உடலாக மாற்றுகின்றன.
• “ஒரே உள்ளத்தினராய்
இணைந்தால்தான் நாம் இறைவனை நோக்கிப் பயணம் செய்ய இயலும்” என்று புனித அகுஸ்தின் கூறியதை நினைவில் கொள்வோம்.
திருத்தந்தை
பிரான்சிஸ் மற்றும் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ ஆகியோரின் அழைப்பை ஏற்று, கூட்டியியக்கத் திரு அவையாக - இணைந்து பயணிக்கும் இயக்கமாக நாம் செயல்பட்டு, திரு அவைக்குப் புத்துயிர் ஊட்டுவோம்!
அருள்பணி. மரிய
மிக்கேல், செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு
மேதகு பேராயர்
அந்தோனி
பாப்புசாமி, தலைவர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு