‘மனிதன் ஓர் அரசியல் பிராணி’ என்று கூறுவார் கிரேக்கத் தத்துவயியல் ஞானி அரிஸ்டாட்டில். ஆனால், அரசியல் தேவையா? ‘அரசியலில் நம்மால் என்ன செய்ய இயலும்? அரசியல் ஒரு சாக்கடை. அதில் என்னைப் புதைத்துக்கொள்ள வேண்டுமா?’ என்ற கேள்விகள் கிறித்தவ மக்களிடையே ஒருபுறம் எழுவது உண்டு. அப்படியென்றால், மனிதருக்கு அரசியல் தேவையில்லையா? கிரேக்கத் தத்துவ ஞானி தன் வார்த்தைகளின் அர்த்தத்தைச் சற்று அழுத்தி உச்சரிக்கையில், “அரசியல் வேண்டாம். சமூகம் வேண்டாம் என்பவர் கடவுளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மிருகமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
மனிதர்
தன்னிச்சையாகச் செயல்படும் பிராணி அல்லர்; பிறரைச் சார்ந்து வாழக்கூடியவர். ஒரு சமூகத்தைச் சார்ந்து வாழக்கூடியவர். ஆக, அரசியல் வேண்டாம், அரசியல் ஒரு பாவம் என்ற கருத்துகளைத் தன்னுள்ளே திணித்து வாழ்வது அறியாமையின் உச்சம் ஆகும். இந்தச் சமூகத்தில் அரசியல் யாருக்கும் ஒரு விருப்பத்தேர்வாகக் கொடுக்கப்படவில்லை.
அரசியல்
பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அரசியல்-தொண்டு பணியின் உயர்ந்த நிலை” என்று பதிவு செய்கிறார். இளைஞர்களிடம் “அரசியல் சாக்கடை அல்ல, புனிதமான பணி, இளைஞர் இயேசுவின் பணி” என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இயேசு மண்ணுலகில் அரசராக, தலைவராகப் பணியாற்றினார். அவர் பதவியில், பணத்தில், மோகத்தில் அல்ல; மாறாக, பாவத்தில் விழுந்து கிடந்த, வாழ்வில் வலுவிழந்த, ஆட்சிக்கு அடிமைகளாக்கப்பட்ட, அரை நிர்வாணமாக்கப்பட்ட, சமூகத்தில் ஓரம் தள்ளப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதை அரசியலாகக் கொண்டார்.
அரசியல்
என்றால் என்ன? அரசியல் தனிமனித மதிப்பை, பணவீக்கத்தை, அதிகார நாற்காலியை, இனம் சார்ந்த சார்பு நிலைகளைக் கொள்வது அல்ல; திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்ற
சுற்றுமடலில், “அனைவரும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள். நமது பணி பொதுப்பணி, அனைவரையும் சார்ந்த அனைவருக்குமான பணியாக இருக்கவேண்டும். அரசியல், பொதுநன்மைக்காக உழைக்கும் பணி, பிறரின் விருட்சத்திற்காகத் தன்னை உருக்கும் பணி” என்கிறார். ஒரு மனிதன்தான் உலகமா? ஒரு மனிதன் தன்னைச் சமூகத்தோடு பிணைத்து, சமூகப் பணிகளில் உட்புகுத்துகின்றபோது அவன் உலகம் ஆகிறான்.
ஏன்
அரசியல் வேண்டும்? அரசியலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பது, நமது உரிமையை இழிவுபடுத்துவது. மனிதன் பேச வேண்டிய இடத்தில் தன் வார்த்தைகளை வர்ணிக்கவில்லையென்றால், அவன் தன்னைத் தீவிரவாதத்திற்குச் சமப்படுத்திக் கொள்வதாகும். நாம் அரசியலில் பங்கேற்கவில்லை என்றால், நமது சுதந்திரங்களை நம்மிடமிருந்து பறிகொடுப்பதாகும். நீதியான சமூகத்தை வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்செல்ல அரசியலில் நம்மைக் கையளிப்பது மிக அவசியம். இதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். இயேசு எப்பொழுதும் மக்கள் மத்தியில் வாழ்ந்தார். அவர் தம்மை இனம் கடந்து தேடலில் அடையாளப்படுத்திக்கொண்டார்.
அவர்தம் குருதியைத் தமக்காக, இனத்திற்காக, மதத்திற்காகச் சிந்தவில்லை; மாறாக, மானுட மனத்திற்காகச் சிந்தினார். இயேசுவின் ஆட்சிப் பணி, அரசியல் பணி மதம் சார்ந்த கொள்கை அல்ல; மாறாக, மனம் சார்ந்த கொள்கையாக இருந்தது. ஆகவேதான், இயேசு ‘கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும், சீசருக்குரியதைச் சீசருக்கும்...’ என்று தம்மை மனுக்குலத்தின் பங்காளியாக அடையாளப்படுத்தினார்.
2026-இல் தமிழ்நாட்டில்
‘யார் தலைமை?’ என்பதில் அனைவருக்கும் ஆவல். ஆனால், அதில் தனது உரிமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அச்சம், எதிர்மறை எண்ணங்கள், இனம்சார் கொள்கைகள் நம்மை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை விடுத்து, என்னால் முடிந்ததை ஏன் நான் செய்யவில்லை? என்ற எண்ணத்தைக் கொள்வோம். ஒரு சமூகம் வளர்ச்சிபெற வேண்டும்; நீதி அனைவருக்கும் சமம் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் களம் அறத்தின் களமாக உருவெடுக்க வேண்டும். அறம் அன்பையும் அமைதியையும் இந்நாட்டிற்கும் வீட்டிற்கும் அளிக்கும் அமுத சுரபி ஆகும்.